Monday, February 18, 2013

நிலமெல்லாம் ரத்தம் - 31

31]  ஸ்பெயினில் வெளியேற்றப்பட்ட யூதர்கள்

அவ்வப்போது நடுவில் கொஞ்சம் இடைவெளி இருந்தது என்றபோதும் சுமார் நூற்றைம்பது ஆண்டுகால யுத்தம் என்பது சாதாரணமல்ல. பதினோராம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கிய (கி.பி. 1095) சிலுவைப்போர்கள், கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டின் மத்தியில்தான் (கி.பி. 1250) ஒரு முடிவுக்கு வந்தன. ஜெருசலேத்தை மைய இலக்காக வைத்து நடத்தப்பட்ட இந்த யுத்தங்களால் ஒட்டுமொத்த மத்திய ஆசியாவும் பொருளாதார ரீதியில் மிகவும் பலவீனமடைந்தது. திறமையற்ற சுல்தான்களின் மோசமான ஆட்சி ஒரு காரணம்தான் என்றாலும் தொடர் யுத்தங்கள், தேசங்களின் பொருளாதாரத்தை எத்தனை நாசமாக்கும் என்பதை விவரிக்கவே முடியாது. இந்தப் படுவீழ்ச்சியிலிருந்து அரபு தேசங்கள் எப்படி மீண்டன என்பது சிந்திக்க வேண்டிய விஷயம். 

அது நவீனகாலம் அல்ல. எண்ணெயெல்லாம் கண்டறியப்பட்டிருக்கவில்லை. மன்னராட்சி நடந்துகொண்டிருந்த காலம்தான். கஜானாவை நிரப்புவதென்றால் வரிப்பணம் ஒன்றுதான் ஒரே வழி. இந்த மாதிரி போர்க்காலங்களில் மக்களின் தலைமீது ஏகப்பட்ட வரிச்சுமை விழும். கட்டித்தான் தீரவேண்டியிருக்கும். வேறு வழியே இல்லை. புதிய வேலை வாய்ப்புகள் என்றெல்லாம் மக்கள் சிந்தித்துக்கூடப் பார்க்காத காலம். விவசாயப் பொருளாதாரம்தான் அடிப்படை. படித்தவர்கள் என்றால் ஆசிரியர்களாக இருப்பார்கள். படிக்காதவர்கள் விவசாயம் பார்ப்பார்கள். வேறு எந்தத் துறையிலும் அன்றைய மத்திய ஆசியா பெரிய வளர்ச்சி கண்டிருந்ததாகச் சொல்லமுடியாது.

தவிர, சிலுவைப்போர்கள் முடிந்துவிட்டதே என்று மூச்சுவிட்டுக் கொண்டிருக்கவும் அப்போது அவகாசம் இல்லை. உடனே மங்கோலியப் படையெடுப்பு ஆரம்பமாகிவிட்டது. மாதக்கணக்கில் முற்றுகை, அவ்வப்போது மோதல் என்று அது ஒரு பக்கம் கலீஃபாவின் கண்ணில் விரல் விட்டு ஆட்டிக்கொண்டிருந்தது. பாலஸ்தீன் முஸ்லிம்கள் தங்கள் சரித்திரத்திலேயே மிகக் கடுமையாக உழைக்க வேண்டியிருந்த காலம் அது. அவர்களுக்கு இருந்த ஒரே ஆறுதல், சிலுவைப்போர் வீரர்கள் போய்விட்டார்கள் என்பதுதான். மீண்டுமொரு யுத்தம் என்று ஏதும் வருமானால், அதற்கு முன்பாகக் கொஞ்சம் வளமை சேர்த்து வைத்துவிட மிகவும் விரும்பினார்கள். கொஞ்ச நஞ்ச காலமா? கி.பி. 1099 தொடங்கி 1187 வரை சிலுவைப்போர் வீரர்களால் ஆளப்பட்டுக்கொண்டிருந்தது ஜெருசலேம். சலாவுதீன் என்றொரு சுல்தான் மட்டும் துணிவுடன் அவர்களை எதிர்க்க முன்வராவிட்டால் இந்தச் சுதந்திரம் சாத்தியமில்லை. நூறாண்டுகால அடிமை வாழ்விலிருந்து மீண்டெழக் கிடைத்திருக்கும் ஒரு சந்தர்ப்பம்.

