13] நபியாக நியமிக்கப்படல்
முகம்மதுக்கு முன்பு இறைத் தூதர்களாக இவ்வுலகில் அறியப்பட்டவர்கள் மொத்தம் இருபத்தைந்து பேர். அவர்களுள், முதல் மனிதர் ஆதாம் தொடங்கி, இயேசு வரையிலான பதினேழு பேரைப் பற்றிய விரிவான அறிமுகங்கள் இன்று நமக்குக் கிடைக்கின்றன. இறைவனுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு பேசியவர்கள், இறைவனாலேயே நல்வழி காட்டப்பட்டவர்கள் ஒருவகை. இறைவனிடமிருந்து மக்களுக்கு வேதத்தைப் பெற்று அளித்தவர்கள் இன்னொரு வகை.முகம்மதுக்கு முன்னர் இப்படி வேதம் அருளப்பட்ட சம்பவம் மட்டும் மூன்றுமுறை நடந்திருக்கிறது. முதலாவது, மோஸஸுக்கு அருளப்பட்ட "தோரா" (குர்ஆன் இதனை "தவ்ராத்" என்று அழைக்கிறது. யூதர்களின் வேதமாக இருப்பது.) அடுத்தது, தாவீத் என்கிற டேவிடுக்கு அருளப்பட்ட சங்கீதம். (Psalm என்று ஆங்கிலத்திலும் ஸபூர் என்று குர்ஆனிலும் குறிக்கப்படுவது. பைபிளின் பழைய ஏற்பாட்டில் இதனைப் பார்க்கமுடியும்.) மூன்றாவதாக, இயேசுவுக்கு அருளப்பட்ட "இன்ஜீல்" எனப்படும் Gospel).இயேசுவுக்குச் சுமார் அறுநூறு ஆண்டுகளுக்குப் பிறகு "இறைத்தூதர்" (நபி) என்று அடையாளம் காட்டப்பட்டவர், முகம்மது.முகம்மதுக்கும் மற்ற இறைத்தூதர்களுக்குமான வித்தியாசங்கள் பல. வேதம் அருளப்பட்ட விதத்தால் மட்டுமல்ல. தாம் ஓர் இறைத்தூதர் என்பதை உணர்ந்த வகையிலேயே முகம்மது மிகவும் வித்தியாசமானவர். மற்ற தூதர்கள் அனைவரும் எதிர்பாராத ஒரு கணத்தில் ஆசீர்வதிக்கப்பட்டதன் பேரில் தம்மைத்தாமே இனம் கண்டு கொண்டு விட்டார்கள். முகம்மது மட்டும், வருடக்கணக்கில் போராடி, உள்ளும் புறமும் ஏராளமான வேதனைகளை அனுபவித்து, ஆன்மிகச் சாதனை முயற்சிகளின் விளைவாக எத்தனையோ உடல் மற்றும் மன உபாதைகளை அனுபவித்து, போராடிப் போராடி, இறுதியில்தான் தாம் "அனுப்பப்பட்டிருப்பதன்" காரணத்தைக் கண்டறிந்தார்.இந்த ஆன்மிகக் காரணங்கள் மட்டுமல்ல; மற்ற இறைத்தூதர்கள் அனைவரும் ஆன்மிகவாதிகளாக மட்டுமே அடையாளம் காணப்பட்ட நிலையில், முகம்மது ஒருவர்தாம் மக்கள் தலைவராகவும், மத்திய ஆசியாவின் தன்னிகரற்ற அரசியல் வடிவமைப்பாளராகவும் இருந்திருக்கிறார். அரேபியர்களின் வாழ்வில் சுபிட்சம் என்பது முதல்முதலாக எட்டிப்பார்க்கத் தொடங்கியதே முகம்மதுவும் அவரது தோழர்களும் வரிசையாக ஆட்சிப்பீடத்தில் அமர்ந்து (அவர்கள் கலீஃபாக்கள் எனப்படுவார்கள்) ஆளத் தொடங்கிய பிறகுதான். அரேபியர்களின் சரித்திரத்தில் முகம்மது ஓர் அத்தியாயம் அல்ல. மாறாக, அவர்களது சரித்திரத்தின் மையப்புள்ளியே அவர்தான். முகம்மதை மையமாக வைத்துத்தான் அவருக்கு முன், பின் என்று நம்மால் அரபுகளின் சரித்திரத்தை ஆய்வு செய்ய முடியும்..இருபத்தைந்து வயதில் முகம்மதுக்குத் திருமணமானது. அவரைக் காட்டிலும் வயதில் மிகுந்த, அவரைக் காட்டிலும் பொருளாதார அந்தஸ்தில் உயர்ந்த, கதீஜா என்கிற விதவைப் பெண்மணி அவரை விரும்பி மணந்துகொண்டார். முகம்மதின் நேர்மையும் கண்ணியமும் அவரைக் கவர்ந்து, அப்படியரு முடிவுக்கு வரத் தூண்டியது.