Monday, December 31, 2012

TNTJ ஜித்தா-தபூக் கிளையில் தனி நபர் தஃவா

அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் 27/12/2012 அன்று தபூக் நகரம்  தஸ்ஹிலாத் பெட்ரோல் பம்பில் பணிபுரியும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த சகோ. சாமிநாதன் அவர்களுக்கு கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்களும், கிளை செயலாளர் சகோ.  நிஜாம் அவர்களும் இஸ்லாமிய கொள்கை விளக்கம்,  மற்றும் இஸ்லாத்தின் அடிப்படை சிறப்பு அம்சங்களையும் விளக்கியதோடு, சகோ, P.J அவர்களின் தமிழாக்கம், திருமறை தோற்றுவாய், மாமனிதர் நபிகள் நாயகம், வருமுன் உரைத்த இஸ்லாம், மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம், மற்றும் பல இஸ்லாமிய 15 நுல்களையும். மேலும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம், நாத்திகர்களுடன் நடந்த விவாதம், இஸ்லாத்தின் தனிச்சிறப்புகள் போன்ற 25 DVDகளையும் வழங்கினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

Sunday, December 30, 2012

நிலமெல்லாம் ரத்தம் - 17


17] உமரின் மனமாற்றம்



ஆயிரக்கணக்கான பக்கங்கள் உள்ள குர்ஆன், பல்லாயிரக்கணக்கான பக்கங்கள் வரும் ஹதீஸ்கள் (முகம்மது நபியின் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களும் அவரது போதனைகளும் அடங்கிய பிரதிகளுக்கு ஹதீஸ் என்று பெயர். சிலர் ஹதீத் என்றும் இதனை அழைப்பார்கள். குர்ஆனையும் ஹதீஸையும் போட்டுக் குழப்பிக்கொள்ளக் கூடாது. குர் ஆன் என்பது இறைவனால் அருளப்பட்டது. ஹதீஸ், முகம்மது நபியினுடையது.), எத்தனையோ விளக்க நூல்கள், ஆய்வு நூல்கள், ஆதரவு நூல்கள், எதிர்ப்பு நூல்கள், இஸ்லாத்தைப் பற்றிப் பேசுபவையாக இருக்கின்றன. ஆனால், அபிசீனியா என்கிற எத்தியோப்பியாவின் மன்னன் நஜ்ஜாஷியின் அவையில், தாங்கள் யார், தங்களது புதிய மதம் என்ன என்பது பற்றி, அந்த முதல் தலைமுறை முஸ்லிம்கள் சில வரிகளில் எடுத்துரைத்ததைக் காட்டிலும் இஸ்லாத்தைத் துல்லியமாகப் புரியவைக்கும் சொற்கள் வேறு எதுவும் கிடையாது.எளிமையான சொற்கள். அலங்காரங்கள் கிடையாது. ஜோடனைகள் கிடையாது. உணர்ந்ததை, உணர்ந்தபடியே வெளிப்படுத்திய அந்த நேர்மையினால்தான் அந்தச் சொற்கள் இத்தனை நூற்றாண்டுகள் கடந்தபின்னும் ஜீவத் துடிதுடிப்புடன் இருக்கின்றன. ஒரு சிறிய சொற்பொழிவு போல அமைந்திருக்கும் அந்த விளக்கத்தை மிகச்சில வரிகளில் சுருக்கினால் கிடைக்கும் சாறு இதுதான்:"நாங்கள் அறியாமையில் இருந்தோம். ஒழுக்கமற்று வாழ்ந்தோம். சிலைகளையும் கற்களையும் வணங்கி கொண்டிருந்தோம். உயிர்த்திருப்பதன் பொருட்டு அனைத்து அக்கிரமங்களையும் தயங்காமல் செய்தோம். எளியவர்களை எங்கள் சுயலாபத்துக்குப் பயன்படுத்திக்கொள்ள ஒருபோதும் தயங்கியதில்லை. எங்கள் இனத்திருந்தே ஒரு தூதரை இறைவன் தேர்ந்தெடுத்து அனுப்பும்வரை எங்கள் வாழ்க்கை இவ்வாறாகத்தான் இருந்தது.எங்கள் தூதர் எங்கள் கண்களைத் திறந்தார். உருவமோ, ஆதி அந்தமோ அற்ற ஒரே இறைவனை வணங்கச் சொல்லி அவர் எங்களை அழைத்தார். பேச்சில் சத்தியம், வாக்கைக் காப்பாற்றுவதில் உறுதி, உறவினருக்கும் நண்பர்களுக்கும் யாருக்குமே துரோகம் இழைக்காதிருத்தல், எதன்பொருட்டும் ரத்தம் சிந்த அனுமதிக்காதிருத்தல் ஆகியவற்றை வற்புறுத்திச் சொன்னார்.