Pages

Saturday, February 9, 2013

நிலமெல்லாம் ரத்தம் - 28

28 - கிறிஸ்தவர்களிடம் கரிசனம்:-

நம்பமுடியாத அளவுக்கு இரக்க சுபாவம், அன்பு, கனிவு, பொறுமை, போரில் நாட்டமின்மை போன்ற குணங்களைக் கொண்ட மன்னர்கள் மிகவும் அபூர்வம். இத்தகையவர்களைச் சரித்திரத்துக்குள் நுழைந்து தேடினால் இரு கை விரல்களுக்குள் அடங்கிவிடும் எண்ணிக்கை. குறிப்பாக, மத்திய ஆசிய சுல்தான்களுள் இத்தகைய குணம் படைத்தவர்கள் மிக மிக சொற்பம். அந்தச் சொற்ப எண்ணிக்கைக்குள் அடங்குபவர்களில் சுல்தான் சலாவுதீன் முதன்மையானவர் மட்டுமல்ல; சற்று வித்தியாசமானவரும் கூட. ஜெருசலேம் நகரை சலாவுதீனின் படைகள் சூழ்ந்து நின்றதும் பொதுமக்களுக்கு அவர் விடுத்த வேண்டுகோள் எத்தனை சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததோ, அதே அளவு முக்கியத்துவம் கொண்டது, அந்த அறிவிப்புக்குப் பின்னால் நடந்த சம்பவங்களும்.

உண்மையில் ஜெருசலேம் மக்கள் பெரும்பாலும் அப்போது கிறிஸ்துவர்கள்; ஒரு முழுநீள யுத்தத்துக்கு மனத்தளவில் தயாராக இல்லை. சலாவுதீனின் தொடர் வெற்றிகள் ஏற்படுத்தியிருந்த பயம் அதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம். இத்தனை தூரம் இறங்கிவந்து அன்பாகப் பேசுகிற சுல்தானைப் பொருட்படுத்தாமல் விட்டால் பின்விளைவு வேறு விதமாக இருக்குமோ என்கிற யோசனையும் காரணமாயிருக்கலாம். பேச்சுவார்த்தை மூலம் ஒரு சமாதானத் தீர்வு சாத்தியமா என்று கண்டறியவே அவர்கள் விரும்பினார்கள். ஆனால் ஜெருசலேத்தை அப்போது ஆண்டுகொண்டிருந்த கிறிஸ்துவ ஆட்சியாளர்கள் வேறு மாதிரி சிந்தித்தார்கள். முஸ்லிம்படை நகருக்கு வெளியே முற்றுகையிட்டிருக்கிறது. சரி. எத்தனை காலம் அவர்களால் தாக்குப்பிடிக்க முடியும்? நகருக்குள் போதுமான உணவு, மருத்துவ வசதிகள் அப்போது இருந்தன. பல மாதங்கள் வரையிலும் கூடச் சமாளித்துவிட முடியும். கோட்டைக் கதவுகளைத் திறக்காமலேயே ஆனவரை முஸ்லிம் வீரர்களைச் சோர்வு கொள்ளச் செய்வது. அதையும் மீறி யுத்தம் தொடங்குமானால் அப்போது பார்த்துக்கொள்ளலாம். தவிர, அதற்குள் ஐரோப்பாவிலிருந்து மேலும் சில படை உதவிகள் வந்து சேரலாம்.

ஆட்சியாளர்களின் இந்தத் திட்டம் சிலுவைப்போர் வீரர்களுக்கே பிடிக்கவில்லை என்பதுதான் இதில் முக்கியமானது. அவர்கள் தொடர் யுத்தங்களால் அப்போது மிகவும் சோர்ந்திருந்தார்கள். தவிர, கோட்டைக்குள் சிறைப்பட்டிருப்பது போல அடைந்து கிடப்பதிலும் அவர்களுக்கு விருப்பம் இல்லை. நிச்சயமாகத் தாங்களே கதவுகளைத் திறந்து யுத்தத்தைத் தொடங்கினால், தோல்வியை மட்டுமே சந்திக்க நேரிடும் என்பதையும் அவர்கள் அறிந்திருந்தார்கள். ஆகவே, தங்கள் நிலையை அவர்கள் ஆட்சியாளர்களிடம் வெளிப்படையாகச் சொல்லிவிட்டார்கள். யுத்தம் தொடங்கினால் வெற்றி கிடைப்பது இம்முறை கஷ்டம். வீம்புக்காக முற்றுகையை அனுமதித்துக்கொண்டிருந்த அப்போதைய ஜெருசலேம் ஆட்சிமன்றத்துக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. மாதங்கள் கடந்தும் முற்றுகை முற்றுப்பெறாததை எண்ணிக் கொஞ்சம் கவலைப்படத் தொடங்கினார்கள். இப்படியே தாக்குப்பிடிப்பது சிரமம் என்று எப்போது புரிந்ததோ, அப்போது சுல்தான் சலாவுதீனுக்கு அமைதித் தூது அனுப்பினார்கள்.

