Wednesday, December 14, 2011

நெல்லையில் நடைபெற்ற TNTJ வின் 13 வது மாநிலப் பொதுக்குழு – முழு விபரத்துடன்!

அன்புள்ள வளைகுடா மண்டல தலைவர் மற்றும் நிர்வாகிகளுக்கு

அஸ்ஸலாமு அலைக்கும்.


பிரம்மாண்டமாய் கூடிய 13 வது மாநிலப் பொதுக்குழு:

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் 13 வது மாநிலப் பொதுக்குழு கடந்த 11/12/2011 அன்று திருநெல்வேலி மாநகரத்தில் இருக்கும் பார்வதி சேஷ மஹாலில் காலை 10.30 க்கு கூடியது. மேலாண்மைக் குழுத்தலைவர் ஷம்சுல்லுஹா ரஹ்மானி தலைமையில் நடைபெற்ற இந்தப் பொதுக்குழுவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அலை கடலென திரண்ட நிர்வாகிகள் :

கடந்த 2011 ஜனவரி மாதம் சேலத்தில் கூட்டப்பட்ட பொதுக்குழுவில், மாநிலத்திற்கு புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து நடைபெற்ற இந்தப் பொதுக்குழு அனைவரின் மத்தியிலும் எதிர்பார்ப்பை உண்டாக்கியது. இதில் 3000க்கும் அதிகமாக இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் நிர்வாகிகள் பெருந்திரளாகப் பங்கேற்றனர்.

நெல்லை மாநகரில் இருக்கும் மண்டபங்களிலேயே மிகப்பெரியது இந்த பார்வதி மஹால்தான். இருந்தாலும் மக்கள் வெள்ளத்தால் இதுவும் கூட இடப்பற்றாக்குறையாய் இருந்தது. பொதுக்குழு உறுப்பினர்களின் கட்டுக்கடங்காத கூட்டத்தால் அரங்கம் காலை 10 மணிக்கே நிரம்பி வழிய ஆரம்பித்தது. அரங்கத்தின் மாடி, பக்கவாட்டுப் பகுதிகள் அனைத்திலும் இருக்கைகள் நிரம்பி வழிந்தன. அரங்கத்திற்கு வெளியே ஷாமியானா பந்தல் போடப்பட்டு அதிலும் நாற்காலிகள் குவிக்கப்பட்டன. ஆனாலும் இடமின்றி மக்கள் பலர் நின்ற வண்ணமே இருந்தனர்.

வானுயர்ந்த உறுப்பினர்களின் கோஷம்:

பொதுக்குழுவின் முதல் நிகழ்ச்சியாக நிர்வாகக் குழு எடுத்த சில நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் பெறப்பட்டது. சைபுல்லாஹ் ஹாஜாவின் தவறான செயல்பாடு காரணமாக அவரை நீக்கியதை பொதுக்குழுவில் அறிவித்து ஒப்புதல் கேட்கப்பட்டது. "அல்லாஹ் அக்பர்" என தங்களின் கைகளை உயர்த்தி உறுப்பினர்கள் கோஷம் எழுப்பி அதற்கு ஒப்புதல் தெரிவித்தனர்.

அதுபோல சொந்தக் காரணங்களுக்காகவும், வேலைப்பளு காரணமாகவும் தங்களின் பொறுப்புகளை ராஜினாமா செய்த சகோ.அப்துந்நாசர், தணிக்கைக் குழு உறுப்பினர் சகோ.தம்மாம் தவ்ஃபீக், மாநிலச் செயலாளர் சகோ.மாலிக் ஆகியோரின் விலகல் குறித்தும் பொதுக்குழுவில் ஒப்புதல் பெறப்பட்டது.

எழுச்சியடைய வைத்த லுஹாவின் உரை:

பொதுக்குழுவின் முதல் அமர்வின் முதல் நிகழ்ச்சியாக மேலாண்மைக்குழுத் தலைவர் ஷம்சுல்லுஹா ரஹ்மானி "கொள்கை உறவு" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இந்த ஜமாஅத்தில் இருக்கும் உறுப்பினர்கள் உறவுகளைப் பேணுபவர்கள், அதே நேரம் அந்த உறவுகள் கொள்கைக்கு மாற்றமாகச் செயல்படும் சமயத்தில் அதைத் தூக்கி எறிந்து விட்டு இந்த சத்தியக் கொள்கையைத் தூக்கிப் பிடிப்பவர்கள் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) காலத்திய ஒரு வரலாற்றைச் சுட்டிக் காட்டி சிறப்பாக விளக்கினார்.

துல்லியமான கணக்கு வழக்குகள்:

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொறுத்தவரை அதிகமான மக்கள் ஆதரிக்கும் ஒரு இயக்கமாக இருக்கின்றது. அதற்கான முக்கியக் காரணம், கணக்கு வழக்குகளில் இறைவனின் அருளால் இன்று வரை பிசகாமல் நிற்பதே ஆகும். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான வரவு செலவு அறிக்கையை பொருளாளர் அன்வர் பாஷா சமர்ப்பித்தார். மாத வாரியான வரவு எவ்வளவு, செலவு எவ்வளவு என்பதைத் துல்லியமாக அறிவித்தார். இந்தக் கணக்குகளில் ஏதேனும் குறை இருந்தால் சுட்டிக் காட்டலாம் என தணிக்கைக் குழுத் தலைவர் எம்.ஐ. சுலைமானிடம் தெரிவித்தார்.