பெண்களை மதிக்கச் சொன்னார். பொய்சாட்சி சொல்லாமலிருக்கும்படி கேட்டு கொண்டார். தொழுகை, நோன்பு, ஏழைவரி ஆகியவற்றைக் கடைப்பிடிக்கச் சொன்னார். இவைதான் எங்கள் தூதர் எங்களுக்கு இட்டிருக்கும் கட்டளைகள். இவற்றைத்தான் எங்கள் நாட்டைச் சேர்ந்த பலர் எதிர்க்கிறார்கள். அடைக்கலம் தேடியே உங்கள் நாட்டுக்கு வந்திருக்கிறோம். காப்பாற்றுவீர்களாக.""குர் ஆன் என்னும் வேதம் விவரிக்கும் வாழ்க்கை நெறி என்பது இதுதான். அதன் அத்தனை பக்கங்களுமே இவற்றின் விரிவும் விளக்கமும்தான்.முஸ்லிம்களின் இந்தத் தன்னிலை விளக்கத்தைக் கேட்ட அபிசீனிய மன்னன் நஜ்ஜாஷி, அவர்களை நாடு கடத்தச் சொல்லிக் கேட்டுவந்த மெக்கா நகரின் குறைஷித் தூதுவர்களைத் திருப்பி அனுப்பிவிட்டான். ஒரு பாவமும் அறியாத இவர்களை எதற்காக நாடு கடத்த வேண்டும்? ரொம்ப சரி. நீங்கள் அபிசீனியாவிலேயே சௌக்கியமாக இருந்துகொள்ளலாம் என்று சொல்லிவிட்டான்.அந்தத் தூதர்கள் அத்துடன் விடுவதாயில்லை. "இதெல்லாம் சரி, இவர்களின் புதிய மதத்தின் வேதம், உங்கள் கிறிஸ்துவ மதம் தோன்றுவதற்குக் காரணமாக இருந்த இயேசுவைப் பற்றி என்ன சொல்கிறது என்று கேளுங்கள்" என்று வேறொரு பிரச்னையை எழுப்பினார்கள்.குர் ஆனில் இயேசுவை (ஈசா நபி என்று குர் ஆனில் வரும்.) "இறைவனின் அடிமை" என்னும் பொருளில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும். இயேசுவை அடிமை என்று அழைப்பவர்கள் இவர்கள் என்று சொல்லியாவது தாம் வந்த காரியத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிக்கொள்ளப் பார்த்தார்கள், குறைஷித் தூதர்கள்.ம்ஹ§ம். அதற்கும் நஜ்ஜாஷி மசியவில்லை. ஆம். இயேசு இறைவனின் அடிமைதான். இதிலென்ன சந்தேகம் என்று சொல்லிவிட்டான்.ஆனாலும், அபிசீனிய மக்களுக்கு, தம் மன்னனின் இந்தப் பரிபூரண சரணாகதி வேறொரு சந்தேகத்தை எழுப்பிவிட்டது. எங்கே தம் மன்னனே ஒரு முஸ்லிமாகிவிடுவானோ என்கிற சந்தேகம். இதன் விளைவாக, தேசம் முழுவதும் பெரும் பரபரப்பும் வதந்திகளும் எழத் தொடங்கின. "இயேசுவை நாம் இறைவனின் மைந்தன் என்றல்லவா சொல்லுகிறோம்? இறைவனின் அடிமை என்று அவர்கள் சொல்வதை நீங்கள் எப்படி ஒப்புக்கொள்ளலாம்?" என்று மக்கள் பிரதிநிதிகள், மன்னனிடம் சண்டைக்கு வந்தார்கள்.உண்மையில் நஜ்ஜாஷி ஒரு மதநல்லிணக்க வாதி. அவனுக்கு முஸ்லிமாக மாறுகிற எண்ணமெல்லாம் இல்லை. அப்படியரு சிந்தனை கூட அவனுக்கு எழவில்லை. ஆயினும், அடுத்தவரின் மத உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் பெருந்தன்மைமிக்க மன்னனாக இருந்ததுதான் அன்றைக்குப் பிரச்னையாகிவிட்டது. ஒருவேளை நாட்டில் பெரிதாகக் கலவரம் ஏதாவது நிகழலாம் என்று அவன் சந்தேகப்பட்டான். எதற்கும் இருக்கட்டும் என்று அடைக்கலம் தேடி வந்த முஸ்லிம்களை மூட்டை முடிச்சுகளுடன் தயாராக இருக்கும்படி கேட்டுக்கொள்ளவும் செய்திருக்கிறான்.நல்லவேளையாக அப்படியரு விபரீதம் நிகழவில்லை. தாம் ஒரு உண்மையான கிறிஸ்துவன்தான்; மதம் மாறும் உத்தேசமெல்லாம் இல்லை என்று மக்களிடம் எடுத்துச் சொல்லி, இயேசு "இறைவனின் குமாரர்தான்" என்பதிலும் தமக்கு எந்தச் சந்தேகமும் இல்லை என்று வாக்குமூலம் அளித்து, மக்களைச் சமாதானப்படுத்தினான். அதன்பின் முஸ்லிம்கள் அங்கே தொடர்ந்து வாழ்வதற்கு எந்தப் பிரச்னையும் இல்லாமல் போய்விட்டது.ஆனால், மெக்கா நகரத்துக் குறைஷித் தலைவர்கள் இதைப் பெரிய அவமானமாகக் கருதினார்கள். தாங்கள் அனுப்பிய தூதுவர்கள், காரியத்தை முடிக்காமல் திரும்பிவந்ததில் அவர்களுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்துவிட்டது. ஏதாவது செய்து, முஸ்லிம்கள் அத்தனை பேரையும் வெட்டிப் புதைத்துவிட்டால்தான் தங்கள் ஆத்திரம் தீரும் என்று நம்பினார்கள்.