ஆனால் அவர்களுக்கு ஒன்று புரியவில்லை. சரித்திரத்தின் அத்தனை பக்கங்களிலும் விடாப்பிடியாக அவர்களுடன் மல்லுக்கட்டிக்கொண்டிருந்த யூதர்கள் அப்போது எங்கே போய்விட்டார்கள்? ரொம்ப சரி. ஜெருசலேத்தை கிறிஸ்துவர்கள் கைப்பற்றிய நாளாகவே மாற்று மதத்தவர்களுக்கு அங்கே ஆபத்துதான். மாற்று மதத்தவர் என்றால் யூதர்கள் மட்டுமல்ல. முஸ்லிம்களும்கூடத்தானே? கூட்டம் கூட்டமாக வெட்டிச் சாய்த்தார்கள். குப்பையை அள்ளிப் போடுவதுபோலப் பிணங்களைக் குவித்து மொத்தமாக எரித்தார்கள். கொடுமைதான். நரகம்தான். தாங்கமுடியாத அவலம்தான். ஆனால் ஒருத்தர் என்றால் ஒருத்தர் கூடவா மிச்சமில்லை? எங்கேதான் போய்விட்டார்கள் இந்த யூதர்கள்? மிக, மிக முக்கியமான கேள்வி இது. நம்புவது மிகவும் சிரமம் என்றாலும் சரித்திரம் சுட்டிக்காட்டும் மிகப்பெரிய உண்மை இது. சிலுவைப்போர் வீரர்களின் தாக்குதலிலிருந்து தப்பிப்பதற்காக பாலஸ்தீனிலிருந்து அத்தனை யூதர்களும் இடம் பெயர்ந்து போய்விட்டார்கள்!

அப்படித் தப்பிப்போன யூதர்களில் சுமார் ஐயாயிரம் பேரை கிறிஸ்துவர்கள் பல்வேறு நாடுகளில் வெட்டிக்கொன்றது உண்மையே என்றாலும், மிச்சமுள்ள யூதர்கள் ஒளிந்து வாழ்ந்து உயிர் பிழைத்துவிட்டதும் உண்மை. கட்டக்கடைசியாக ஜெருசலேத்திலிருந்து தோல்வியுடன் திரும்பிய சிலுவைப்படையினர், வழியில் பெய்ரூத்தில் பதுங்கியிருந்த முப்பத்தைந்து யூதக்குடும்பங்களை மொத்தமாகக் கொன்று வீழ்த்தியதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. வேறு சில நூறு யூதர்களை அடிமைகளாக அவர்கள் ஐரோப்பாவுக்கு அழைத்துச் சென்று விட்டதாகவும் சில சரித்திர ஆசிரியர்கள் எழுதுகிறார்கள்.

யூதர்களின் இந்த அழிவு, தலைமறைவு, நாடோடி வாழ்க்கை பற்றியெல்லாம் எழுதுபவர்கள் ஒரு விஷயத்தை மட்டும் தொடுவதில்லை. நெருக்கடி மிக்க அந்த நூற்றைம்பது ஆண்டு காலத்தில் ஏன் அவர்கள் பாலஸ்தீனின் விடுதலைக்காக அரேபியர்களுடன் இணைந்து போரிடவில்லை என்பதுதான் அது! விரல் விட்டு எண்ணிவிடக் கூடிய சிறு கைகலப்புச் சம்பவங்களின்போது, தற்காப்புக்காக யூதர்கள், முஸ்லிம்களுடன் இணைந்து கிறிஸ்துவர்களைத் தாக்கியிருக்கிறார்கள். ஹெய்ஃபா (பிணீவீயீணீ) என்ற இடத்தில் நடந்த ஒரு சண்டையில் சில நூறு யூதர்கள், முஸ்லிம்களுடன் சேர்ந்துகொண்டு கிறிஸ்துவர்களை எதிர்த்ததற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. ஆனால், மாபெரும் யுத்தங்கள் நடந்த காலங்களிலெல்லாம் அவர்கள் காணாமல் போய்விட்டார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