தணிக்கைக் குழுவின் நற்சான்றிதழ் :

பொருளாளர் தாக்கல் செய்த வரவு செலவுகள் குறித்து கருத்து தெரிவித்த தணிக்கைக் குழுத்தலைவர் எம்.ஐ. சுலைமான், கணக்கு வழக்குகள் ஏற்கனவே சகோ.ஈரோடு சாதிக் மூலம் பார்க்கப்பட்டு தொகுக்கப்பட்டதையும், தணிக்கைக் குழுவும் அதை மறு ஆய்வு செய்ததில் அதில் எவ்வித குளறுபடிகளும் இல்லை என்பதையும் தெரிவித்தார்.

அனல் பறந்த ஆண்டறிக்கை:

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆண்டறிக்கையை பொதுச்செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் தாக்கல் செய்தார். இந்த ஆண்டில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செய்த சாதனைகளைப் பட்டியலிட்டார். மாதந்தோறும் அதிகரிக்கும் ஜுமுஆ தொழுகைகள், தெருமுனைக் கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள், மாற்று மதத்தவர் அழைப்புப் பணிகள், புத்தகங்கள், பிரசுரங்கள் வாயிலாக தவ்ஹீத் பிரச்சாரங்கள், பேனர்கள், போஸ்டர்கள் மூலமாக தெருக்கள் தோறும் திருக்குர்ஆன், ஹதீஸ் வசனங்கள் அத்தோடு சிறுவர் இல்லம், முதியோர் இல்லம் போன்ற சேவை இல்லப் பணிகள், இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்ட மாற்று மத சகோதர சகோதரிகளுக்கு முற்றிலும் இலவசப் பயிற்சிகள், சத்தியத்தை எத்தி வைக்கும் விவாதங்கள் போன்ற மார்க்கப் பணிகள் இந்த வருடத்தில் எவ்வளவு அதிகரித்துள்ளது என்பது பற்றிய புள்ளி விபரங்களுடன் எடுத்துரைத்தார். அதுபோல தொடர்ந்து ஏழாவது ஆண்டாக இந்த வருடமும் இரத்த தானத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளதையும் விளக்கினார். ஆண்டறிக்கையின் ஒவ்வொரு வாசகமும் தக்பீரைக் குவித்தன.

புஸ்வாணமாகிப் போன பொறம்போக்குகளின் அவதூறு :

பீஜேக்கு எதிராக, மின்னஞ்சல் முகவரியைத் திருடியவர்கள் அவதூறுப் பிரச்சாரம் செய்து வருவது குறித்து பீஜே தானாக முன்வந்து விளக்கம் அளித்தார். இவ்வாறு அவதூறு பரப்பப்பட்டு வருவது முதல் இன்றைய தேதிவரை எட்டு நபர்கள் மட்டுமே என்னிடம் கேட்டுள்ளனர்., அவர்களும் அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தான் கோரினார்கள். இந்தப் பொய்யை ஒரு பொதுக்குழு உறுப்பினர் கூட நம்பவில்லை என்ற போதும் இது குறித்து நானாக முன்வந்து விளக்கம் அளிக்கிறேன் எனக் கூறி விளக்கம் அளித்தார். விளக்கம் அளித்து முடித்த பின்னர் இதில் யாருக்காவது சந்தேகம் இருக்கிறதா என்று பீஜே கேட்ட போது, இல்லை என்று அனைவரும் கைகளை உயர்த்தி கூறினார்கள். திருடர்கள் மீது சட்டப்படி எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் பற்றியும் பீஜே விளக்கினார்.

பைலா திருத்தம்:

அடுத்ததாக பைலாவில் சில திருத்தங்களைச் செய்து அறிவித்தார் மேலாண்மைக்குழு உறுப்பினர் சகோ. கலீல் ரசூல்.  முந்தைய பைலாவில் இருந்ததைப் போல, உள்ளாட்சித் தேர்தலில் மட்டும் இந்த ஜமாஅத்தின் உறுப்பினர்கள் போட்டியிடலாம் என்று இருந்த விதியை முழுமையாக மாற்றி, இனி டி.என்.டி.ஜே உறுப்பினர்களும் உள்ளாட்சித் தேர்தல் உள்ளிட்ட எந்த தேர்தலிலும் போட்டியிடக் கூடாது என திருத்தி அது உறுப்பினர்களிடம் ஒப்புதல் பெறப்பட்டது.