ஆனால், யார் தலைமையில் ஒன்று திரள்வது? செலுத்திய அம்பு போலக் குறி தவறாமல் சென்று இலக்கைத் தாக்கும் வல்லமை தங்களில் யாருக்கு உண்டு? குறைஷிகளிடையே அப்போது செல்வாக்கும் நன்மதிப்பும் பெற்ற தலைவர் அபூஜஹ்ல் என்பவர். ஆனால் வயதானவர். இந்தக் காரியத்துக்கு இள ரத்தம் தான் வேண்டும். யாரைத் தேர்ந்தெடுக்கலாம்?அபூஜஹ்லுக்குத் தன் மருமகன் உமரின் ஞாபகம் வந்தது. உமருக்கு அப்போது இருபத்தியாறு வயது. முரடு என்றால் அப்படியரு முரட்டு சுபாவம் கொண்ட இளைஞர். மிகத் தீவிரமான உருவ வழிபாட்டாளர். ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் முகம்மதுவையும் அவரது தோழர்களையும் ஒரு வழி பண்ணிவிடமாட்டோமா என்று பலநாட்களாகக் காத்துக் கிடந்தவர்.ஆகவே, அபூஜஹ்ல் வாயிலாகவே அப்படியரு வாய்ப்பு வந்தபோது, மிகவும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு ஒரு பெரிய வாளைத் தூக்கிக்கொண்டு உடனே கிளம்பிவிட்டார்.உமரின் கோபம், உருவமற்ற இறைவனை முகம்மது முன்னிறுத்தியதனால் மட்டுமல்ல. ஒரே கூட்டுப் பறவைகளாக இருந்த மெக்கா நகரின் மக்களிடையே இன்று இரு பிரிவுகள் தோன்றிவிட்டதற்கு முகம்மதுதானே காரணம் என்கிற உணர்ச்சிவயப்பட்ட மனநிலை அவருக்கு இருந்திருக்கிறது. அதனால், முகம்மதைக் கொன்றுவிட்டால் எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைத்துவிடும் என்று நம்பினார். தவிரவும் இஸ்லாம் ஒன்றும் மிகத் தீவிரமாகப் பரவி ஏராளமானவர்களை இன்னும் கவர்ந்திழுக்கவில்லையே. அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தானே மதம் மாறிக்கொண்டிருக்கிறார்கள்? முகம்மதுவைக் கொன்றுவிட்டால் மதம் மாறுவதும் நின்றுவிடும்; மாறியவர்களையும் மீண்டும் மாற்றி விடலாம்.இவ்வாறு எண்ணியபடி முகம்மதைத் தேடி ஆக்ரோஷத்துடன் புறப்பட்டுப் போனார் உமர். போகிற வழியில் நுஐம்இப்ன்அப்த்அல்லாஹ் என்னும் ஒரு முஸ்லிம் (இவர் வெளிப்படையாகத் தன்னை முஸ்லிம் என்று அப்போது அறிவித்துக்கொண்டிருக்கவில்லை. உயிருக்குப் பயந்து ரகசிய முஸ்லிமாகத்தான் இருந்திருக்கிறார்.) உமரைத் தடுத்து நிறுத்தி, "எங்கே இத்தனை ஆக்ரோஷமாகக் கிளம்பிவிட்டீர்கள்?" என்று கேட்டார்."எங்கா? அந்த முகம்மதை ஒழித்துக் கட்டுவதற்காக"" என்று சொன்ன உமர், தன் வாளையும் தொட்டுக்காட்டினார்.நுஐமுக்குக் கவலை வந்துவிட்டது. என்ன செய்து இந்த முரட்டு உமரைத் தடுத்து நிறுத்துவது? கையில் கொலை வாளுடன் போய்க்கொண்டிருக்கிறார். முகம்மதும் அவரது தோழர்களும் திண்ணையில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பார்கள். அவர்களிடம் ஆயுதம் ஏதும் இருக்காது. தற்காப்புக்காகக் கூட ஏதும் செய்துகொள்ள முடியாது. இங்கேயே இவரைத் தடுக்காவிட்டால் விபரீதம் நடப்பது உறுதி என்று அஞ்சியவர், வேறு வழியே இல்லை என்று கண்டவராக, "முகம்மதுவைக் கொல்வது இருக்கட்டும்; உன் வீட்டிலேயே முஸ்லிம்களை வைத்துக்கொண்டு நீ முகம்மதுவை நோக்கிப் போவதைப் பார்த்தால் யாராவது சிரிக்கமாட்டார்களா?' என்று கேட்டார்.ஐமின் நோக்கம் அப்போது எப்படியாவது முகம்மதைக் காப்பாற்றுவதாக மட்டுமே இருந்தது. களப்பலியாக வேறு யாரையாவது இழக்க நேர்ந்தாலும் சரியே என்னும் முடிவில் இருந்தார். ஆகவே உமரின் சகோதரியும் அவளது கணவரும் முஸ்லிமாக மாறிவிட்டார்கள் என்கிற உண்மையை (அன்றுவரை உமருக்கு அந்த விஷயம் தெரியாது.) முதல்முதலாக உமரிடம் சொல்லிவிட்டார்.