Saturday, December 29, 2012

நிலமெல்லாம் ரத்தம் - 16


16] அபிசீனிய மன்னன் நஜ்ஜாஷி

ஆதிகாலத்தில் தமது சமூகத்தினரை விட்டுத் தனியே பிரிந்துபோன இளைஞர்கள் யார்? அவர்களின் பின்னணி என்ன? கிழக்கு, மேற்கு திசையெங்கும் பயணம் செய்து இரு எல்லைகளையும் தொட்ட பயணி யார்? அவரது சிறப்பு என்ன? ஆன்மா என்பது என்ன?யூத மதகுருமார்களின் இந்த மூன்று வினாக்களுக்கு முகம்மது நபி என்ன பதில் சொன்னார் என்பது ஒருபுறம் இருக்கட்டும். இந்தக் கேள்விகளிலிருந்து உங்களுக்கு ஏதாவது புரிகிறதா? மேலோட்டமாகப் பார்த்தால் முதல் இரு வினாக்களும் வெறும் சொற்களால் இட்டு நிரப்பப்பட்டவை போலத் தெரிகிறதல்லவா? உள்ளர்த்தங்கள் ஏதுமின்றி, வெறுமனே வம்புக்குக் கேட்கப்பட்டதுபோல!உண்மையில் யூத மதகுருமார்களுக்கு வம்பு நோக்கம் ஏதுமில்லை. அர்த்தங்கள் பொருந்திய இந்த வினாக்களுக்கான விடைகளை அவர்கள் நிச்சயம் அறிவார்கள். சர்வநிச்சயமாக முகம்மதுவுக்கு விடைகள் தெரிந்திருக்காதென்று அவர்கள் நம்பியதுதான் இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம்.ஏனெனில், முதல் இரு வினாக்களுமே சரித்திரம் தொடர்பானவை. முகம்மது நபியின் காலமான கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்கு இது சரித்திர வினா என்றால், இக்கேள்விகளின் வயதை யூகித்துப் பார்க்கலாம். ஆதிகாலத்தில் பாதிக்காலம் அது. அதற்கும் முன்னால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்த சங்கதிகளை உள்ளடக்கிய வினாக்கள் அவை. அப்புறம், இருக்கவே இருக்கிறது ஆன்மா. இன்றைக்கு வரை அது என்ன என்கிற வினாவும், அதற்கான விடைதேடும் ஞானியரும் இருக்கவே செய்கிறார்கள்.ஆகவே, எப்படியும் முகம்மது உண்மையான இறைத்தூதர்தானா என்பது இக்கேள்விகளை அவர் எப்படி எதிர்கொள்கிறார் என்பதிலிருந்து தெரிந்துவிடும் என்று குறைஷிகளுக்கு நம்பிக்கை சொல்லி அனுப்பிவைத்தார்கள், யூத ரபிக்கள்.வினாக்களைப் பெற்றுக்கொண்ட குறைஷிகள், நேரே முகம்மதுவிடம் வந்து அவற்றை முன்வைத்து, பதில் சொல்லக் கோரினார்கள்.முகம்மது, படித்தவரல்லர். அதுவும் சரித்திரம்? வாய்ப்பே இல்லை. அந்த ஆன்மா? ம்ஹ§ம். அவர், இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மனிதர். சராசரி மனிதர். தமது உள்ளுணர்வின் அடிச்சுவட்டில் பயணம் செய்து, ஆன்மிகத்தின் சிகரங்களைக் கண்டடைந்தவர். முகம்மதுவின் ஆன்மிகம், தத்துவம் சார்ந்ததல்ல. தர்க்கங்களுக்கோ, குதர்க்கங்களுக்கோ அங்கே இடமில்லை. உள்ளார்ந்த பக்தியின் மிகக்கனிந்த நிலையில் லயித்துவாழ்ந்தவர். தாம், இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஒரு கருவி என்பதை அவர் மிகத்தெளிவாக உணர்ந்திருந்தார். தனக்கென்று எதுவும் சுயமாகத் தெரியாது என்பதை மட்டும் அவர் மிகத்தெளிவாகத் தெரிந்துவைத்திருந்ததுதான், மற்றவர்களுக்கும் அவருக்கும் உள்ள வித்தியாசம். ஜிப்ரீல் மூலம் இறைவன் தனக்களிக்கும் வேத வரிகளை அவர் தம் நண்பர்களுக்கு ஓதிக்காட்டி உணரச் செய்துகொண்டிருந்தார். தாம் படைக்கப்பட்டதன் நோக்கமே அதுதான் என்பதில் அவருக்கு ஒரு மழைத்துளி அளவு சந்தேகமும் இல்லை.