அதுபோல மாநில நிர்வாகத்தில் யாரும் இருமுறைக்கு மேல் பொறுப்பு வகிக்கக்கூடாது என்ற பழைய விதியை மாற்றி, இந்த ஜமாஅத் நிர்வாகத்தில் அனுபவஸ்தர்கள் நீடிக்க வேண்டும் என்ற நோக்கில் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பொறுப்புகளைத் தவிர மற்ற பொறுப்புகளில் இனி மூன்று முறை நீடிக்கலாம் என்ற விதிக்கு ஒப்புதல் கேட்கப்பட்டது. தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகிய மூன்று நிர்வாகிகளும் இரண்டு தடவைக்கு மேல் தொடர்ந்து அப்பதவிக்கு வரக்கூடாது என்பது உறுதி செய்யப்பட்டது. உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் கைகளை உயர்த்தி அல்லாஹ் அக்பர் என முழக்கமிட்டனர்.

ஆனால் சில நிர்வாகிகள் எழுந்து தலைவர் பொதுச் செயலாளர் பொருளாளர் ஆகியோரும் மூன்று முறை பதவி வகிக்கும் வகையில் திருத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இது குறித்து பீஜே அவர்கள் விளக்கம் அளித்த பின்னர் உறுப்பினர்கள் ஏற்றுக் கொண்டனர்..

தவறு செய்து நீக்கப்படும் உறுப்பினர் வழி தவறுவதைத் தடுக்க இனி தவறு செய்யும் உறுப்பினர்களுக்கு இரண்டு முறை கடும் எச்சரிக்கைகள் தரப்படும். மேலும் அவர்கள் நிர்வாக பொறுப்புக்கு வரக் கூடாது, நிர்வாகியை தேர்வு செய்யும் வாக்குரிமை இல்லாத உறுப்பினராகத் தான் இருப்பார்கள்.

மூன்றாவது முறை அதே தவறைச் செய்தால் அவர் இந்த ஜமாஅத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ஒரு வருடத்திற்கு நீக்கப்படுவார். ஒரு வருடம் கழித்து அந்தக் கிளை தரும் பரிந்துரையின் அடிப்படையில் மட்டுமே அவர் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்படுவார் என்ற புதிய விதி கொண்டு வரப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.

இரண்டாவது அமர்வு:

உணவு இடைவேளைக்குப் பிறகு இரண்டாவது அமர்வு துவங்கியது. மாவட்ட நிர்வாகிகளும் கிளை நிர்வாகிகளும் எவ்வாறு நிர்வாகம் செய்ய வேண்டும் என்பதையும் அடுத்தடுத்து செய்ய வேண்டிய செயல் திட்டங்களையும் மாநிலத்தலைவர் சகோ.பீஜே தெளிவாக விளக்கினார். கடந்து வந்த பாதை முதல் காவல் துறையை அணுகும் முறை வரை மிகத் தெளிவாகவும் சுவாரஸ்யமாகவும் விளக்கினார்.

பிப்ரவரி 14 இடஒதுக்கீடு போராட்டம்:

முஸ்லிம்களுக்கு மத்தியிலும் இதர மாநிலங்களிலும் பத்து சதவிகித இட ஒதுக்கீட்டை சட்டமாக்க வலியுறுத்தியும் , தமிழகம் மற்றும் புதுவையிலும் இடஒதுக்கீட்டை அதிகரிக்க வலியுறுத்தியும்., வரக்கூடிய பிப்ரவரி 14 ஆம் தேதி அனைத்து மாவட்டத்திலும் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது. கழிசடைகள் தினமான இந்த பிப்ரவரி 14 ஐ இனி இடஒதுக்கீட்டு தினமாக அறிவிக்க வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்தினார்.

கைவிடப்பட்டது போராட்டமே! மசூதி அல்ல:

பாபர் மசூதியை நாம் கைவிட்டு விட்டதாக பலரும் கருதுகிறார்கள். ஆனால் கைவிடப்பட்டுள்ளது டிசம்பர் 6 போராட்டம் மட்டுமே! கடமைக்கு இதை நடத்துவதால் மட்டும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை பெற்றுவிடமுடியாது. அதேபோல என்னத் தீர்ப்பு வந்தாலும் அதை நாம் ஏற்றுக் கொண்டு அமைதி காத்து கொண்டிருக்க மாட்டோம். தவறான தீர்ப்பு வந்தால் நம் முழு பலத்தையும் திரட்டி எதிராகக் களமிறங்குவோம். ஏற்கனவே துளியும் பயமின்றிதான் நாம் நீதிமன்றத்தையே கண்டித்துக் களமிறங்கினோம். இறைவனைத் தவிர யாருக்கும் அஞ்சும் குணம் நமக்குக் கிடையாது என்றும் பாபர் மசூதி நிலைப்பாட்டை தெளிவாக எடுத்துரைத்தார். பொதுக்குழு உறுப்பினர்கள் இதில் சில கேள்விகள் கேட்டு விளக்கம் பெற்ற பின்னர் ஒருமனதாக ஏற்றுக் கொண்டனர்.