அதனாலென்ன? முதலில் என் வீட்டுக் களையைப் பிடுங்கிவிட்டுப் பிறகு முகம்மதிடம் போகிறேன் என்று சொல்லிவிட்டு உமர் நேரே தன் சகோதரியின் வீட்டுக்கு ஓடத் தொடங்கினார்.தம் சகோதரி பாத்திமாவின் வீட்டருகே உமர் சென்றபோது உள்ளே யாரோ ஓதிக்கொண்டிருக்கும் குரல் கேட்டது. சந்தேகமே இல்லை. நுஐம் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார் என்று கோபம் தலைக்கேறி, உருவிய வாளுடன் கதவை உடைத்துத் திறந்து உள்ளே பாய்ந்தார் உமர்.உமரைக் கண்டதும் பாத்திமா, தாம் வைத்து ஓதிக்கொண்டிருந்த குர் ஆனின் பிரதியைத் தன் உடைக்குள் மறைக்கப்பார்த்தார். அவளது கணவனோ, தங்களை விட்டுவிடும்படி மன்றாடத் தொடங்கினார். ஆனால் உமர் விடவில்லை. தன் சகோதரியை அடித்து ரத்தக்காயப் படுத்திவிட்டு, மைத்துனரின் மீது பாய்ந்தார். இருவரும் கட்டிப் புரண்டார்கள். அடித்துக் கொண்டு எழப்பார்த்தார்கள். மைத்துனரைக் கொன்றுவிடுவது என்று வெறிகொண்டு தாக்கிய உமருக்கு, சகோதரி காயம் பட்டு விழுந்ததும் சிறிதே சலனம் ஏற்பட்டது.சட்டென்று தாக்குதலை நிறுத்திவிட்டு, "நீங்கள் வைத்து ஓதிக்கொண்டிருந்ததைக் கொண்டுவாருங்கள். அப்படி என்னதான் அதில் இருக்கிறது என்று பார்க்கிறேன்"" என்றார்.வாழ்க்கையில் சில சந்தர்ப்பங்கள் இப்படித்தான் மிகுந்த ரசமுள்ளவையாக எப்படியோ அமைந்துவிடுகின்றன. தயக்கத்துடன் பாத்திமா எடுத்துவந்து கொடுத்த குர் ஆனின் அந்தச் சில பகுதிகளை வாசித்துப் பார்த்த உமர் தம்மையறியாமல் வாளைக் கீழே போட்டார். பிரமிப்பும் அச்சமும் கொண்டு அதுவரை இல்லாத கனிவும் அன்பும் மேலோங்கியவராகக் கண்கள் கலங்கி நின்றார்."இதென்ன! இந்த வசனங்கள் இத்தனை அழகும் சிறப்பும் கொண்டவையாக இருக்கின்றன! நிச்சயம் மனிதர் உருவாக்கியதாக இருக்கமுடியாது. என்றால், இது இறைவனின் வசனங்கள்தாம் என்று தோன்றுகிறது" என்று பேசத் தொடங்கியவர், சில வினாடிகளில் "முகம்மது ஓர் இறைத்தூதர்தான் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். இதோ, இப்போதே போய் அவரைச் சந்தித்து இதனை உரக்கச் சொல்லுகிறேன்" என்று அலறிக்கொண்டு ஓடத் தொடங்கிவிட்டார்.இஸ்லாத்தின் சரித்திரத்தில் உமரின் இந்த மனமாற்றம், மிக முக்கியமானதொரு திருப்பம். இதே உமர்தான் முகம்மது நபியைச் சந்தித்த மறுகணமே முஸ்லிமாக மாறியவர். அதுநாள்வரை ரகசியமாக மட்டுமே தொழுது வந்த முஸ்லிம்கள் வெளிப்படையாக மெக்கா நகரில் உள்ள க"அபாவில் தொழுகை செய்வதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்து, பாதுகாவலாக நின்றவரும் அவரேதான். பின்னாளில் அரேபிய மண்ணின் தன்னிகரற்ற இரண்டாவது கலீஃபாவாக முடிசூடி அமர்ந்தவர். (முதலாவது கலீஃபா, அபூபக்ர். இவர் அப்புறம் வருவார்.) உமரின் ஆட்சிக்காலத்தின்போதுதான் அரேபியாவுக்கு வெளியிலும் இஸ்லாம் வெகு வேகமாகப் பரவத் தொடங்கியது. உமர், கலீஃபாவாக இருந்த காலத்தில் ஜெருசலேம் எகிப்தின் ஆதிக்கத்துக்கு உட்பட்டிருந்தது. ஒரு பெரும் படையெடுப்பின் இறுதியில் எகிப்தை அப்போது ஆண்டுகொண்டிருந்த (கிறிஸ்துவர்களான) பைசாந்தியர்கள் என்கிற இனத்தவரை வீழ்த்தி, ஜெருசலேத்தில் காலெடுத்து வைத்தார் உமர்.அப்போது ஜெருசலேத்தின் ஆர்ச் பிஷப்பாக இருந்தவர், நகரின் சாவியை (அடையாளச் சாவிதான்!) தாமே மனமுவந்து உமரிடம் அளித்து, ஆளவரும்படி அழைப்பு விடுத்தது வினோதமான ஆச்சர்யம்!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 20 ஜனவரி, 2005