ஆகவே, தம்முன் வைக்கப்பட்ட வினாக்களுக்கு மறுநாள் விடை சொல்லுவதாகச் சொல்லி, வந்தவர்களை அனுப்பிவைத்தார்.விபரீதம் இங்கேதான் வந்தது. அதெப்படி அவர் அத்தனை உத்தரவாதமாக, மறுநாள் விடை தருவதாகச் சொல்லிவிடமுடியும்? அவர் சொல்லிவிட்டார் என்பதனாலேயே அன்றிரவு ஜிப்ரீல் வந்து கேள்வித்தாளுக்கு விடைகள் எழுதிவைத்துவிட்டுப் போய்விடுவாரா என்ன?ஒருநாளல்ல; இரு நாட்களல்ல. அடுத்த பதினைந்து நாட்களுக்கு ஜிப்ரீல் வரவேயில்லை. கேள்வி கேட்ட குறைஷிகள் கைகொட்டிச் சிரிக்க ஆரம்பித்தார்கள். மிகவும் வருத்தமுற்றாலும், தன் இறைவன் ஒருபோதும் தன்னைக் கைவிடமாட்டான் என்பதில் மட்டும் முகம்மதுவுக்குத் தீராத நம்பிக்கை இருந்தது.அந்த நம்பிக்கைதான் ஜிப்ரீலை அம்முறை வரவழைத்தது என்று சொல்லவேண்டும். அதுவும் சும்மா வரவில்லை. மறுநாளே பதிலளிப்பதாக முகம்மது சொன்னது தவறு என்று கடிந்துகொள்ளும் விதத்தில் ஓர் இறைவசனத்தைத்தான் முதலில் சுமந்துகொண்டு வந்தார் ஜிப்ரீல். ("எந்த விஷயத்திலும் நிச்சயமாக நான் அதை நாளைக்குச் செய்வேன் என்று கூறாதீர்; இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் நாடினால் நாளைக்குச் செய்வேன் என்று கூறுவீராக." - அல் கஹ்ஃப், 18 : 23,24)அதன்பிறகு யூத ரபிக்கள் எழுப்பிய மூன்று வினாக்களுக்கும் விடைகள் வெளிவந்தன.முதலாவது, தமது சமூகத்தினரை விட்டுத் தனியே பிரிந்துபோன இளைஞர்களின் கதை. மத்திய ஆசியாவின் பிரசித்திபெற்ற புராணக் கதைகளுள் ஒன்று இது.அவர்கள் "இபேஸஸ் நித்திரையாளர்கள்" என்று அழைக்கப்பட்டவர்கள். கி.பி. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள். அந்தக் காலத்திலேயே உருவமற்ற ஒரே பரம்பொருளை வணங்கிவந்த அந்த இளைஞர்களுக்கு, அவர்களது சமூகத்தினராலேயே பெரும் பிரச்னை உண்டானது. உலகமே சிலை வழிபாட்டில் மூழ்கியிருக்க, இவர்கள் மட்டும் ஒரே இறைவன், உருவமற்ற இறைவன் என்று சொல்வதைப் பொறுக்காத மக்கள், அவர்களுக்குப் பல சங்கடங்களை விளைவிக்கத் தொடங்கினார்கள்.ஆகவே, தமது மக்களை விட்டு விலகி அவர்கள் ஒரு மலைக் குகைக்குள் சென்று வசிக்கத் தொடங்கினார்கள். (மொத்தம் எத்தனைபேர் என்று தெரியவில்லை.) அவர்களை அஸ்ஹாபுல்கஹ்ஃப் (குகைத் தோழர்கள் என்று அர்த்தம்) என்று அழைப்பார்கள். குகைக்குள்ளே போனவர்கள், தம்மை மறந்து உறங்கவும் ஆரம்பித்தார்கள். (குகைக்குள் சென்றவர்களை இறைவனே காதுகளைத் தட்டிக்கொடுத்து உறங்கச் செய்ததாக குர்ஆன் கூறுகிறது. ஆதாரம்: அல் கஹ்ஃப் 18:11) சுமார் முந்நூறு வருட உறக்கம்! பிறகு அவர்களது கண்விழிப்பை, அறியாமையில் மூழ்கிக் கிடந்த மக்களின் விழிப்புணர்வுக்கு உருவகமாக வைத்து நிறைவடையும் கதை அது.யூத ரபிக்களின் இரண்டாவது வினா, கிழக்கையும் மேற்கையும் பயணத்தால் அளந்த யாத்ரீகரைப் பற்றியது. அவரது பெயர், துல்கர்னைன். (இச்சொல்லுக்கு இரண்டு கொம்புகள் உடையவர் என்று பொருள்.)