சுறுசுறுப்பாக்கிய அல்தாபியின் உரை:

நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக மேலாண்மைக்குழு உறுப்பினர் அல்தாபி "மறுமை வெற்றி" என்ற தலைப்பில் உரையாற்றினார். மற்ற இயக்கங்களில் இருப்பதற்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் இருப்பதற்கும் உள்ள வேறுபாடுகளைத் தெளிவாக எடுத்துரைத்தார். மற்ற இயக்கங்களில் இருந்தால் நிச்சயமாக இம்மையிலேயே லாபம் உண்டு என்பதையும், இந்த இயக்கத்தில் இருந்தால் மறுமை வெற்றிக்கு மட்டுமே லாபம் உள்ளது என்பதையும், மறுமை வெற்றியே மகத்தான வெற்றி என்பதையும் தெளிவாக எடுத்துரைத்தார்.

தீர்மானமும் நிகழ்ச்சி நிறைவும்:

இந்தப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை மாநிலச் செயலாளர் சகோ. யூசுப் வாசித்தார். முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்தித் தருவேன் என்று கூறிய ஜெயலலிதா, அதற்கான எவ்வித முயற்சியையும் எடுக்காததை இந்தப் பொதுக்குழுவில் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதுபோல பாண்டிச்சேரியில் முஸ்லிம்களின் இடஒதுக்கீடு ஏமாற்றத்தைக் கண்டித்தும், மத்தியில் முஸ்லிம்களுக்கு உடனடியாக 10 % இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்தித் தரவேண்டும் என வலியுறுத்தியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொதுக்குழுவின் முடிவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த முறைப்படி துவா ஓதி சபை முடிக்கப்பட்டது. ஆர்வத்தோடு பங்கேற்ற அனைத்து நிர்வாகிகளும் தங்களின் இயக்கத்தின் ஒரு முக்கிய கடமையை ஆற்றிய மகிழ்ச்சியில் கலைந்து சென்றனர். பொதுக்குழுவை இவ்வளவு சிறப்பாக நடத்தித் தந்த வல்ல ரஹ்மானுக்கே எல்லா புகழும்!

பொதுக்குழு துளிகள்…

*ரயில் நிலையத்தில் இறங்கியவுடன் அங்கே கொடிகள் கட்டப்பட்ட வேன்கள் தயார் நிலையில் நின்றன. வெளியே வந்த சகோதரர்கள் அந்த வேன்களில் ஏறிச் சென்றனர். வெளியூர் மக்கள் தங்குவதற்கும் ஓய்வு எடுப்பதற்கும் ஒரு தனி மண்டபம் பிடிக்கப்பட்டிருந்தது. அங்கே சென்று குளியல் கடமைகளை நிறைவு செய்து கொண்டார்கள் சகோதரர்கள்.

*பொதுக்குழு நடந்த அனைத்துச் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் தவ்ஹீத் ஜமாஅத்தின் கொடிகள் கட்டப்பட்டிருந்தன. ஏதோ மாநாடு போல நெல்லை நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.

*பொதுக்குழு காலை 10.30 க்கு துவங்கும் என அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. ஆனாலும் காலை 9 மணி முதலே நிர்வாகிகள் மண்டபத்தின் உள்ளே வரத் துவங்கினார்கள்.வாக்காளர் பட்டியலைப் போல  மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகளின் பெயர்களின் பட்டியல் மாவட்ட வாரியாக கவுண்டர்கள் பிரிக்கப்பட்டு சரிபார்க்கப்பட்டன. பொதுக்குழுவில் கலந்து கொள்ள அனைத்து மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகளுக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருந்தன. நிர்வாகிகள் அனைவரிடமும் உறுப்பினர் அட்டை இருக்கிறதா என பரிசோதிக்கப்பட்டது. அட்டை இல்லாதவர்கள் உடனடியாக அங்கேயே விண்ணப்பம் வாங்கி பூர்த்தி செய்து உறுப்பினர் அட்டைக்கு விண்ணப்பித்தனர்.

*பொதுக்குழுவில் கலந்து கொண்ட அனைவருக்கும் ரியாத் மண்டல டி.என்.டி.ஜே. சார்பாக இலவசமாக  தினசரி காலண்டர் ஒன்று வழங்கப்பட்டது.

*மண்டபம் நிரம்பி வழிந்ததால் வாசலில் போடப்பட்டிருந்த ஷாமியானா பந்தலில் அதிகமான மக்கள் அமர்ந்து கொண்டார்கள். அதுமட்டுமின்றி மண்டபத்தில் இரு புறங்கள் மற்றும் மாடி, பால்கனி ஆகிய பகுதிகளில் நாற்காலிகள் போடப்பட்டும் அது பற்றாக்குறையாகவே இருந்தது.

*மண்டபத்தைச் சுற்றி பெரிய பெரிய எல்.சி.டி திரைகள் வைக்கப்பட்டிருந்தன. மண்டபத்திற்குள் செல்ல முடியாத மக்கள் இந்த டிவி வழியாக நிகழ்ச்சிகளைப் பார்த்தனர்.

*பொதுக்குழு நடைபெற்ற மண்டபத்திற்குள் அசைவ சாப்பாட்டுக்கு அனுமதி இல்லை என்பதால், மண்டபத்தை ஒட்டிய பொருட்காட்சித் திடலில் தனியாக உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வந்திருந்த அனைவருக்கும் சுவையான உணவு வழங்கப்பட்டது.