சுல்தான் புன்னகை செய்தார். யுத்தம் வேண்டாம். அவ்வளவுதானே? அவர் முதலில் முன்வைத்த கோரிக்கையும் அதுதான். ஆகவே தம் சம்மதத்தைத் தெரிவித்ததோடு அல்லாமல் இன்னும் சில படிகள் இறங்கிவந்து ஜெருசலேம்வாசிகளுக்குச் சில சலுகைகளையும் அறிவித்தார்.

அந்த விநாடியிலிருந்து பாலஸ்தீன் முழுமையாக இஸ்லாமியப் பேரரசின் கட்டுப்பாட்டின்கீழ் வந்துவிடும். அதன்பின் ஜெருசலேத்தில் உள்ள மக்கள் அனைவரும் பேரரசின் குடிமக்களாக அங்கீகரிக்கப்படுவார்கள். உள்ளூர் கிறிஸ்துவர்கள், பல ஐரோப்பிய தேசங்களிலிருந்து வந்து நிரந்தரமாகத் தங்கியிருக்கும் கிறிஸ்துவர்கள் அனைவருக்குமே இது பொருந்தும். மத வித்தியாசம் பார்க்கப்பட மாட்டாது. யூதர்கள் மற்றும் முஸ்லிம்களுடன் அவர்கள் சமமாக அங்கே வாழலாம். ஆனால், இந்தச் சலுகை ராணுவ வீரர்களுக்குப் பொருந்தாது. (அதாவது சிலுவைப்போர் வீரர்களுக்குப் பொருந்தாது.) அவர்கள் மட்டும் தம் குடும்பத்தினருடன் நாற்பது தினங்களுக்குள் ஜெருசலேத்தை விட்டு வெளியேறிவிட வேண்டும். உயிருக்கு உத்தரவாதம் உண்டு. நகரை விட்டு வெளியேறும் சிலுவைப்போர் வீரர்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட மாட்டாது. ஆனால் அப்படி வெளியேறுவதற்குப் பிணையத் தொகையாக அவர்கள் தலைக்குப் பத்து தினார்கள் (இந்த தினார் என்பது அந்நாளைய சிரிய நாணயத்தைக் குறிக்கும்.) கட்ட வேண்டும். வீரர்களின் குடும்பப் பெண்கள் தலைக்கு ஐந்து சிரிய தினார் செலுத்தினால் போதும். குழந்தைகள் என்றால் ஒரு தினார். இந்தப் பிணையத் தொகையைச் செலுத்தாதவர்கள் சுல்தானின் அடிமைகளாகத் தொடர்ந்து இருக்க வேண்டியிருக்கும் என்றும் உத்தரவிடப்பட்டது.

இதன்பிறகுதான் வியப்பூட்டும் நிகழ்ச்சிகள் ஆரம்பமாயின. சுல்தான் சலாவுதீன், அரசாங்க ரீதியில் எடுக்கவேண்டிய நடவடிக்கையாக மேற்சொன்ன உத்தரவைப் பிறப்பித்துவிட்டார். ஆனால் உடனே அவருக்கு சிலுவைப்போர் வீரர்களின் மீது சற்றே இரக்கம் உண்டானது. உயிருக்குப் பயந்திருக்கும் வீரர்களிடம் கப்பம் வசூலிப்பது பாவமல்லவா என்று அவருக்குத் தோன்றிவிட்டது. ஆகவே, பிணையக் கைதிகள்தான் என்றாலும் தமது சாம்ராஜ்ஜிய எல்லைக்குள் வசிப்பவர்கள் அல்லவா? ஆகவே அவர்களும் தம் குடிமக்கள்தான். அவர்களது கஷ்டத்தைப் போக்குவதும் தன்னுடைய கடமையே என்று நினைத்தவர், கோட்டைக்குள் இருந்த அறுபதாயிரம் சிலுவைப்போர் வீரர்களுள் பத்தாயிரம் பேருக்கான பிணையத் தொகையைத் தானே தன் சொந்தப் பணத்திலிருந்து கட்டிவிடுவதாக அறிவித்தார்! அத்துடன் இன்னும் ஏழாயிரம் வீரர்களுக்கான தொகையைத் தன் சகோதரர் சைபுத்தீன் என்பவர் அளிப்பார் என்றும் சொல்லிவிட்டார்.