TNTJ ஜித்தா மண்டல பொதுக்குழு கூட்டம்

அல்லாஹ்வின் கிருபையால் 27-12-2012 வியாழன் அன்று இஷாவிற்க்குப்பின் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்- ஜித்தா மண்டலத்தின் பொதுக்குழு கூட்டம் மாநில துணைத்தலைவர் சகோ. எம்.ஐ. சுலைமான் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. மாநில துணைத்தலைவர் அவா்கள் மாநில செயல்பாடுகள் குறித்து சிறப்புரை நிகழ்த்தினார்கள். ஜித்தா மண்டலத்தின் செயல்பாடுகள் மற்றும் இந்த வருட கணக்குகள் எடுத்துரைக்கப்பட்டது. அதன் பின்  புதிய நிர்வாகம் பொதுக்குழு உறுப்பினர்களால் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டது.

புதிய நிர்வாகிகள் விபரம்:-

    சகோ. முனாஃப் - தலைவர்                                            0533562686 
    சகோ. அப்துல் பாரி - செயலாளர்                               0567122902 
    சகோ. முஹம்மது யூனுஸ் - பொருளாளர்         0502786576 
    சகோ. முஹம்மது ரஃபி -  துணைத்தலைவர்    0557968391 
    சகோ. அஹமது கபீர் - துணைச்செயலாளர்       0507021643 

நன்றியுரை மற்றும் து.ஆ வுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.



TNTJ ஜித்தா-தபூக் கிளையில் வாராந்திர மார்க்க உரை

அல்லாஹ்வின் பேரருளால் ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் 28-12-2012 வெள்ளி அன்று ஜும்.ஆவிற்க்குப்பிறகு மார்க்க உரை நிகழ்ச்சி கிளை மர்கஸில் நடைபெற்றது. இதில் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கல் கொள்கை உறுதியும் பிறர் நலமும் (பகுதி-2) என்ற தலைப்பிலும், சகோ. நிஜாம் அவர்கள் நாட்டு நடப்பும், நமது நிலையும் என்ற தலைப்பிலும், சகோ. முஜாஹித் அவர்கள் அந்த மாமனிதன்(ஸல்) என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். இதில் சுமார் 50 பேர்கள் கலந்துகொண்டு பயன் அடைந்தனர். து.ஆ மற்றும் மதிய உணவிற்க்குப்பின் நிகழ்ச்சி நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்

TNTJ ஜித்தா-தபூக் கிளையில் பேச்சு பயிற்ச்சி வகுப்பு

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 28-12-2012 வெள்ளி அன்று காலை 10 முதல் 11 மணி வரை பேச்சாளர் பயிற்ச்சி வகுப்பு கிளைத்தலைவர் சகோ.அப்துல் அஜீஸ் தலைமையில், கிளை செயலாளர் சகோ. நிஜாம் அவர்களால் நடத்தப்பட்டது. கலந்து கொண்டவர்கள் பல தலைப்புகளில் பேசி தங்களது பேச்சு திறமைகளை வளர்த்து கொண்டனர். து.ஆவிற்க்குப்பின் நிகழ்ச்சி நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

Saturday, December 29, 2012

TNTJ ஜித்தா-ஸாகர் கிளையில் பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 25-12-2012 செவ்வாய் அன்று இஷாவிற்க்குப்பிறகு ஜித்தா மண்டலம் ஸாகர் கிளையில் மார்க்க உரை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ. முனாப் அவர்கள் ஜும்.ஆ தொழுகையின் சிறப்புகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். து.ஆ விற்க்குப்பிறகு நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

TNTJ ஜித்தா-ஸாகர் கிளையில் பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 23-12-2012 ஞாயிறு அன்று இஷா தொழுகைக்குப்பின் ஜித்தா மண்டலம் ஸாகர் கிளையில் பயான் நடைபெற்றது. இதில் சகோ. முனாப் அவர்கள் வித்ரு மற்றும் லுஹா தொழுகையில் சிறப்புகள் பற்றி உரையாற்றினார்கள். பலர் கலந்துகொண்டு பயனடைந்தனர். து.ஆவிற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

