Sunday, December 9, 2012

நிலமெல்லாம் ரத்தம் - 8


8] யூதப்புரட்சி

யூதர்கள் அதிகம் வாழ்ந்த பாலஸ்தீன், எகிப்து, லிபியா, சிரியா, ஈராக் போன்ற நாடுகள் அன்றைக்கு ரோமானியப் பேரரசின் அங்கங்கள். ரோம் சக்ரவர்த்தியின் பிரதிநிதியாக கவர்னர் ஒருவர் அந்தப் பகுதிகளை ஆண்டுவருவார். ஒரு பேச்சுக்கு அவர் மன்னர் என்று உள்ளூர் மக்களால் அழைக்கப்பட்டாலும் அவர் கவர்னர்தான். அதிகாரம் என்று எதுவும் பிரமாதமாகக் கிடையாது. கவர்னர்களுக்கு எந்தக் காலத்தில், எந்த தேசத்தில்தான் அதிகாரம் இருந்திருக்கிறது? ரோம் தலைமையகம் எடுக்கும் முடிவை அறிவித்துச் செயல்படுத்துவதுதான் அவர் வேலை. தவிரவும், புரட்சிகள் ஏதுமற்ற காலகட்டத்தில் உண்மையிலேயே அவர்களுக்கு வேலையும் கிடையாது. கொலுமண்டபத்தில் கச்சேரிகள் கேட்டுக்கொண்டு, நடனங்களை ரசித்துக்கொண்டு ஒரு மாதிரி உல்லாசமாகப் பொழுதைக் கழித்திருப்பார்கள் போலிருக்கிறது.
அதுவும் நீண்டநெடுங்காலம் போராடிவிட்டு, திடீரென்று அமைதியாகி, நாற்பத்தைந்து வருடங்கள் அமைதியைத் தவிர வேறொன்றையும் நினைத்துக்கூடப் பார்க்காமல் இருந்த யூதர்கள் விஷயத்தில் அவர்களுக்குத் துளி சந்தேகமும் எழவில்லை. திடீரென்று அவர்கள் புரட்சியில் இறங்கக்கூடும் என்று யாரும் நினைத்துப் பார்த்திராததால் உரிய ஆயத்தங்கள் ஏதும் செய்திருக்கவில்லை. ஆனால், அப்படியரு தருணத்துக்காகத்தான் அந்த நாற்பத்தைந்து வருடங்களுமே யூதர்கள் தவமிருந்திருக்கிறார்கள். யாரும் எண்ணிப்பார்க்க முடியாத தருணம். யாரும் ஆயத்தமாக இல்லாத நேரம். யாரும் சிந்திக்கக்கூட அவகாசம் இல்லாத ஒரு பொழுது. அப்படித்தான் வெடித்தது யூதப்புரட்சி.
முதலில் எகிப்திலும் லிபியாவிலும் அது ஆரம்பித்தது. அந்தப் பகுதிகளை ஆண்டுவந்த ரோமானிய ஆட்சியாளர்கள், என்ன நடக்கிறது என்று சுதாரிப்பதற்குள் ஏராளமான இழப்புகளைச் சந்திக்க வேண்டிவந்தது. படைகள் சின்னாபின்னமாயின. ரோமானிய வீரர்கள் துரத்தித்துரத்தி அடிக்கப்பட்டார்கள். இங்கொன்றும் அங்கொன்றுமாக சிறு கிராமங்களையும் நகரங்களையும் யூதர்கள் வளைத்து, ரோமானிய வீரர்களை விரட்டியடித்து, கைப்பற்றிக்கொண்டுவிடுவார்கள். பிறகு, கைப்பற்றிய நிலப்பகுதியைப் பாதுகாக்கும் விதமாகச் சுற்றி வளைத்து வியூகம் அமைத்து, அப்படியே மேலும் முன்னேறி, அடுத்த இலக்கைத் தாக்குவார்கள்.