சுல்தானே இப்படியரு நடவடிக்கை மேற்கொள்வதைப் பார்த்துவிட்டு அவரது அமைச்சர் பெருமக்கள், தளபதிகள் சும்மா இருக்க முடியுமா? ஒவ்வொருவரும் ஆளுக்குக் கொஞ்சம் பணம் போட்டு முடிந்தவரை சிலுவைப்போர் வீரர்களுக்கான பிணையத் தொகையைக் கட்ட ஆரம்பித்துவிட்டார்கள். மிகப்பெரிய குற்றவாளிகள் என்று தனித்தனியே அடையாளம் காணப்பட்ட சிலுவைப்போர் வீரர்கள் சிலரைத் தவிர, பெரும்பான்மையான கிறிஸ்துவ வீரர்கள் சுல்தான் சலாவுதீனின் இத்தகைய நடவடிக்கையால் ஒரு பைசா செலவில்லாமல் சுதந்திரமாக திரிபோலிக்கும் டைர் நகருக்கும் செல்ல முடிந்தது. நூற்றுக்கணக்கான கிறிஸ்துவ வீரர்கள் தங்களது வயது முதிர்ந்த பெற்றோர்களைத் தலையில் தூக்கிக்கொண்டு நடந்து செல்வதைப் பார்த்த சலாவுதீன், அவர்களுக்கு அரசாங்கச் செலவில் கழுதைகள் வாங்கிக்கொடுக்கவும் உத்தரவிட்டார்!

ஜெருசலேத்தின் அரசியாக அப்போது இருந்தவர் பெயர் சிபில்லா. அவரது கணவரும் ஜெருசலேத்தின் மன்னருமாக இருந்தவரின் பெயர் காட்ஃபிர்டி பொயிலான். அன்றைய தேதியில் ஒட்டுமொத்த மத்திய ஆசிய முஸ்லிம்களுக்கும் இந்த பொயிலான்தான் சரியான வில்லன். செய்த அட்டூழியங்களும் படுகொலைகளும் கொஞ்ச நஞ்சமல்ல. வாழ்நாளெல்லாம் அன்பையும் இரக்கத்தையும் கருணையையும் மட்டுமே போதித்த இயேசுநாதரின் பெயரைச் சொல்லிக்கொண்டு, ரத்தத்தால் ஒரு சாம்ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்பப் பாடுபட்டுக்கொண்டிருந்தவர் அவர்.

அத்தகைய மன்னனின் பட்டத்து ராணியான சிபில்லா, நகரை விட்டு வெளியேறியபோது ஒரு முஸ்லிம் வீரர்கூட அவமரியாதையாக நடந்துகொண்டுவிடக் கூடாது என்று உத்தரவிட்டிருந்தார் சலாவுதீன். ராணிக்கு உரிய மரியாதைகள் செய்து, அவருடன் வந்த பல்லாயிரக்கணக்கான பெண்களுக்கு வேண்டிய பண உதவிகள், ஆடைகள், உணவுப்பொருள்கள் போன்றவற்றை அளித்து, கௌரவமாகவே வழியனுப்பிவைத்தார்! என்ன பிரச்னையாகிவிட்டதென்றால், இப்படி பாலஸ்தீனிலிருந்து புறப்பட்டு வெளியேபோன கிறிஸ்துவ சிலுவைப்போர் வீரர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் அண்டை நாடுகளில் அடைக்கலம் கிடைக்கவில்லை. அவர்கள் எகிப்துக்குப் போனபோது எந்த நகரமும் அவர்களைச் சேர்த்துக்கொள்ளவில்லை. ஒரு மைல் தூரத்தில் வருகிறார்கள் என்பது தெரிந்ததுமே நகர மக்கள் கோட்டைக்கதவுகளைச் சாத்திக்கொண்டுவிடுவார்கள். ஆச்சர்யம், அப்போது அங்கிருந்தவர்களும் கிறிஸ்துவர்களே!