*உணவு இடைவேளையின் போது மண்டபத்திலும், பொருட்காட்சித் திடலிலும் சகோதரர்கள் தொழுகை மேற்கொண்ட நிகழ்வு அங்கிருந்த அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக இருந்தது.

*காலையிலும் முதல்அமர்வு முடிந்து மாலையிலும் சரியான நேரத்திற்கு கதவுகள் மூடப்பட்டன. தாமதமாக வந்த சகோதரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்ட பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த ஒரு பத்திரிகையாளர்., எல்லாருமே நிர்வாகிகள் என்கிறீர்கள், இப்படி செய்தால் அவர்கள் வருத்தப்பட மாட்டார்களா எனக் கேட்டார். ஆனால் இதைத் தான் எங்கள் மக்களும் விரும்புகின்றார்கள். தவறு என்றால் அதை ஒப்புக் கொள்வதற்கு எங்கள் மக்கள் தயங்க மாட்டார்கள், அதற்கு அபராதமும் கட்டுவார்கள் என்று நாம் சொன்னதும் ஆச்சரியமடைந்த அவர், பள்ளிக்கூடத்தில் தான் அபராதமெல்லாம் போடுவார்கள், ஆனால் நீங்கள் உங்கள் இயக்கத்தின் நிர்வாகிகளுக்கே அபராதம் போடுகிறீர்கள், தாமதமாக வந்தால் கதவைச் சாத்துகிறீர்கள், இப்படியும் ஒரு கட்டுக் கோப்பான இயக்கமா? என ஆச்சரியப்பட்டார்.

*உணர்வு, ஏகத்துவம், தீன்குலப் பெண்மணி ஆகிய இதழ்களின் ஒரு வருட சந்தாக்கள் சிறப்பு சலுகையாக 600 ரூபாயில் இருந்த 400 ரூபாய்க்கு கொடுக்கப்பட்டது. திரளான மக்கள் தங்களை இதில் சந்தாதாரர்களாக இணைத்துக் கொண்டனர்.

*அமர்வதற்கு இடம் கிடைக்காமல் இறுதி வரை சிலர் நின்றபடியே பொதுக்குழுவை கண்டு மகிழ்ந்தனர். பொதுக்குழு நிகழ்வுகளை அன்றைய மாலைப் பத்திரிகைகள் மற்றும் மறுநாள் காலைப் பத்திரிகைகள் முக்கியத்துவம் கொடுத்து பிரசுரித்தது குறிப்பிடத்தக்கது.

*நிகழ்ச்சி முடிந்து மண்டப உரிமையாளரிடம் நெல்லை மாவட்ட நிர்வாகிகள் கணக்கு முடிக்கச் சென்ற போது., என் மண்டபத்தில் இப்படி ஒரு கட்டுக்கோப்பான கூட்டத்தை நான் கண்டதில்லை. 3000க்கும் அதிகமான மக்கள் குழுமிய இக்கூட்டத்தில் ஒருவர் கூட புகை பிடிக்கவில்லை. பான்பராக் போடவில்லை. பீடி, சிகரெட் துண்டுகள், பீர் பாட்டில்கள் தான் அனைத்து நிகழ்ச்சிகளின் முடிவில் நிறைந்திருக்கும். ஆனால் இது போல் எதுவும் இல்லாமல் இருந்தது எனக்கு ஆச்சரியமாக உள்ளது என்று குறிப்பிட்டார். மேலும் அசைவ உணவுக்கு அனுமதி அளிக்க முடியாமல் போனதற்கு வருத்தமும் தெரிவித்துக் கொண்டார்.

*பொதுக்குழுவிற்கான ஏற்பாடுகளை நெல்லை மாவட்ட சகோதரர்கள் சிறப்பாகச் செய்திருந்தனர். நெல்லை மாவட்டத் தலைவர் யூசுப் அலி தலைமையில் சகோதரர்கள் களமிறக்கப்பட்டு தேனீக்களைப் போல மிகக்கடுமையாக ஓய்வின்றி பணியாற்றினார்கள். கலந்து கொண்ட மக்களுக்கு தங்களின் கனிவான பணிகளைத் தொய்வின்றி செய்தனர். இந்தப் பணிகளைச் செய்த நெல்லை மாவட்டத்தின் அனைத்து சகோதரர்களின் சேவையும் கடின உழைப்பும் பாராட்டுக்குரியதாகும்.

*குறிப்பாக மேலப்பாளையத்தில் இருந்து வாலன்டியர்களாக வந்த சகோதரர்கள் காலை முதல் இரவு வரை உணவு கூட உட்கொள்ளாமல் வெறும் தண்ணீரை மட்டுமே குடித்துவிட்டு கொஞ்சமும் களைப்பில்லாமல் களப்பணியாற்றியது நிர்வாகிகளுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிகழ்ச்சிக்காக தங்களின் உழைப்பையும் பொருளாதாரத்தையும் தந்த அனைத்து சகோதரர்களுக்கும் அல்லாஹ் அருள் செய்வானாக!