ரோமானிய அரசால் முதலில் இந்தத் திடீர் எழுச்சியைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. ஏனெனில், எந்த ஒரு தனி புரட்சிக்குழுவும் போராட்டத்தை நடத்தவில்லை. மாறாக, ஒட்டுமொத்த யூதர்களும் இணைந்து போராடிக்கொண்டிருந்தார்கள். எல்லோருமே தளபதிகள். எல்லோருமே சிப்பாய்கள். அப்படியரு இணக்கமான மன ஒருங்கிணைப்பு உலக சரித்திரத்தில் வேறெந்தப் பகுதி மக்களிடமும், எந்தக் காலத்திலும் இருந்ததில்லை என்று வியக்கிறார்கள் சரித்திர ஆசிரியர்கள். எகிப்தில் புரட்சி உச்சகட்டத்தை அடைந்துவிட்டது என்கிற செய்தி மத்தியக்கிழக்கில் பரவிய வேகத்தில் சைப்ரஸ் தீவில் வாழ்ந்துகொண்டிருந்த யூதர்கள், அங்கே இருந்த கிரேக்க ஆட்சியாளரை எதிர்த்துப் புரட்சி செய்யத் தொடங்கினார்கள். ஏற்கெனவே கடும் கோபத்தில் இருந்த ரோமானியப் பேரரசு, இம்முறை, தானே வலிந்து போய் கிரேக்க அரசுக்கு உதவி செய்வதாக அறிவித்து, புரட்சியாளர்களை ஒடுக்க ஆரம்பித்தது. நடந்த களேபரங்கள் ஏற்படுத்தியிருந்த அதிர்ச்சி அப்போது சற்றுத் தணிந்திருந்தது. ரோமானிய வீரர்கள் சுதாரித்துக்கொண்டுவிட்டார்கள்.
"புரட்சியாளர்கள் என்று தேடாதே. யூதனா என்று பார்" - இதுதான் அவர்களுக்கு இடப்பட்டிருந்த கட்டளை. ஆகவே, ஓட ஓட விரட்டினார்கள். விரட்டி விரட்டிக் கொன்றார்கள். ஒரு மாபெரும் மரணத் திருவிழாவையே நடத்தி, வெறி தணிந்த ரோமானியப்படை, போனால் போகிறதென்று மிச்சமிருந்த கொஞ்சம் யூதர்களை நாடு கடத்திவிட்டுத் தன் ஊருக்குப் போய்ச் சேர்ந்தது. மறுபுறம் மெசபடோமியா என்று அழைக்கப்பட்ட இன்றைய ஈராக்கில் புரட்சியில் ஈடுபட்டிருந்த யூதர்கள், அங்கிருந்த ரோமானிய கவர்னரை விரட்டிவிட்டு, ஆட்சியையே பிடித்துவிட்டார்கள். எகிப்திலும் லிபியாவிலும் கூட அப்படியானதொரு சந்தர்ப்பம் மிக விரைவில் அமைந்துவிடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பிரமாண்டமான ரோமானியப்படை, அதன் முழு அளவில் வந்திறங்கி, கிளர்ச்சியாளர்களை ஒடுக்க ஆரம்பித்தபோது நிலைமை அப்படியே தலைகீழாகிவிட்டது. போராடும் தீவிரமும் சுதந்திர தாகமும் இருந்தாலும் யூதர்களை ஒரு ராணுவமாக வழிநடத்தச் சரியான தலைமை இல்லாததே இந்த வீழ்ச்சிக்குக் காரணமாக இருந்தது. கிட்டத்தட்ட இரண்டாண்டு காலத்துக்கு மேலாக அவர்களால் புரட்சியைத் தொடர்ந்து நடத்தவும், தாக்குப்பிடிக்கவும் முடிந்தபோதிலும் திட்டம் முழுமையாக நிறைவேறவில்லை. உண்மையில், மத்திய ஆசியாவிலும் ஒருசில ஆப்பிரிக்க நாடுகளிலும் ரோமானிய ஆளுகைக்கு உட்பட்டு வாழ்ந்த