பாலஸ்தீன் முஸ்லிம்களுக்கு யூதர்களின் மீது முதல் முதலாக வெறுப்புத் தோன்றியதன் ஆரம்பக் காரணம் இதுதான். உமர் தொடங்கி, சலாவுதீன் வரையிலான இஸ்லாமிய ஆட்சியாளர்களில் பெரும்பாலானோர் மதத்துவேஷம் இல்லாதவர்களாகவே அப்போது இருந்திருக்கிறார்கள். யூதர்கள் முஸ்லிம்கள் இரு தரப்பினருமே ஆபிரஹாமின் வழித்தோன்றல்கள் என்கிற புராண நம்பிக்கையின் அடிப்படையிலும், இரு தரப்பினருமே உருவமற்ற ஒரே இறைவனை வணங்குபவர்கள் என்கிற ஆன்மிகக் காரணத்தின் அடிப்படையிலும் ஒற்றுமையாக வாழவேண்டியதன் அவசியத்தைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறார்கள்.

ஆனால் ஒரு பெரும் நெருக்கடி என்று வரும்போது எதிர்த்து நின்று சமாளிக்கத் தோள் கொடுக்காமல், சொந்த சமூகத்தைக் காப்பாற்றிக் கொள்ளும்பொருட்டுக் காணாமல் போய்விட்ட யூதர்களை, அங்கேதான் அரேபியர்களுக்குப் பிடிக்காமல் போனது. இது மிக முக்கியமானதொரு தருணம். சிலுவைப்போர் காலத்தில் யூதர்கள், முஸ்லிம்களுடன் இணைந்து ஒரு பக்கத்தில் நின்றிருப்பார்களேயானால் பின்னால் மூண்ட பெரும்பகையின் வீரியம் கணிசமாகக் குறைந்திருக்கக்கூடும். ஒரு வேளை அந்த நெருக்கடி நேர ஒற்றுமை நிரந்தர ஒற்றுமையாகக்கூட மலர்ந்திருக்க முடியும். (ஸ்பெயினில் யூதர்கள் அமைதியாக வாழ்ந்த காலம் என்பது முஸ்லிம் மன்னர்கள் ஆட்சி புரிந்த காலம்தான் என்று அத்தனை யூத சரித்திர ஆய்வாளர்களும் தவறாமல் குறிப்பிடுகிறார்கள்.)

ஆனால் இது எதற்கும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது. சுருக்கமாகச் சொல்வதென்றால் நெருக்கடி நேரத்தில் யூதர்கள் ‘காணாமல் போய்விட்டார்கள்’. கொஞ்சம் விரித்துச் சொல்லுவதென்றால், குறைவான மக்கள்தொகை கொண்ட சமூகம் மேலும் சிறுத்துவிடாதிருக்கும் பொருட்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு தற்காப்பு நடவடிக்கை அது.

கி.பி. 1210-ல் யுத்தம் ஒருவாறு முடிவுக்கு வந்துவிடும் என்கிற சூழ்நிலை உருவானபோதுதான் முதல் முதலில் சுமார் முந்நூறு யூதர்கள் பாலஸ்தீனுக்குத் திரும்பி வருகிறார்கள். அவர்களும் கூட, குடும்பத்துடன் திரும்பி வந்தவர்கள் அல்லர். மாறாக, மத குருக்கள், சட்ட நிபுணர்கள், முன்னாள் ஆட்சியாளர்கள் அடங்கிய ஒரு ஆய்வுக் குழுவாகவே அவர்கள் பாலஸ்தீனுக்கு வந்தார்கள். யூதர்கள் அங்கே விட்டுச்சென்ற நிலங்களைத் திரும்பப் பெற்று, மீண்டும் யூதர்களை அங்கே குடியமர்த்த முடியுமா, அதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பதை ஆராய்வதற்காக அவர்கள் வந்தார்கள்.