பரபரப்பாக்கிய புள்ளிப் பட்டியல்

பொதுக்குழு கூடிய காலை முதல் மக்கள் அனைவரும் ஆர்வமாக எதிர்பார்த்தது தரவரிசைப் புள்ளிகள் பட்டியலைத்தான். தாவா பணிகளில் எந்த மாவட்டம் எந்தக் கிளை முதல் இடம் பிடிக்கும் என்ற ஆவலில் அனைவரும் இருக்க, அதற்கான முடிவுகளை மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் சையது இப்ராஹீம் அறிவித்தார். அதன்படி மாவட்ட அளவில் பணிகளை அதிகம் செய்து மதுரை மாவட்டம் முதலிடத்தை பிடித்தது. அதேபோல இரண்டாவது இடத்தை திருவள்ளூர் மாவட்டமும், மூன்றாவது இடத்தை தென்சென்னை மாவட்டமும் பிடித்தன. அதேபோல அதிகப் பணிகளைச் செய்த கிளைகளில் முதல் இடத்தை மதுரை கரீம்ஷா பள்ளி கிளையும், இரண்டாவது இடத்தை திருவள்ளூர் மதுரவாயல் கிளையும், மூன்றாவது இடத்தை தஞ்சை தெற்கு தஞ்சை நகர் கிளையும் கைப்பற்றின.

அதே போல வெளிநாடு மற்றும் மண்டலங்களுக்கான தாவா பணிகள் தரவரிசைப் பட்டியலும் அறிவிக்கப்பட்டது. மண்டலங்களில் முதல் இடத்தை ரியாத் மண்டலமும், இரண்டாவது இடத்தை குவைத் மண்டலமும், மூன்றாவது இடத்தை பஹ்ரைன் மண்டலமும் பெற்றன. அதேபோல வெளிநாட்டு மண்டலக் கிளைகளில் முதல் இடத்தை ரியாத் மண்டலத்தைச் சேர்ந்த கதீம் செனைய்யா கிளையும், இரண்டாவது இடத்தை ஜித்தா மண்டலத்தைச் சேர்ந்த தபூக் கிளையும், மூன்றாவது இடத்தை ரியாத் மண்டலத்தைச் சேர்ந்த ஷிஃபா கிளையும் பெற்றன.
இரத்ததான விருதுகள் : இந்த வருடத்திற்கான இரத்த தான விருதுகள் மாவட்ட மற்றும் கிளை வாரியாக வழங்கப்பட்டன. அதன்படி 2011 ஆம் ஆண்டில் அதிகமான இரத்த தான முகாம்களை நடத்தி அதிக அளவில் இரத்த தானம் வழங்கிய மாவட்டங்களில் திருவள்ளூர் முதலிடத்தையும், இரண்டாவது இடத்தை தென்சென்னையும்,  மூன்றாவது இடத்தை வடசென்னையும் பிடித்தன. அதேபோல கிளைகளில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆவடி  முதல் இடத்தையும்,பாடி கிளை இரண்டாவது இடத்தையும், தென்சென்னையைச் சேர்ந்த கிருஷ்ணாம்பேட்டை மூன்றாவது இடத்தையும் பிடித்தன.

வெளிநாடு மண்டலங்களில் ரியாத் முதலிடத்தையும், தம்மாம் இரண்டாவது இடத்தையும், குவைத் மூன்றாவது இடத்தையும் பிடித்தன.

அதுபோல அவசர இரத்த தானத்தில் மதுரை முதல் இடத்தையும், திருச்சி இரண்டாவது இடத்தையும்,நெல்லை மூன்றாவது இடத்தையும் பிடித்தன.

தரவரிசையில் இடம்பெற்ற அனைத்து மண்டலங்கள், மாவட்டங்கள் மற்றும் கிளைகளுக்கு பாராட்டுப் பத்திரங்களும், கேடயங்களும் வழங்கப்பட்டன.


மாநிலப் பொதுக்குழு தீர்மானங்கள்

2011 ஆம் ஆண்டு டிசம்பர் 11 அன்று நெல்லை பார்வதி சேஷ மஹாலில் நடைபெற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் 13 வது மாநிலப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

1. நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது., ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை அதிகரிப்பதாக ஜெயலலிதா அறிவித்தார். அவரது வாக்குறுதியை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று இப்பொதுக்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

2. தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுவரும் 3.5% இட ஒதுக்கீட்டை 7% ஆக உயர்த்தக் கோரியும், புதுச்சேரியில் இட ஒதுக்கீட்டில் தொடர்ந்து இழைக்கப்படும் துரோகத்தைக் கண்டித்தும், மத்தியில் முஸ்லிம்களுக்கு10% இட ஒதுக்கீடு தர வலியுறுத்தியும் தமிழகம் மற்றும் புதுவையின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பிப்ரவரி 14 (செவ்வாய்க்கிழமை) அன்று உரிமை மீட்புப் போராட்டம் நடத்துவது என்றும் இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது

3. முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் அளித்த வாக்குறுதியை இதுவரை காங்கிரஸ் அரசு நிறைவேற்றாமல் ஏமாற்றிவருகிறது. சச்சார் கமிஷனும் ரங்கநாத் மிஸ்ரா கமிஷனும் இஸ்லாமிய சமுதாய மக்களின் நிலையை ஆய்வு செய்து அறிக்கையை சமர்ப்பித்த பின்பும் அவற்றின் பரிந்துரைகளை மத்திய காங்கிரஸ் அரசு நிறைவேற்றாமல் காலம் கடத்தி வருகிறது. முஸ்லிம்களின் இந்த நியாயமான உரிமையைக் காங்கிரஸ் அரசு உடனடியாக வழங்கத் தவறினால் காங்கிரஸிற்கு எதிராக ஒரு மாபெரும் போராட்டத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் என்பதை இப்பொதுக்குழு எச்சரிக்கிறது.

4. பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டு சுமார் 20 ஆண்டுகள் ஆகியும் அப்பள்ளியை இடித்த குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் இருப்பது இந்திய முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். ரேபரேலி நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணையை துரிதப்படுத்தவும் நியாயமான தீர்ப்பு வழங்கவும் இப்பொதுக்குழு நீதித் துறையைக் கேட்டுக் கொள்கிறது.

5. இந்திய தேர்தல் முறையை விகிதாச்சார பிரதிநிதித்துவ அடிப்படையில் மாற்ற அரசியல் சாசன திருத்தம் செய்ய வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர்களையும் அனைத்து மக்கள் பிரதிநிதிகளையும் இந்திய மக்களையும் இப்பொதுக் குழு கேட்டுக் கொள்கிறது.

6. கிறிஸ்தவ சமுதாயத்தின் சொத்துகளை அரசு தலையீடு இல்லாமல் கிறிஸ்தவ சமுதாயமே நிர்வகித்து வருகிறது. ஆனால் முஸ்லிம் சமுதாய சொத்துகளை அரசின் வக்ஃபு வாரியம் நிர்வகிக்கிறது. இது அரசியல்வாதிகளுக்கும் சுரண்டல் பேர்வழிகளுக்கும் கொள்ளை அடிக்க வாய்ப்பாக இருந்து வருகிறது. எனவே முஸ்லிம் சமுதாய சொத்துகளை அரசு தலையீடு இல்லாமல் முஸ்லிம் சமுதாயமே நிர்வகிக்கும் வகையில் வக்ஃப் வாரியத்தை முற்றாகக் கலைத்து விட வேண்டும் என இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

7. குஜராத்தில் மூவாயிரத்திற்
கும் அதிகமான முஸ்லிம்களை கொன்றொழித்த பயங்கரவாதி நரபலி மோடியின் உண்ணாவிரத நாடகத்தை வாழ்த்தி தனது பிரதிநிதிகளை அனுப்பிய அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

8. முஸ்லிம்களின் விரோதியான அத்வானியின் ரதயாத்திரைக்கு ஆதரவளித்தும் வாழ்த்தியும் முஸ்லிம்களின்உணர்வோடு விளையாடும் ஜெயலலிதாவின் இப்போக்கு தொடருமானால் முஸ்லிம் சமுதாயத்தின் ஒட்டு மொத்த வாக்குகளையும் இழக்க நேரிடும் என இப்பொதுக்குழு எச்சரிக்கிறது.

9. ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே பால் விலை உயர்வு, மின்சாரக் கட்டண உயர்வு, பேருந்துக் கட்டண உயர்வு எனத் தொடர்ந்து விலைவாசிகள் அதிமுக அரசால் உயர்த்தப்பட்டுள்ளது. இது ஏழை எளிய நடுத்தர மக்களை மிகவும் சிரமத்திற்குள்ளாக்கி அவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. இப்பொதுக்குழு அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவிப்பதோடு விலை உயர்வை திரும்பப் பெறவேண்டும் என தமிழக அரசைக் கோருகின்றது.

10. தமிழகத்திற்கும் கேரளத்திற்
கும் முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை, தமிழகத்திற்கும் ஆந்திரத்திற்கும் இடையே பாலாறு அணைப் பிரச்சினை, தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் இடையே காவிரிப் பிரச்சினை என இன மொழி அடிப்படையிலான பிரிவினைவாதங்கள் இந்திய தேசத்தின் அமைதியையும் ஒருமைப்பாட்டையும் அச்சுறுத்தும் அளவிற்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது. அனைவரும் ஓரிறையின் அடிமைகள் என்பதையும் ஒருதாய் மக்கள் என்பதையும் உணர்ந்து சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் மனிதாபிமானத்தோடும் நியாயத்தோடும் இப்பிரச்சினை
களைத் தீர்க்க முன்வரவேண்டும் என்றும் அதற்கேற்ற நடவடிக்கைகளை மத்திய அரசு விரைந்து எடுக்க வேண்டும் என்றும் இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது. இப்பிரச்சினைகளில் மத்திய மாநில அரசுகள் தீர்க்க உதவும் வகையில் அனைத்து மாநில பொது மக்களும் கட்சிகளும் வன்முறையைத் தூண்டிவிடுவதைக் கைவிட வேண்டும் என்று அனைத்து மாநில மக்களையும் இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