திருமணத்துக்குப் பின், ஒரு கணவராகத் தம் கடமைகள் எதிலிருந்தும் விலகாமல், அதே சமயம், ஆன்மிகச் சாதனைகளில் நாட்டம் மிகுந்தவராக அடிக்கடி தனிமை நாடிப் போகக்கூடியவராகவும் இருந்திருக்கிறார் முகம்மது. மெக்கா நகரிலிருந்து சிறிது தொலைவில் இருந்த ஹிரா என்கிற குன்றுப் பகுதிக்குத்தான் அவர் தியானத்தின் பொருட்டு அடிக்கடி செல்வது வழக்கம். ஒருநாள், இருநாளல்ல... வாரக்கணக்கில், மாதக்கணக்கில்கூட அவர் அங்கே தன்னிலை மறந்து தியானத்தில் இருப்பது வழக்கம்.கிளம்பும்போது கொஞ்சம் உணவுப் பொருள்களை மட்டும் எடுத்துச் செல்வார். குடிக்கக் கொஞ்சம் தண்ணீர். அவருக்கு உடைமை என்று வேறு ஏதும் கிடையாது. தியானத்தில் உட்கார்ந்தால், எப்போது எழுவார், எப்போது எடுத்துச் சென்ற உணவைச் சாப்பிடுவார் என்பதற்கெல்லாமும்கூட உத்தரவாதமில்லை. சில சமயம் சாப்பிடுவார். சாப்பிடாமலேயே வாரக்கணக்கில் கண்மூடிக் கிடந்ததும் உண்டு. பல சமயங்களில் வெளியே போன கணவர் நாள் கணக்கில் திரும்பி வராததைக் கண்டு கதீஜா ஆட்களை அனுப்பித் தேடி அழைத்து வரச் சொன்னதும் உண்டு.ஆனால், முகம்மதின் ஆன்மிகச் சாதகங்களுக்கு கதீஜாவின் பூரண ஒத்துழைப்பு இருந்திருக்கிறது. செல்வக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்து, வசதியான வாழ்க்கை படைத்தவராக இருந்தபோதிலும் தம் கணவரின் ஆன்மிக நாட்டத்தைப் புரிந்துகொள்ளக்கூடியவராக அவர் இருந்திருக்கிறார். அவரைத் தொந்தரவு செய்யக்கூடாது என்கிற எண்ணம் அவருக்கு இருந்திருக்கிறது. முகம்மதின் வாழ்க்கையில் இது மிக முக்கியமானதொரு கட்டம். எப்போதும் ஹிரா மலைப்பகுதிக் குகைகளின் இருளுக்குள் கரைந்து, தியானத்தில் லயித்திருக்கும் முகம்மதுக்கு, எப்போதாவது ஒரு பிரமாண்டமான ஆகிருதி படைத்த ஒளியுருவம் கண்ணெதிரே தோன்றும். யாரென்று அடையாளம் தெரியாது. பார்த்த கணத்தில் உடல் தூக்கிப் போட்டு, பதற்றம் மிகுந்து, பேச்சற்றுச் சமைந்துவிடுவார். அந்த உருவம் யார் என்று அவரால் அடையாளம் கண்டுகொள்ள முடிந்ததில்லை. அது தன்னை ஏன் நெருங்கி வருகிறது என்றும் புரிந்ததில்லை. முதலில் கொஞ்சம் பயந்தார். இன்னார் என்று இனம் காண முடியாததால் ஏற்பட்ட பயம்.பலநாள்கள் இந்தப் போராட்டம் அவருக்குத் தொடர்ந்தது. உடலும் மனமும் மிகவும் களைப்புற்று, பதற்றம் மேலோங்கியவராக இருந்தவரை, அவரது மனைவியான கதீஜாதான் அவ்வப்போது தேற்றி, தியானத்தில் உற்சாகம் கொள்ளச் செய்து வந்திருக்கிறார்.மிக நீண்ட போராட்டத்துக்குப் பிறகுதான், தன்னை நோக்கி வந்த அந்த ஒளியுருவத்தை முகம்மதால் இனம்கண்டுகொள்ள முடிந்திருக்கிறது.அந்த மாபெரும் உருவம், ஒரு வானவருடையது. வானவர் என்றால் தேவர் என்று கொள்ளலாம். இறைவனின் தலைமைத் தளபதி என்று வைத்துக்கொள்ளலாமா? தவறில்லை. அவரது பெயர் ஜிப்ரீல்.