நிலமெல்லாம் ரத்தம் - 16


16] அபிசீனிய மன்னன் நஜ்ஜாஷி

ஆதிகாலத்தில் தமது சமூகத்தினரை விட்டுத் தனியே பிரிந்துபோன இளைஞர்கள் யார்? அவர்களின் பின்னணி என்ன? கிழக்கு, மேற்கு திசையெங்கும் பயணம் செய்து இரு எல்லைகளையும் தொட்ட பயணி யார்? அவரது சிறப்பு என்ன? ஆன்மா என்பது என்ன?யூத மதகுருமார்களின் இந்த மூன்று வினாக்களுக்கு முகம்மது நபி என்ன பதில் சொன்னார் என்பது ஒருபுறம் இருக்கட்டும். இந்தக் கேள்விகளிலிருந்து உங்களுக்கு ஏதாவது புரிகிறதா? மேலோட்டமாகப் பார்த்தால் முதல் இரு வினாக்களும் வெறும் சொற்களால் இட்டு நிரப்பப்பட்டவை போலத் தெரிகிறதல்லவா? உள்ளர்த்தங்கள் ஏதுமின்றி, வெறுமனே வம்புக்குக் கேட்கப்பட்டதுபோல!உண்மையில் யூத மதகுருமார்களுக்கு வம்பு நோக்கம் ஏதுமில்லை. அர்த்தங்கள் பொருந்திய இந்த வினாக்களுக்கான விடைகளை அவர்கள் நிச்சயம் அறிவார்கள். சர்வநிச்சயமாக முகம்மதுவுக்கு விடைகள் தெரிந்திருக்காதென்று அவர்கள் நம்பியதுதான் இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம்.ஏனெனில், முதல் இரு வினாக்களுமே சரித்திரம் தொடர்பானவை. முகம்மது நபியின் காலமான கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்கு இது சரித்திர வினா என்றால், இக்கேள்விகளின் வயதை யூகித்துப் பார்க்கலாம். ஆதிகாலத்தில் பாதிக்காலம் அது. அதற்கும் முன்னால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்த சங்கதிகளை உள்ளடக்கிய வினாக்கள் அவை. அப்புறம், இருக்கவே இருக்கிறது ஆன்மா. இன்றைக்கு வரை அது என்ன என்கிற வினாவும், அதற்கான விடைதேடும் ஞானியரும் இருக்கவே செய்கிறார்கள்.ஆகவே, எப்படியும் முகம்மது உண்மையான இறைத்தூதர்தானா என்பது இக்கேள்விகளை அவர் எப்படி எதிர்கொள்கிறார் என்பதிலிருந்து தெரிந்துவிடும் என்று குறைஷிகளுக்கு நம்பிக்கை சொல்லி அனுப்பிவைத்தார்கள், யூத ரபிக்கள்.வினாக்களைப் பெற்றுக்கொண்ட குறைஷிகள், நேரே முகம்மதுவிடம் வந்து அவற்றை முன்வைத்து, பதில் சொல்லக் கோரினார்கள்.முகம்மது, படித்தவரல்லர். அதுவும் சரித்திரம்? வாய்ப்பே இல்லை. அந்த ஆன்மா? ம்ஹ§ம். அவர், இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மனிதர். சராசரி மனிதர். தமது உள்ளுணர்வின் அடிச்சுவட்டில் பயணம் செய்து, ஆன்மிகத்தின் சிகரங்களைக் கண்டடைந்தவர். முகம்மதுவின் ஆன்மிகம், தத்துவம் சார்ந்ததல்ல. தர்க்கங்களுக்கோ, குதர்க்கங்களுக்கோ அங்கே இடமில்லை. உள்ளார்ந்த பக்தியின் மிகக்கனிந்த நிலையில் லயித்துவாழ்ந்தவர். தாம், இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஒரு கருவி என்பதை அவர் மிகத்தெளிவாக உணர்ந்திருந்தார். தனக்கென்று எதுவும் சுயமாகத் தெரியாது என்பதை மட்டும் அவர் மிகத்தெளிவாகத் தெரிந்துவைத்திருந்ததுதான், மற்றவர்களுக்கும் அவருக்கும் உள்ள வித்தியாசம். ஜிப்ரீல் மூலம் இறைவன் தனக்களிக்கும் வேத வரிகளை அவர் தம் நண்பர்களுக்கு ஓதிக்காட்டி உணரச் செய்துகொண்டிருந்தார். தாம் படைக்கப்பட்டதன் நோக்கமே அதுதான் என்பதில் அவருக்கு ஒரு மழைத்துளி அளவு சந்தேகமும் இல்லை.ஆகவே, தம்முன் வைக்கப்பட்ட வினாக்களுக்கு மறுநாள் விடை சொல்லுவதாகச் சொல்லி, வந்தவர்களை அனுப்பிவைத்தார்.விபரீதம் இங்கேதான் வந்தது. அதெப்படி அவர் அத்தனை உத்தரவாதமாக, மறுநாள் விடை தருவதாகச் சொல்லிவிடமுடியும்? அவர் சொல்லிவிட்டார் என்பதனாலேயே அன்றிரவு ஜிப்ரீல் வந்து கேள்வித்தாளுக்கு விடைகள் எழுதிவைத்துவிட்டுப் போய்விடுவாரா என்ன?ஒருநாளல்ல; இரு நாட்களல்ல. அடுத்த பதினைந்து நாட்களுக்கு ஜிப்ரீல் வரவேயில்லை. கேள்வி கேட்ட குறைஷிகள் கைகொட்டிச் சிரிக்க ஆரம்பித்தார்கள். மிகவும் வருத்தமுற்றாலும், தன் இறைவன் ஒருபோதும் தன்னைக் கைவிடமாட்டான் என்பதில் மட்டும் முகம்மதுவுக்குத் தீராத நம்பிக்கை இருந்தது.