அவர்களது மூன்றாவது கேள்வி, ஆன்மா குறித்து. அரபு மொழியில் ரூஹ் என்றால் ஆன்மா. இக்கேள்விக்கு முகம்மதுவுக்குக் கிடைத்த பதில்: "அதைப்பற்றி மிகச் சொற்ப ஞானமே உங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. ஆதலால், அதன் நுட்பங்களை நீங்கள் அறிந்துகொள்ள முடியாது.""முகம்மது என்ன செய்வார்? இறைவசனம் அப்படித்தான் வந்தது! ஆகவே, தமக்கு வழங்கப்பட்ட இறைவசனங்களை அப்படியே அவர் குறைஷிகளிடம் பதில்களாகத் தெரிவித்துவிட்டார்.முகம்மது நபியின் பதில்களைக் கேட்ட யூத ரபிக்களுக்குப் பெருத்த தர்மசங்கடம் ஏற்பட்டது. நிச்சயமாக முகம்மதால் பதில் சொல்ல முடியாது என்று அவர்கள் நம்பிக்கொண்டிருந்தது ஒரு காரணம். அவர் பதில் தந்துவிட்டதால், அதைச் சரி என்றோ, சரியில்லை என்றோ ஒரு சொல்லில் சொல்லிவிடமுடியாதது இரண்டாவது காரணம்.முகம்மது ஒரு நபிதான் என்று அவர்கள் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். ஆயினும் அப்படி ஒப்புக்கொள்ள அவர்கள் மனம் சம்மதிக்கவில்லை. குறைஷிகளுக்கு, ரபிக்களின் இந்த இரண்டுங்கெட்டான்தனம் புரியவில்லை. "முகம்மது ஒரு நபிதான்" என்று ரபிக்கள் சொல்லிவிட்டால்கூட, அவர்கள் அதை ஒப்புக்கொள்ளத் தயாராக இல்லை! அவர்கள் வரையில் முகம்மது ஒரு போலி. பித்தலாட்டக்காரர். இந்த எண்ணத்தை மாற்றிக்கொள்ள அவர்கள் தயாராக இல்லை.ஆகவே, ரபிக்களின் கருத்தை அறிய மேலும் ஆர்வம் காட்டாமல் புறப்பட்டு விட்டார்கள்.இந்த மூன்று கேள்விகள் கேட்கப்பட்டு, முகம்மது அவற்றுக்குத் துல்லியமான பதில்களை அளித்த சம்பவத்தால் இரண்டு முக்கியமான விளைவுகள் ஏற்பட்டன. இஸ்லாமியர்களின் சரித்திரத்தில் அந்த இரண்டு விளைவுகளுமே குறிப்பிடத்தகுந்த பங்கு வகிப்பவை.முதலாவது, பாதி நம்பிக்கை, பாதி அவநம்பிக்கை கொண்டிருந்த அரேபியர்கள் பலர், முகம்மதை முழுவதுமாக நம்பி, அவர் காட்டிய பாதையில் நடக்க மனமுவந்து ஒப்புக்கொண்டார்கள். இதன்விளைவாக, அரேபியர்கள் பலர் முஸ்லிம் ஆனார்கள். பிரசாரங்களினால், கிறிஸ்துவம் பரவி கொண்டிருந்த அதே காலகட்டத்தில், இந்த ஒரு சம்பவத்தால், எவ்வித பிரசாரமும் இன்றி தானாகவே இஸ்லாம் பரவத் தொடங்கியது. முகம்மதுவைச் சந்திக்கவும் அவருடன் பேசவும் பல்வேறு தேசங்களிலிருந்தும் அரேபியர்கள் மெக்காவை நோக்கி வரத் தொடங்கியது இதன் பிறகுதான்.இரண்டாவது விளைவு, மிகவும் பாதகமானது. குறைஷிகள், முஸ்லிம்கள் மீது மிகக் கடுமையான வன்முறையைக் கட்டவிழ்த்து விட ஆரம்பித்தார்கள். ஒருவர் முஸ்லிம் என்று தெரிந்தாலே கட்டி வைத்துத் தோலை உரிக்கிற அளவுக்கு அவர்களது வன்முறை எல்லை கடந்துபோனது.ஆகவே, கொஞ்சமேனும் நிலைமை சீராகும் வரை முஸ்லிம்கள் வேறு தேசம் எங்காவது போய் வசிக்கலாம் என்றொரு யோசனை முகம்மது நபியிடம் முன்வைக்கப்பட்டது. அப்படி இடம் பெயர்ந்து வசிப்பதற்கு முகம்மது சுட்டிக்காட்டிய இடம், அபிசீனியா. (ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருக்கும் இன்றைய எத்தியோப்பியா.)