யூதர்கள், தம் ஆட்சியாளர்களுக்கு எதிராகப் புரட்சி செய்து, ரோமானியப்படைகளை ஒழித்துக்கட்டி, ஒரு பரந்த யூத சாம்ராஜ்யத்தை நிறுவுவது என்றதொரு மாபெரும் கனவைத்தான் அந்த நாற்பத்தைந்து ஆண்டுகளாகப் பயிரிட்டு வந்தார்கள். அப்படியரு யூதப்பேரரசு உருவாகிவிட்டால், அதற்கென்று தனியரு ராணுவம் ஏற்படுத்தப்பட்டுவிட்டால், பின்னால் யார் படையெடுத்தாலும் சமாளிப்பது சிரமமல்ல என்று நினைத்தார்கள். ஜெருசலேமைத் தலைநகராகக் கொண்ட யூத சாம்ராஜ்ஜியம். வளமான சரித்திரத்தையும் அழகான புனிதத்தையும் அடித்தளமாக இட்டு, மேலே ஒரு சாம்ராஜ்யம். ஒன்றே மதம். ஒரே கடவுள். ஒரு பேரரசு. ஒருங்கிணைந்த குடிமக்கள். ஹீப்ரு என்கிற புராதன மொழி. மதத்தின் அடியற்றிய ஆட்சி. மேலான நிம்மதி. இந்தக் கனவின் மையப்புள்ளி, ஜுதேயா என்கிற இஸ்ரேலில் இருந்தது. ஜெருசலேம் என்கிற புனித பூமியை ஒரு பகுதியாகக் கொண்ட இஸ்ரேல் - சுற்றுவட்டாரமெங்கும் புரட்சியில் ஈடுபட்டுக் கொந்தளித்துக்கொண்டிருந்தபோதும் அமைதியைக் கலைக்காமல் அதே சமயம் ஒரு மாபெரும் பூகம்பத்தை உற்பத்தி செய்வதற்கான முகூர்த்தத்தை எதிர்நோக்கிக்கொண்டிருந்த இஸ்ரேல். கி.பி. 132 - ல் அது நடந்தது, எகிப்தில் புரட்சி வெடித்து சரியாகப் பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகு. ஒரு சரியான தளபதி இல்லாத காரணத்தினால்தானே யூதர்களின் புரட்சிகள் அடக்கி ஒடுக்கப்பட்டன? 
இப்போது அவர்களுக்கும் ஒரு தளபதி கிடைத்தார். அவர் பெயர் சிமோன் பார் கொச்பா. (Simon Bar Kochba) பல நூற்றாண்டுகள் வரை யூத குலம் தம்மை மீட்க வந்த இன்னொரு தேவதூதராகவே அவரைக் கொண்டாடிக்கொண்டிருந்தது. வீரம் என்றால் அது. எழுச்சி என்றால் அது. உணர்ச்சிகரமான பேச்சு என்றாலும் அவருடையதுதான். ஆனால், வெறும் பேச்சுப் போராளியல்ல அவர். செயலில் அவரது உயிர் இருந்தது. சிந்தனை முழுவதும் சுதந்திர யூதப்பேரரசு பற்றியதாகவே இருந்தது. சிமொன் பார்கொச்பா, கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்ட தளபதி. போராட்ட வெறியை மக்களிடையே எழுப்புவதற்கு அவர் கையாண்ட உபாயங்கள் கொஞ்சம் நாடகத்தனம் பொருந்தியவை என்றாலும், யூதர்களுக்கு அவர் செய்ததெல்லாமே இறைக்கட்டளையின்படி செய்யப்பட்டவையாகவே தோன்றின. உதாரணமாக, பார்கொச்பாவின் ராணுவத்தில் சேருவதென்றால், முதல் நிபந்தனை - யூதர்கள் தம் தியாகத்தின் அடையாளமாகக் கைவிரல்களில் ஒன்றை வெட்டிக்கொள்ளவேண்டும்! பின்னால் போர்க்களத்தில் உயிரே போகக்கூடிய சூழ்நிலை வரலாம். அதற்குத் தயாரானவர்கள்தானா என்பதை