அந்த நம்பிக்கைதான் ஜிப்ரீலை அம்முறை வரவழைத்தது என்று சொல்லவேண்டும். அதுவும் சும்மா வரவில்லை. மறுநாளே பதிலளிப்பதாக முகம்மது சொன்னது தவறு என்று கடிந்துகொள்ளும் விதத்தில் ஓர் இறைவசனத்தைத்தான் முதலில் சுமந்துகொண்டு வந்தார் ஜிப்ரீல். ("எந்த விஷயத்திலும் நிச்சயமாக நான் அதை நாளைக்குச் செய்வேன் என்று கூறாதீர்; இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் நாடினால் நாளைக்குச் செய்வேன் என்று கூறுவீராக." - அல் கஹ்ஃப், 18 : 23,24)அதன்பிறகு யூத ரபிக்கள் எழுப்பிய மூன்று வினாக்களுக்கும் விடைகள் வெளிவந்தன.முதலாவது, தமது சமூகத்தினரை விட்டுத் தனியே பிரிந்துபோன இளைஞர்களின் கதை. மத்திய ஆசியாவின் பிரசித்திபெற்ற புராணக் கதைகளுள் ஒன்று இது.அவர்கள் "இபேஸஸ் நித்திரையாளர்கள்" என்று அழைக்கப்பட்டவர்கள். கி.பி. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள். அந்தக் காலத்திலேயே உருவமற்ற ஒரே பரம்பொருளை வணங்கிவந்த அந்த இளைஞர்களுக்கு, அவர்களது சமூகத்தினராலேயே பெரும் பிரச்னை உண்டானது. உலகமே சிலை வழிபாட்டில் மூழ்கியிருக்க, இவர்கள் மட்டும் ஒரே இறைவன், உருவமற்ற இறைவன் என்று சொல்வதைப் பொறுக்காத மக்கள், அவர்களுக்குப் பல சங்கடங்களை விளைவிக்கத் தொடங்கினார்கள்.ஆகவே, தமது மக்களை விட்டு விலகி அவர்கள் ஒரு மலைக் குகைக்குள் சென்று வசிக்கத் தொடங்கினார்கள். (மொத்தம் எத்தனைபேர் என்று தெரியவில்லை.) அவர்களை அஸ்ஹாபுல்கஹ்ஃப் (குகைத் தோழர்கள் என்று அர்த்தம்) என்று அழைப்பார்கள். குகைக்குள்ளே போனவர்கள், தம்மை மறந்து உறங்கவும் ஆரம்பித்தார்கள். (குகைக்குள் சென்றவர்களை இறைவனே காதுகளைத் தட்டிக்கொடுத்து உறங்கச் செய்ததாக குர்ஆன் கூறுகிறது. ஆதாரம்: அல் கஹ்ஃப் 18:11) சுமார் முந்நூறு வருட உறக்கம்! பிறகு அவர்களது கண்விழிப்பை, அறியாமையில் மூழ்கிக் கிடந்த மக்களின் விழிப்புணர்வுக்கு உருவகமாக வைத்து நிறைவடையும் கதை அது.யூத ரபிக்களின் இரண்டாவது வினா, கிழக்கையும் மேற்கையும் பயணத்தால் அளந்த யாத்ரீகரைப் பற்றியது. அவரது பெயர், துல்கர்னைன். (இச்சொல்லுக்கு இரண்டு கொம்புகள் உடையவர் என்று பொருள்.)அவர்களது மூன்றாவது கேள்வி, ஆன்மா குறித்து. அரபு மொழியில் ரூஹ் என்றால் ஆன்மா. இக்கேள்விக்கு முகம்மதுவுக்குக் கிடைத்த பதில்: "அதைப்பற்றி மிகச் சொற்ப ஞானமே உங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. ஆதலால், அதன் நுட்பங்களை நீங்கள் அறிந்துகொள்ள முடியாது.""முகம்மது என்ன செய்வார்? இறைவசனம் அப்படித்தான் வந்தது! ஆகவே, தமக்கு வழங்கப்பட்ட இறைவசனங்களை அப்படியே அவர் குறைஷிகளிடம் பதில்களாகத் தெரிவித்துவிட்டார்.முகம்மது நபியின் பதில்களைக் கேட்ட யூத ரபிக்களுக்குப் பெருத்த தர்மசங்கடம் ஏற்பட்டது. நிச்சயமாக முகம்மதால் பதில் சொல்ல முடியாது என்று அவர்கள் நம்பிக்கொண்டிருந்தது ஒரு காரணம். அவர் பதில் தந்துவிட்டதால், அதைச் சரி என்றோ, சரியில்லை என்றோ ஒரு சொல்லில் சொல்லிவிடமுடியாதது இரண்டாவது காரணம்.முகம்மது ஒரு நபிதான் என்று அவர்கள் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். ஆயினும் அப்படி ஒப்புக்கொள்ள அவர்கள் மனம் சம்மதிக்கவில்லை. குறைஷிகளுக்கு, ரபிக்களின் இந்த இரண்டுங்கெட்டான்தனம் புரியவில்லை. "முகம்மது ஒரு நபிதான்" என்று ரபிக்கள் சொல்லிவிட்டால்கூட, அவர்கள் அதை ஒப்புக்கொள்ளத் தயாராக இல்லை! அவர்கள் வரையில் முகம்மது ஒரு போலி. பித்தலாட்டக்காரர். இந்த எண்ணத்தை மாற்றிக்கொள்ள அவர்கள் தயாராக இல்லை.ஆகவே, ரபிக்களின் கருத்தை அறிய மேலும் ஆர்வம் காட்டாமல் புறப்பட்டு விட்டார்கள்.இந்த மூன்று கேள்விகள் கேட்கப்பட்டு, முகம்மது அவற்றுக்குத் துல்லியமான பதில்களை அளித்த சம்பவத்தால் இரண்டு முக்கியமான விளைவுகள் ஏற்பட்டன. இஸ்லாமியர்களின் சரித்திரத்தில் அந்த இரண்டு விளைவுகளுமே குறிப்பிடத்தகுந்த பங்கு வகிப்பவை.