கண்ணியமான மன்னன் (அப்போதைய அபிசீனிய மன்னனின் பெயர் நஜ்ஜாஷி); மத நல்லிணக்கம் பேணுகிற தேசம் என்று சொல்லி, முகம்மதுவே தம் மக்களை அங்கே அனுப்பிவைத்தார்.அன்றைக்கு எத்தியோப்பியா ஒரு கிறிஸ்துவ நாடு. நஜ்ஜாஷியும் ஒரு கிறிஸ்துவர்தாம். ஆயினும் நம்பிக்கையுடன் முஸ்லிம்கள் அங்கே புறப்பட்டுப் போனார்கள். முஸ்லிம்கள் முதல்முதலில் இடம்பெயர்ந்த சம்பவம் அதுதான். மெக்காவைத் தாண்டி இஸ்லாம் வெளியே புறப்பட்டதும் அப்போதுதான்.ரகசியமாகத்தான் அவர்கள் மெக்காவைவிட்டுப் புறப்பட்டுப் போனார்கள் என்றாலும், குறைஷிகளுக்கு அவர்கள் அபிசீனியாவில் நிம்மதியாக வசிப்பதும் பிடிக்கவில்லை. ஆகவே, அபிசீனிய மன்னரின் மனத்தில் முஸ்லிம்களைப் பற்றிய அபாய அறிவிப்பை ஒரு விதையாக விதைத்து, எப்படியாவது அவர்களை நாடு கடத்தச் செய்துவிட வேண்டும் என்று விரும்பினார்கள். இரண்டு தூதுவர்களை அபிசீனியாவுக்கு அனுப்பினார்கள். (அந்தத் தூதுவர்களுள் ஒருவன் பெயர் அம்ர் இப்ன் அல் ஆஸ். இன்னொரு தூதனின் பெயர் தெரியவில்லை.)இந்தத் தூதர்களின் பணி என்னவெனில், எப்படியாவது அபிசீனிய மன்னரைச் சந்தித்து, மெக்காவிலிருந்து அகதிகளாக வந்திருக்கும் முஸ்லிம்களை நாடு கடத்தச் செய்துவிடவேண்டும் என்பது. முடிந்தால் அவர்களுக்கு மரண தண்டனையே கிடைக்கும்படி செய்வது. குறைந்தபட்சம் நாடு கடத்தலாவது அவசியம்.அவர்களும் தக்க பரிசுப் பொருள்களுடன் மன்னரைச் சந்தித்துப் பேசினார்கள்."மன்னா! உங்கள் தேசத்தில் அடைக்கலம் தேடி வந்திருக்கிற சிலரை உங்களுக்கு அடையாளம் காட்டுகிறோம். அவர்கள் முட்டாள்தனமாகத் தங்கள் மதத்தைக் கைவிட்டுவிட்டார்கள். கிறிஸ்துவர்களாக மாறித்தான் உங்கள் தேசத்துக்கு வந்திருக்கிறார்களா என்றால் அதுவுமில்லை. ஏதோ ஒரு புதிய மதம். அவர்களது உறவினர்களும் இனத் தலைவர்களும் இவர்களைத் திருப்பி அனுப்பும்படி வேண்டிக்கொண்டிருக்கிறார்கள். தமது சொந்த மதத்தையும் விடுத்து, உங்கள் மதத்தையும் ஏற்காத அவர்களைத் தயவுசெய்து திருப்பி அனுப்பிவிடுங்கள்"" என்று ஆரம்பித்து, விஸ்தாரமாகத் தங்கள் நோக்கத்தை எடுத்து வைத்தார்கள்.மன்னன் நஜ்ஜாஷி யோசிக்க ஆரம்பித்தான். "சரி, அழைத்து வாருங்கள் அந்தப் புதிய மதத்தவர்களை" என்று உத்தரவு கொடுத்தான்.அபிசீனிய மன்னனின் அவையில், தாங்கள் யார் என்றும், தங்கள் மதம் என்ன, எத்தகையது என்பது குறித்தும் அன்றைக்கு முஸ்லிம்கள் எடுத்துச் சொன்ன சில வரிகள் இன்றைக்கும் இஸ்லாமியர்கள் திரும்பத்திரும்ப நினைவுகூரும் ஒரு சிற்றுரை.இஸ்லாத்தைக் குறித்து ஆயிரமாயிரம் புத்தகங்கள் அளித்தாலும் தீராத வியாக்கியானங்களை அந்தச் சில வரிகள் மிக அழகாகப் புரியவைத்துவிடுகின்றன. அரேபிய மண் முழுவதும் இஸ்லாம் வெகு வேகமாகப் பரவி வேரூன்றியதன் தொடக்கம் அந்தச் சிறு விளக்க உரைதான்.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 16 ஜனவரி, 2005

No comments:

Post a Comment