முதியோர், விதவை, கணவனால் கைவிடப்பட்டோர் உட்பட, மாதாந்திர ஓய்வூதியத் தொகை வேண்டி விண்ணப்பிப்பவர்கள், இனி, சம்பந்தப்பட்ட வி.ஏ.ஓ.,விடமே மனு அளிக்கலாம். அந்த மனு மீது விசாரணை நடத்தி, 30 நாளில் உத்தரவு வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
முதியோர் ஓய்வூதியத்தொகை உட்பட அரசின் மாதாந்திர ஓய்வூதியத் திட்டங்களுக்கான விண்ணப்பங்கள், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாருக்கு முகவரியிட்டு, அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட, வி.ஏ.ஓ.,விடம், திங்கட்கிழமைதோறும் அளிக்கலாம்.ஓய்வூதியம் கோரும் மனுவை பெற்றுக் கொண்டு, உரிய படிவத்தில் வி.ஏ.ஓ., ஒப்புகைச் சான்று அளிப்பார். கூடுதல் பொறுப்பாக கவனிக்கும் கிராமங்களுக்கு, செவ்வாய்க்கிழமை தோறும் அலுவலகத்தில்அமர்ந்து, வி.ஏ.ஓ., மனு வாங்கி, ஒப்புகைச் சீட்டு வழங்குவார்.
இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தி, அந்த வாரத்தின் வெள்ளிக்கிழமையன்று, தமது அறிக்கையுடன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாரிடம் ஒப்படைப்பார். அந்த மனுக்கள் மீது தாசில்தார், மண்டல துணை தாசில்தார், ஆர்.ஐ., ஆகியோர் குழுவாக செயல்பட்டு, அரசின் மாதாந்திர ஓய்வூதியத் திட்டங்களின் கீழ் பெறப்படும் அனைத்து மனுக்கள் மீதும் உடனடியாக ஆய்வு செய்து, 30 நாளில் ஆணைகள் வழங்க வேண்டும். இத்திட்டத்தில், இடைத்தரகர்கள் யாரேனும் குறுக்கீடு செய்தால், அவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் கூறுகையில், ""மனு அளிக்கும் முதியோரிடம் தேவையான ஆவணங்கள் இல்லாவிட்டாலும் கூட, இந்த உதவித்தொகையால் தான், அவர்கள் உயிர் வாழ முடியும் என்று அதிகாரிகள் முடிவு செய்தால், அவர்களிடம் ஆவணங்கள் கேட்டு அலைக்கழிக்காமல், உடனடியாக உத்தரவு வழங்கும்படி அரசு தெரிவித்துள்ளது. இதனால், முதியோர் அலைக்கழிப்பு குறையும். பொதுமக்கள் இந்த நடைமுறையை பயன்படுத்திக் கொள்ளலாம்'' என்றனர்.
No comments:
Post a Comment