முந்தைய "இறைத் தூதர்கள்" அனைவருக்குமேகூட இந்த ஜிப்ரீலின் மூலம்தான் தன் செய்தியை இறைவன் சொல்லி அனுப்பினான் என்பது இஸ்லாமியரின் நம்பிக்கை.தன்னை வருத்தி, தியானத்தில் தோய்ந்து, ஆன்மிகச் சாதனைகளின் உச்சத்தை முகம்மது தொட்டுவிட்டிருந்த நேரம் அது. அதுவரை தூர இருந்து அவருக்கு அச்சமூட்டிக்கொண்டிருந்த ஜிப்ரீல், அப்போது நெருங்கிவந்து ஆரத் தழுவினார்."ஓதுவீராக!" என்று முதல்முதலாக ஓர் இறைக்கட்டளையை வெளிப்படுத்தினார்.ஆனால் முகம்மதுக்கு என்ன பதில் சொல்லுவது என்று விளங்கவில்லை. அவர் எழுதப்படிக்கத் தெரியாதவர். பள்ளிக்கூடங்களுக்குச் சென்றவரல்லர். நல்லவர், நேர்மையாளர், ஏழைகளுக்காக மனமிரங்குபவர், ஒட்டுமொத்த மெக்கா நகரவாசிகளின் நல்லபிப்பிராயத்துக்குப் பாத்திரமானவர் என்றாலும், படித்தவரல்லர். அரபியில் ஓர் அட்சரம்கூட அவருக்குத் தெரியாது. சுயமாக அல்ல; எதையும் படித்துக்கூட அவரால் ஓதமுடியாது!ஆனால் ஜிப்ரீல் தொடர்ந்து வற்புறுத்தினார். "ஓதுவீராக.""நான் எப்படி ஓதுவேன்?" என்று திரும்பவும் கேட்டார் முகம்மது. மூன்றாவது முறையாக "ஓதுவீராக" என்று உத்தரவிட்ட ஜிப்ரீல், முகம்மதை இறுகக் கட்டிப்பிடித்து, விடுவித்துப் பிறகு சொன்னார்:"உம்மைப் படைத்த இறைவனின் திருநாமத்தால் ஓதுவீராக. அவனே மனிதனை ரத்தக் கட்டியிலிருந்து படைத்தான். ஓதுவீராக. இறைவன் மாபெரும் கொடையாளி. அவனே எழுதுகோலைக் கொண்டுவந்து கற்றுக்கொடுத்தான். மனிதன் அறியாதவற்றைக் கற்றுத்தருபவனும் அவனே.""ஜிப்ரீல் சொல்லச்சொல்ல, தன்வசமிழந்த முகம்மது இவ்வசனங்களைக் கேட்டு கூடவே சொல்லிக்கொண்டு வந்தார். பின்னாளில் இச்சம்பவத்தை நினைவுகூர்ந்தவர், "அந்தச் சொற்கள் உச்சரிக்கப்பட்டதாக அல்ல; என் இதயத்தின்மீது எழுதப்பட்டதாக உணர்ந்தேன்” என்று அவர் சொல்லியிருக்கிறார்.விடைபெறும் தருணத்தில்தான் ஜிப்ரீல் தன் வருகையின் நோக்கத்தை அவருக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். "ஓ, முகம்மது! நீர் அல்லாவின் தூதராவீர். நானே ஜிப்ரீல்.""இப்படியரு சம்பவம் நடந்தது என்று சொன்னால் யார் நம்புவார்கள்? அதுவும் "காட்டரபிகளின்" சமூகத்தில்!ஆனால், முகம்மதுவின் அனுபவத்தை அவரது மனைவி கதீஜா முழுமையாக நம்பினார். நம்பமுடியாத அளவுக்கு வியப்பூட்டும் பெண்மணியாகத் திகழ்ந்தவர் அவர். தமது கணவர் ஓர் இறைத்தூதர் என்பதை நம்புவதில் அவருக்குச் சிறு தயக்கம் கூட இருக்கவில்லை. அவரது அந்த ஆழமான நம்பிக்கை, இன்னும் ஆழமாக வேரூன்றும் விதத்தில் ஒரு சம்பவம் நடந்தது.கதீஜாவின் ஒன்றுவிட்ட சகோதரர் ஒருவர் இருந்தார். மிகவும் வயதான அவரது பெயர் வரகாஹ் (Waragah) என்பது. ஹிரா குகையில் தியானத்தில் இருந்த தம் கணவருக்கு ஜிப்ரீல் தரிசனமாகி, அவரை ஓர் இறைத்தூதர் என்று அறிவித்துப் போனதை வரகாஹ்விடம் கதீஜா சொன்னபோது, "சந்தேகமே வேண்டாம். முகம்மது ஒரு நபிதான். அவருடன் வந்து பேசியது ஜிப்ரீல் என்கிற வானவர்தாம்” என்று கூடுதல் நம்பிக்கை அளித்தார் அவர். கண் தெரியாத, பல வேதங்களில் பாண்டித்தியம் பெற்ற ஒரு கிறிஸ்துவர் அவர்.