முதலாவது, பாதி நம்பிக்கை, பாதி அவநம்பிக்கை கொண்டிருந்த அரேபியர்கள் பலர், முகம்மதை முழுவதுமாக நம்பி, அவர் காட்டிய பாதையில் நடக்க மனமுவந்து ஒப்புக்கொண்டார்கள். இதன்விளைவாக, அரேபியர்கள் பலர் முஸ்லிம் ஆனார்கள். பிரசாரங்களினால், கிறிஸ்துவம் பரவி கொண்டிருந்த அதே காலகட்டத்தில், இந்த ஒரு சம்பவத்தால், எவ்வித பிரசாரமும் இன்றி தானாகவே இஸ்லாம் பரவத் தொடங்கியது. முகம்மதுவைச் சந்திக்கவும் அவருடன் பேசவும் பல்வேறு தேசங்களிலிருந்தும் அரேபியர்கள் மெக்காவை நோக்கி வரத் தொடங்கியது இதன் பிறகுதான்.இரண்டாவது விளைவு, மிகவும் பாதகமானது. குறைஷிகள், முஸ்லிம்கள் மீது மிகக் கடுமையான வன்முறையைக் கட்டவிழ்த்து விட ஆரம்பித்தார்கள். ஒருவர் முஸ்லிம் என்று தெரிந்தாலே கட்டி வைத்துத் தோலை உரிக்கிற அளவுக்கு அவர்களது வன்முறை எல்லை கடந்துபோனது.ஆகவே, கொஞ்சமேனும் நிலைமை சீராகும் வரை முஸ்லிம்கள் வேறு தேசம் எங்காவது போய் வசிக்கலாம் என்றொரு யோசனை முகம்மது நபியிடம் முன்வைக்கப்பட்டது. அப்படி இடம் பெயர்ந்து வசிப்பதற்கு முகம்மது சுட்டிக்காட்டிய இடம், அபிசீனியா. (ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருக்கும் இன்றைய எத்தியோப்பியா.)கண்ணியமான மன்னன் (அப்போதைய அபிசீனிய மன்னனின் பெயர் நஜ்ஜாஷி); மத நல்லிணக்கம் பேணுகிற தேசம் என்று சொல்லி, முகம்மதுவே தம் மக்களை அங்கே அனுப்பிவைத்தார்.அன்றைக்கு எத்தியோப்பியா ஒரு கிறிஸ்துவ நாடு. நஜ்ஜாஷியும் ஒரு கிறிஸ்துவர்தாம். ஆயினும் நம்பிக்கையுடன் முஸ்லிம்கள் அங்கே புறப்பட்டுப் போனார்கள். முஸ்லிம்கள் முதல்முதலில் இடம்பெயர்ந்த சம்பவம் அதுதான். மெக்காவைத் தாண்டி இஸ்லாம் வெளியே புறப்பட்டதும் அப்போதுதான்.ரகசியமாகத்தான் அவர்கள் மெக்காவைவிட்டுப் புறப்பட்டுப் போனார்கள் என்றாலும், குறைஷிகளுக்கு அவர்கள் அபிசீனியாவில் நிம்மதியாக வசிப்பதும் பிடிக்கவில்லை. ஆகவே, அபிசீனிய மன்னரின் மனத்தில் முஸ்லிம்களைப் பற்றிய அபாய அறிவிப்பை ஒரு விதையாக விதைத்து, எப்படியாவது அவர்களை நாடு கடத்தச் செய்துவிட வேண்டும் என்று விரும்பினார்கள். இரண்டு தூதுவர்களை அபிசீனியாவுக்கு அனுப்பினார்கள். (அந்தத் தூதுவர்களுள் ஒருவன் பெயர் அம்ர் இப்ன் அல் ஆஸ். இன்னொரு தூதனின் பெயர் தெரியவில்லை.)இந்தத் தூதர்களின் பணி என்னவெனில், எப்படியாவது அபிசீனிய மன்னரைச் சந்தித்து, மெக்காவிலிருந்து அகதிகளாக வந்திருக்கும் முஸ்லிம்களை நாடு கடத்தச் செய்துவிடவேண்டும் என்பது. முடிந்தால் அவர்களுக்கு மரண தண்டனையே கிடைக்கும்படி செய்வது. குறைந்தபட்சம் நாடு கடத்தலாவது அவசியம்.அவர்களும் தக்க பரிசுப் பொருள்களுடன் மன்னரைச் சந்தித்துப் பேசினார்கள்."மன்னா! உங்கள் தேசத்தில் அடைக்கலம் தேடி வந்திருக்கிற சிலரை உங்களுக்கு அடையாளம் காட்டுகிறோம். அவர்கள் முட்டாள்தனமாகத் தங்கள் மதத்தைக் கைவிட்டுவிட்டார்கள். கிறிஸ்துவர்களாக மாறித்தான் உங்கள் தேசத்துக்கு வந்திருக்கிறார்களா என்றால் அதுவுமில்லை. ஏதோ ஒரு புதிய மதம். அவர்களது உறவினர்களும் இனத் தலைவர்களும் இவர்களைத் திருப்பி அனுப்பும்படி வேண்டிக்கொண்டிருக்கிறார்கள். தமது சொந்த மதத்தையும் விடுத்து, உங்கள் மதத்தையும் ஏற்காத அவர்களைத் தயவுசெய்து திருப்பி அனுப்பிவிடுங்கள்"" என்று ஆரம்பித்து, விஸ்தாரமாகத் தங்கள் நோக்கத்தை எடுத்து வைத்தார்கள்.மன்னன் நஜ்ஜாஷி யோசிக்க ஆரம்பித்தான். "சரி, அழைத்து வாருங்கள் அந்தப் புதிய மதத்தவர்களை" என்று உத்தரவு கொடுத்தான்.அபிசீனிய மன்னனின் அவையில், தாங்கள் யார் என்றும், தங்கள் மதம் என்ன, எத்தகையது என்பது குறித்தும் அன்றைக்கு முஸ்லிம்கள் எடுத்துச் சொன்ன சில வரிகள் இன்றைக்கும் இஸ்லாமியர்கள் திரும்பத்திரும்ப நினைவுகூரும் ஒரு சிற்றுரை.இஸ்லாத்தைக் குறித்து ஆயிரமாயிரம் புத்தகங்கள் அளித்தாலும் தீராத வியாக்கியானங்களை அந்தச் சில வரிகள் மிக அழகாகப் புரியவைத்துவிடுகின்றன. அரேபிய மண் முழுவதும் இஸ்லாம் வெகு வேகமாகப் பரவி வேரூன்றியதன் தொடக்கம் அந்தச் சிறு விளக்க உரைதான்.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 16 ஜனவரி, 2005