அந்த விரல் தியாகத்தின் மூலமே அவர் ஒப்புக்கொள்வார். கையை நீட்டிக் காட்டி, யாராவது வெட்டுவார்களா என்றால் அதுவும் இல்லை. சம்பந்தப்பட்டவர்கள், பார்கொச்பா முன்னிலையில் ஒரு கை விரலை நீட்டி, மறு கையால் தானே சொந்தமாக வெட்டிக்கொள்ளவேண்டும். விரல் துண்டாகி விழுந்து, ரத்தம் சொட்டும்போதும் முகத்தில் எவ்வித உணர்ச்சி மாறுதலையும் காட்டாதிருக்க வேண்டும். மனத்தைப் பாறையாக்கிக் கொண்டவர்களால்தான் ஒரு ஜீவ மரணப் போராட்டத்தில் பங்கெடுக்க முடியும் என்பது அவரது கருத்து. இன்னொரு உதாரணமும் சொல்லலாம். புரட்சி குறித்தும் சுதந்திர யூத சாம்ராஜ்யம் குறித்தும் தான் பேசுகிற பேச்சுகளெல்லாம் தீப்பிழம்பு போன்றவை என்பதை நேரடி அர்த்தத்தில் நிரூபிக்கும் விதமாக, பழுக்கக்காய்ச்சிய மெல்லிய இரும்புத் தகடொன்றைத் தன் பற்களுக்கிடையில் பொருத்திக்கொண்டுதான் அவர் சொற்பொழிவை ஆரம்பிப்பார்! தகிக்கும் தகடு நாக்கில் பட்டுப் பழுத்து, சொற்கள் தடுமாறும்போது அவரது சொற்பொழிவின் சூடு மேலும் அதிகரிக்கும். வலி தாங்காமல் கண்ணில் நீர் பெருகினாலும் அவரது சொற்பொழிவு நிற்காது. ஒரு சமயம், இரு சமயங்களிலல்ல. தம் வாழ்நாள் முழுவதும் சிமொன் பார்கொச்பா இப்படியான உணர்ச்சிக் கொந்தளிப்புகளுடன்தான் வாழ்ந்தார். யூதர்களுக்கான விடுதலையைக் கடவுள் தருவார் என்கிற ஜுதேயா யூதர்களின் நம்பிக்கையை அவர் முற்றிலுமாக நிராகரித்தார். "நீங்கள் போராடுங்கள். உங்களுக்குச் சுதந்திரம் வேண்டுமென்றால் நீங்கள்தான் போராடியாகவேண்டும். கடவுள் உதவமாட்டார்; உங்கள் பின்னால் வரவும் மாட்டார். சுதந்திரத்தைப் பொறுத்த அளவில் போராட்டம்தான் கடவுள்” என்பது அவரது பிரசித்திபெற்ற போதனை.
இஸ்ரேலில் வெடித்த புரட்சி சாதாரணமானதல்ல. மற்ற நாடுகளில் நடத்தப்பட்ட புரட்சிகளுடன் அதனை ஒப்பிடக்கூட முடியாது. ஒரு பூகம்பமே எழுந்தது போலானது ஜுதேயா. ரோமானிய ஆட்சியாளரையும் அவரது படைகளையும் துவம்சம் செய்துவிட்டார் கொச்பா. இரவெல்லாம், பகலெல்லாம், நாளெல்லாம், வார, மாதங்களெல்லாம் யுத்தம். யூதர்கள் உணவு, உறக்கம் குறித்துச் சிந்திக்கவே கூடாது என்று கண்டிப்பாகச் சொல்லியிருந்தார் கொச்பா. அவர்களுக்கான சரியான முன்னுதாரணமாகத் தாமே இருந்தார். பல வாரங்கள் ஒருகை உணவோ, ஒருதுளி நீரோகூட அருந்தாமல் அவர் இருந்திருக்கிறார். அவர் எப்போது உறங்குவார், எப்போது கண்விழிப்பார் என்று யாருமே பார்த்ததில்லை. ஜுதேயாவில் இருந்த ரோமானியப் படையை விரட்டியடித்து, அங்கே ஆட்சியை அமைக்க, கொச்பாவுக்கு