ஏனெனில், அன்றைய சூழ்நிலையில் ஐரோப்பாவில் கிறிஸ்துவ ஆட்சியாளர்களின் கீழே யூதர்கள் வாழ்வது சாதாரணமான காரியமாக இல்லை. காரணமே இல்லாமல் யூதர்களை அவர்கள் தொடர்ந்து துன்புறுத்தி வந்தார்கள். ஒரு நாடு, இரண்டு நாடுகள் என்றில்லை. எங்கெல்லாம் கிறிஸ்துவம் தழைத்ததோ, அங்கெல்லாம் யூதர்கள் அவதிப்படத் தொடங்கினார்கள். அடிப்படையில் அவர்களுக்கு அரசு வேலை வாய்ப்புகள் எங்குமே கிடைக்கவில்லை. சுய தொழில் செய்யவும் ஏகப்பட்ட கெடுபிடிகள் இருந்தன. ஒரு பெட்டிக்கடை வைப்பது கூட மாபெரும் பிரச்னையாக இருந்தது. கிறிஸ்துவர்கள் வாழும் வீதிகளில் யூதர்கள் வாடகை கொடுத்துக்கூடத் தங்கமுடியாது. கிறிஸ்துவ உணவகங்களில் அவர்கள் உணவருந்த முடியாது. (தனியாக ஓட்டல் நடத்தலாமா என்றால் அதுவும் கூடாது!) ஐரோப்பாவெங்கும் முஸ்லிம்கள் இரண்டாம் தரக் குடிமக்களாகவும் யூதர்கள் மூன்றாம்தரக் குடிமக்களாகவும் நடத்தப்பட்டதாக பொதுவாகச் சொல்லுவார்கள். உண்மையில் யூதர்களை அங்கே கிறிஸ்துவர்கள், ‘மக்களாகவே’ நடத்தவில்லை என்பதுதான் சரி. எத்தனை நூற்றாண்டுகள் கழிந்திருந்தாலும் ஆதிகாலத்து வன்மமும் விரோதமும் அன்றைக்கு அடிக்கடி நினைவுகூரப்பட்டன. ஒரு இயேசுநாதரை யூதர்கள் கொன்றதற்காக ஒட்டுமொத்த யூத இனமுமே அழிவதுதான் சரி என்பதுபோன்ற கருத்தாக்கம் மிக ஆழமாக வேரூன்றியிருந்தது.

ஆனால், இதுமட்டுமே காரணம் அல்ல. தமக்குக் கிடைக்கும் மிகச் சிறிய வாய்ப்புகளைக்கூட யூதர்கள் அன்று மிகத் திறமையாகப் பயன்படுத்திக்கொள்ளக்கூடியவர்களாக இருந்தார்கள். ஒரு யூதருக்கு, ஒரு சிறு கடை வைத்துப் பிழைக்க வாய்ப்புக் கிடைத்துவிட்டதென்றால் நிச்சயம் அவருக்குத் தெரிந்த இன்னொரு பத்திருபது பேருக்காவது வேலை வாய்ப்பு உறுதியாகிவிடும். கவனத்துக்கு எட்டாமலேயே அடுத்த சில காலத்துக்குள் அந்தப் பிராந்தியத்தில் இருபது யூதக்கடைகள் எப்படியோ தோன்றிவிடும். ஒரே ஒரு யூதருக்கு ஏதாவது பெரிய உத்தியோகம் கிடைத்துவிட்டால் போதும். தமது திறமையால், வேலையைத் தக்கவைத்துக்கொள்வதோடு கூட, கொஞ்சம் கொஞ்சமாக அந்த அலுவலகத்திலேயே எப்படியாவது இன்னும் சில யூதர்களை அவர் ஏதாவதொரு பணியில் அமர்த்திவிடுவார். 

ஒருவர், பத்துப்பேர், நூறுபேர் என்றில்லை. ஒட்டுமொத்த யூத குலத்தின் இயல்பு இது. திறமையிலும் புத்திக் கூர்மையிலும் அவர்கள் நிகரற்றவர்களாக இருந்தார்கள். அதைக்கொண்டு தமது சொந்த சமூகத்தினரை முன்னேற்றுவதில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். பொருளாதார ரீதியில் கொஞ்சம் மேம்பட்ட தரத்தில் இருந்த அத்தனை யூதர்களும் அந்தந்த தேசத்து ஆட்சியாளர்கள் மட்டத்தில் செல்வாக்கை வளர்த்துக்கொண்டு தமது சமூகத்தினரின் நலனுக்காக ரகசியமாக நிறைய காரியங்களைச் சாதித்துக்கொண்டிருக்கிறார்கள். இதற்காகக் கணக்கு வழக்கில்லாமல் கையூட்டுத் தரவும் அவர்கள் தயங்கியதில்லை. வேண்டியதெல்லாம் யூதர்களுக்குத் தனியாக ஒரு குடியிருப்புப் பகுதி. உழைத்துப் பிழைத்துக்கொள்ள அனுமதி. தொல்லைகள் ஏதுமிருக்காது என்கிற உத்தரவாதம். அவ்வளவுதான். தனிக் குடியிருப்பு என்பது தவிர, மற்றவை எல்லாமே நியாயமான கோரிக்கைகள்தாம். ஆனாலும் அதற்கே அவர்கள் கையூட்டுத் தரவேண்டிய நிலைமை அன்றைக்கு இருந்தது. வாங்குவதற்கும் ஆட்கள் இருந்தார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும்.