ஜிப்ரீல் என்கிற வானவரின் வழியாக முகம்மதுக்கு இறைவன் அளித்த குர்ஆன் ஒரே நாளில், ஒரே பொழுதில் மொத்தமாக அளிக்கப்பட்ட வேதமல்ல. கிட்டத்தட்ட இருபத்துமூன்று ஆண்டுகால இடைவெளியில் பகுதி பகுதியாக, வரிசைகள் அற்று முன்னும் பின்னுமாக, வேறு வேறு சூழ்நிலைகளில், அந்தந்தக் காலகட்டத்தின் தேவையை அது எல்லா காலங்களுக்கும் பொருந்துமா என்கிற பார்வையை உள்ளடக்கி அருளப்பட்டது.வேதவரிகள் தமக்குள் இறங்குவது பற்றி முகம்மது சில நுணுக்கமான விவரங்களைத் தந்திருக்கிறார்."மணி ஓசையின் அதிர்வைப் போல் சமயத்தில் அவை என்னுள்ளே இறங்கும். மிகுந்த சிரமம் தரத்தக்க அனுபவம் அது. இறங்கிய வரிகளை நான் உணர்ந்து, புரிந்து கொள்ளத்தொடங்கும்போது அதிர்வின் வீச்சு குறைய ஆரம்பிக்கும். முற்றிலும் புரிந்துவிட்டவுடன் அதிர்வு நின்றுவிடும். சில சமயங்களில் ஜிப்ரீல் நேரடியாக வந்து உரையாடுவார். அவரது சொற்கள், அப்படியே உணர்வுகளாக என் மனத்தில் இறங்கித் தங்கும்.""ஒற்றுமையற்று, ஒழுக்கம் குலைந்து, இறைத்தன்மை உணராமல், தறிகெட்டு வாழும் அரபுக்களின் வாழ்க்கை நிலையை மாற்றி உயர்த்த இறைவனால் நியமிக்கப்பட்ட ஓர் ஊழியராகவே அவர் தம்மை உணர்ந்தார். துளி அகங்காரம் கிடையாது. பெருமையோ, வானவர் வந்து "இறைத்தூதர்" என்று அறிவித்துப்போன பெருமிதமோ, கர்வமோ கிடையாது. ஊழியன். வெறும் ஊழியன். இப்படித்தான் முகம்மது தம்மை இறுதிவரை கருதினார். தமது வாழ்நாளுக்குள் ஒட்டுமொத்த அரேபிய நிலப்பரப்பையும் இஸ்லாம் என்கிற மார்க்கத்தின் பக்கம் அழைத்துவந்து, நெறிப்படுத்தி, தன்னிகரற்ற கலீஃபாவாக ஆண்டு மறைந்தவர் அவர். ஆனால் இறுதிவரை கிழிந்த ஆடைகளை உடுத்தி, வறண்ட ரொட்டிகளை உண்டு, இளமையில் இருந்தமாதிரியேதான் இருந்தார். மனைவி கதீஜா, ஒரு செல்வப் பெண்மணிதான் என்றாலும், மனைவியுடன் இணைந்து மகிழ்ச்சியாக அந்தச் செல்வங்களை அள்ளி அள்ளி ஏழைகளுக்குத் தரத் தயாராக இருந்தாரே தவிர, தமக்கென்று ஒரு திர்ஹம் (வெள்ளிக்காசு) கூட அவர் எடுத்துக்கொண்டதில்லை.பாசாங்கற்ற இந்த எளிமைதான் முகம்மதின் மிகப்பெரிய பலமாக இருந்தது.முகம்மது, தாமொரு நபி என்று கண்டுகொண்டதும், முதல்முதலில் அதைத் தம் மனைவியிடம் தெரிவித்தார். அடுத்தபடியாக அவர் இதுகுறித்துப் பேசியது, வரகாஹ்விடம்.இருவருமே அதை நம்புவதில் எந்தத் தயக்கமும் காட்டவில்லை. ஆனால் வரகாஹ் மட்டும் ஒரு விஷயம் சொன்னார்:"நான் நம்புகிறேன். ஆனால் நீங்கள் இம்மக்களால் பொய்யன் என்று தூற்றப்படுவீர்கள். கஷ்டப்படுத்தப்படுவீர்கள். ஏன், ஊரைவிட்டே துரத்தப்படுவீர்கள். அவர்கள் உங்களுடன் போரிடவும் வருவார்கள்..""வரகாஹ் சொன்னது சத்தியவாக்கு. அட்சரம் பிசகாமல் அப்படியேதான் நடந்தது.
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 6 ஜனவரி, 2005
No comments:
Post a Comment