அதிகக் காலம் ஆகவில்லை. புயல் மாதிரி மோதி, வென்று, அதிகாரத்தைக் கைப்பற்றிவிட்டார்கள் யூதர்கள். யூதர்களின் எழுச்சியின் அடையாளமாக விளங்கிய அந்த 132 - ம் வருடத்தையே யூத நாள்காட்டியில் முதல் வருடமாகக் குறித்தார் கொச்பா. சுதந்திர யூத சாம்ராஜ்யத்தின் முதல் செங்கல் நடப்பட்டுவிட்டதை ஓர் உணர்ச்சிமயமான கடிதத்தின் மூலம் நாட்டு மக்களுக்கு அறிவித்துவிட்டு, யூதர்களுடைய சுதந்திரத்தின் அடையாளமாகச் சில நாணயங்களையும் அவர் வெளியிட்டார். (அதிர்ஷ்ட வசமாக அவரது கடிதம் ஒன்றின் சில பகுதிகளும் அவர் வெளியிட்ட நாணயங்களும் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. இன்றும் நமக்குக் காணக்கிடைக்கின்றன.)
அப்போது ரோமானியச் சக்ரவர்த்தியாக இருந்தவர் ஹேட்ரியன் (Hadrian). ஜுதேயா கையைவிட்டுப் போய்விட்டது என்பதை அவரால் ஜீரணிக்கவே முடியவில்லை. யூதர்கள் இனி காலகாலத்துக்கும் எழ முடியாதவாறு ஏதாவது செய்யவேண்டும் என்று முடிவு செய்து, ஒரு படையை அனுப்பினார். முப்பத்தைந்தாயிரம் பேர் அடங்கியதொரு மாபெரும் படை. கொச்பாவின் படையில் அப்போது இருந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்துக்கும் குறைவு. மிகவும் கோரமாக நடந்து முடிந்த அதனை யுத்தம் என்றே சொல்லமுடியாது. படுகொலை என்று குறிப்பிடுவதுதான் சரி. ஏனெனில் ரோமானியப்படை, கொச்பாவின் சிறிய படையை ஓரிரு மணி நேரங்களுக்குள் அடித்துத் துவைத்துக் காயப்போட்டுவிட்டது. அப்புறம், ஜெருசலேம் நகரில் வசித்துவந்த அத்தனை யூதர்களையும் நடுச்சாலைக்கு இழுத்து வந்து வெட்டத் தொடங்கினார்கள். ஒரு உயிர் கூடத் தப்பி விடாதபடிக்குப் பார்த்துக்கொண்டார்கள். எதிர்த்து நிற்கக்கூட யூதர்களுக்கு அவகாசம் தரப்படவில்லை. ஆண், பெண் வித்தியாசம் பார்க்கப்படவில்லை. 
அந்தச் சம்பவத்தின் போது சுமார் பத்தாயிரம் யூதர்கள் கொல்லப்பட்டார்கள் என்றும் ஒரு லட்சம் யூதர்கள் கொல்லப்பட்டார்கள் என்றும் இருவிதமான கருத்துக்கள் இருக்கின்றன. இரண்டுக்குமே சரியான ஆதாரம் கிடையாது என்றபோதும், ரோமானியப்படை திரும்பிப் போகும்போது ஜெருசலேமில் ஒரு யூதர்கூட உயிருடன் இல்லை என்பது மட்டும் உண்மை. கொச்பா கைது செய்யப்பட்டார். கி.பி.135 - ல் அவர் மரணமடைந்தார். (காவலில் இருந்தபோதே மரணமடைந்தாரா, வேறு விதமாக இறந்தாரா என்பது பற்றிய திட்டவட்டமான ஆதாரங்கள் இல்லை.) யூதர்கள் மீண்டும் அநாதை அடிமைகளானார்கள்.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 19 டிசம்பர், 2004





No comments:

Post a Comment