11. அரசியல் ஆதாயத்திற்காக
வும் சுய விளம்பரத்திற்காகவும் இன மொழி பிரிவினைகளைத் தூண்டி மக்களை பிளவு படுத்த முயற்சிக்கும் நச்சு சக்திகளை இந்திய மக்கள் குறிப்பாக தமிழக மக்கள் புரிந்து கொண்டு அவர்களைப் புறக்கணிக்க வேண்டும் என இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

12. கூடங்குளம் அணுமின் நிலைய விஷயத்தில் இன மொழி அடிப்படையிலும் மத அடிப்படையிலும் மக்களைப் பிரிக்க முயலும் பிரிவினைவாதிகள், அந்நிய சக்திகளின் அடிவருடிகள், ஆகியோரின் பொய் பிரச்சாரங்களை முறியடித்து, அப்பகுதிவாழ் மக்களின் நியாயமான அச்சத்தை போக்கி, தேவையான பாதுகாப்பு வசதிகளை உறுதிப்படுத்தி மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

13. தமிழகத்தில் குற்ற செயல்கள் அதிகரிக்கவும் பலரது குடும்ப வாழ்க்கை சீரழியவும் காரணமாக இருக்கும் அரசு மதுக்கடைகள் போதாதென்று சொகுசு மதுக்கடைகளை திறப்பதற்கு தமிழக அரசு எடுத்திருக்கும் முடிவு வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல் உள்ளது. இந்தத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் உடனடியாக மூடவேண்டும் என்றும் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்றும் தமிழக அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

14. முஸ்லிம்களின் இரண்டு பெருநாட்களும் அரசு விடுமுறையாக இருந்தும் சில கல்வி நிறுவனங்கள் அன்றைய தினம் தேர்வுகளை நடத்துகின்றன. சட்டத்திற்கு புறம்பாகச் செயல்படும் இந்நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேணடும் என்றும் அவற்றின் அங்கீகாரங்கள் ரத்து செய்யப்படவேணடும் என்றும் இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

15. முஸ்லிம் அல்லாதார் நடத்தும் கல்வி நிறுவனங்களில் அந்நிறுவனங்களின் மதம் சார்ந்த வழிபாட்டு பாடல்களை பாடவும் அவற்றில் பங்கேற்கவும் முஸ்லிம் சிறார்கள் நிர்பந்திக்கப்படுகிறார்கள். மேலும் வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகைக்கும் மாணவ மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. அத்தகைய கல்வி நிறுவனங்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது

16. ரமலான் மாதத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் நோன்புக் கஞ்சிக்காக பள்ளிவாசல்களுக்கு சிறப்பு விலையில் அரசு வழங்கும் பச்சரிசி விநியோக முறையை இலகுவாக்கும்படி இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது. அரிசி வழங்கலில் தேவையற்ற கெடுபிடிகள் செய்து முஸ்லிம்களை அலைக்கழிக்கும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட வேண்டும் என்று இப்பொதுக்குழு கோருகிறது.

17. வியாபார நிறுவனங்களுக்கு வசூலிக்கப்படும் மின்கட்டணம் போன்றே பள்ளிவாசல்களுக்கும் மின்கட்டணம்வசூலிக்கப்படுகிறது. அனைத்துப் பள்ளிவாசல்களுக்கும் முற்றிலுமாக இலவச மின்சாரம் வழங்கும்படியும் இயலாவிட்டால் வீடுகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட் கட்டணத்தை வசூலிக்குமாறு தமிழக அரசை இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

18. காழ்ப்புணர்வு காரணமாக இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கு சில ஊர் பள்ளிவாசல் நிர்வாகிகள் மறுக்கிறார்கள். மனிதாபிமானமற்ற இச்செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசை இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கின்றது.

19. சில்லறை வணிகத்தில் 51 சதவிகிதம் அந்நிய முதலீட்டிற்கு அனுமதியளிக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று மத்திய அரசை இப்பொதுக் குழு எச்சரிக்கை செய்கிறது. உள்நாட்டு மக்களின் பொருளாதாரத்தைச் சீரழித்து அந்நிய சக்திகளிடம் நாட்டையே அடகுவைக்க வேண்டிய நிலையைத்தான் 51 சதவிகித அந்நிய முதலீட்டிற்கு அனுமதியளிக்கும் இந்த முடிவு ஏற்படுத்தும். எனவே இந்தியாவை அந்நிய சக்திகளிடம் அடிமையாக்கும் மத்திய அரசின் இந்த முடிவிற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாபெரும் கண்டனத்தைப் பதிவு செய்கிறது

நெல்லையில் கடந்த 11-12-2011 அன்று ஆயிரக்கணக்கான பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கு பெற்ற TNTJ வின் 13 வது மாநிலப் பொதுக்குழு கூட்டம் பற்றிய செய்தி தினகரன் தினமணி, தினத்தந்தி,தினமலர்,மாலைமுரசு,தமிழ் முரசு இந்தியன் எக்ஸ் பிரஸ் ,ஹிந்து உள்ளிட்ட தமிழ் மற்றும் ஆங்கில பத்திரிக்கைகளில் வெளியாகியுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!





No comments:

Post a Comment