இது பெரும்பான்மை கிறிஸ்துவர்களுக்கு எப்போதும் பிரச்னையாக இருந்தது. இதனாலேயே ஒரு யூதரையும் பிழைக்கவிடக் கூடாது என்று ஒட்டுமொத்த ஐரோப்பாவும் கருதத் தொடங்கியது. யதார்த்த காரணங்களுக்குப் புராதன காரணங்களைத் துணைக்குச் சேர்த்துக்கொண்டு, யூதர்களுக்கு எதிரான வன்முறையை அவர்கள் கட்டவிழ்த்துவிடத் தொடங்கினார்கள். பதினைந்தாம் நூற்றாண்டின் மத்தியில் யூதர்கள் ஐரோப்பாவில் வாழ்வது மிகவும் சிரமம் என்கிற நிலைமை முதல் முதலில் உருவானது. எந்த ஊரில், எந்த நாளில், எந்தக் கணத்தில் முதல் கொலை விழும் என்கிற கேள்வி தினமும் அங்கே இருந்தது.

கி.பி. 1492-ல் முதல் முதலில் மிகப்பெரிய அளவில் யூதர்களை வெளியேற்றத் தொடங்கியது ஸ்பெயின். மொத்தம் ஒரு லட்சத்து அறுபதாயிரம் யூதர்கள் அப்போது அங்கே வசித்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் அத்தனை பேரையும் நிற்கவைத்துப் பட்டியல் தயாரித்து, ஒருவர் மிச்சமில்லாமல் தேசத்தை விட்டு வெளியேறிவிடவேண்டும் என்று அப்போது ஸ்பெயினை ஆண்டுகொண்டிருந்த மன்னர் ஃபெர்டினாண்ட் (ரிவீஸீரீ திமீக்ஷீபீவீஸீணீஸீபீ) உத்தரவிட்டார். அதிகக் கால அவகாசம் இல்லை. உயிர்பிழைக்க வேண்டுமென்றால் ஊரைக் காலி செய்வது தவிர வேறு வழியில்லை.

காலம் காலமாக உழைத்துச் சேர்த்த சொத்து சுகங்கள் அத்தனையையும் அப்படியே விட்டுவிட்டு யூதர்கள் ஸ்பெயினை விட்டுப் புறப்பட்டார்கள். சுமார் தொண்ணூறாயிரம் பேர் அப்போது துருக்கி ஒட்டாமான் பேரரசின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தார்கள். சுமார் இருபத்தைந்தாயிரம் பேர் ஹாலந்துக்குப் போனார்கள். இருபதாயிரம் பேர் மொராக்கோவுக்கு. பத்தாயிரம் பேர் பிரான்ஸுக்கும் இன்னொரு பத்தாயிரம் பேர் இத்தாலிக்கும். ஒரு ஐயாயிரம் பேர் மட்டும் இன்னொரு ஐரோப்பிய தேசத்துக்குப் போவது எப்படியானாலும், ஆபத்துதான் என்று தொலைநோக்குப் பார்வையுடன் யோசித்து அட்லாண்டிக் கடல் தாண்டி வட அமெரிக்காவுக்கும் தென் அமெரிக்காவுக்கும் போய்ச் சேர்ந்தார்கள். இவர்களுள் மத்திய ஆசியாவுக்கு முஸ்லிம் தேசங்களுக்கு வந்தவர்கள்தான் அதிகம். அங்கேதான் பாதுகாப்பு அதிகம் என்பது அவர்களது நம்பிக்கை!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 10 மார்ச், 2005

No comments:

Post a Comment