ஆகவே, குடிமக்களாக வாழ வழியற்று அவர்கள் அகதிகளாக சிரியாவுக்கு வந்து சேர்ந்தார்கள். அன்று சிரியாவில் அகதிகளுக்கான நிவாரணத் திட்டங்கள் என்று ஏதும் கிடையாது. ஊரில் சுற்றித்திரியலாம். அதற்குத் தடையில்லை. ஆனால் உதவிகள் கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதமில்லை. அகதிகள் நல்வாழ்வு, மறுவாழ்வு குறித்தெல்லாம் அன்றைய சிரிய அரசு சிந்தித்திருக்கவில்லை. ஆகவே பல்லாயிரக்கணக்கான ஜெருசலேம் அகதிகள் அன்றைக்குச் சிரியாவில் பட்டினியிலும் குளிரிலும் மடிந்துபோனார்கள். ஊர்களுக்கு ஒதுக்குப்புறமாக, பெரும்பாலும் ஆற்றங்கரைகளில், மணல்வெளி ஓரங்களில் கூடாரம் அடித்துத் தங்கியிருந்த இந்த சிலுவைப்போர் வீரர்களின் குடியிருப்புப் பகுதிகளை கொடுமையான நோய்கள் தாக்கின. சரியான சுகாதார வசதிகள் இல்லாததாலும் பலர் இறந்தார்கள்.

திரிபோலியில் கோட்டைக்கதவுகள் அடைக்கப்பட்டு ஆண்களும் பெண்களும் நாள் கணக்கில் கவனிப்பாரின்றி வெளியே கிடந்தபோது, பசியால் துடித்த தன் குழந்தையொன்றுக்கு உணவிட முடியவில்லை ஒரு தாயால். வேறு வழியே இல்லாமல் கதறியபடி அக்குழந்தையைக் கடலில் வீசிக் கொன்றாள். பிறகு திரிபோலி நகரின் கோட்டையை நோக்கித் திரும்பி நின்று அந்தத் தாய் சபித்ததை சிலிர்ப்புடன் அத்தனை சரித்திர ஆசிரியர்களும் பதிவு செய்திருக்கிறார்கள். கோட்டைக்கு உள்ளே இருந்தவர்களும் கிறிஸ்துவர்கள். வெளியே அல்லாடிக்கொண்டு, அகதிகளாக நின்றவர்களும் கிறிஸ்துவர்கள். சொந்த சமூகத்து மக்களுக்கே உதவ மறுத்த கோட்டைக் கிறிஸ்துவர்கள் நாசமாகப் போகட்டும். அவர்களது பெருங்கனவான மத்திய ஆசியாவில் கிறிஸ்துவ சாம்ராஜ்ஜியம் என்கிற எண்ணம் நசிந்து போகட்டும். ஒட்டுமொத்த அரபு மண்ணிலிருந்தும் கிறிஸ்துவர்கள் வேரோடு பெயர்த்து வீசப்படட்டும்.

ஒரு தாயின் சாபம்!

இதனால்தான் என்று சொல்லிவிட முடியாதென்றாலும் அப்படித்தான் பின்னால் ஆகிப்போனது. எத்தனைக்கெத்தனை ஐரோப்பாவில் கிறிஸ்துவம் வலுவாக வேரூன்றிக்கொண்டதோ, அத்தனைக்கு அத்தனை அரேபியாவில் அதன் செல்வாக்கு நாளுக்கு நாள் தேய்ந்து மறையத் தொடங்கிவிட்டது.

இவையெல்லாம் ஒரு புறமிருக்க, ஜெருசலேத்தை முற்றுகையிட்டு, வெற்றியும் பெற்றுவிட்டிருந்த சுல்தான் சலாவுதீன் இன்னும் கோட்டைக்கு வெளியேதான் இருக்கிறார். வெற்றி வீரராக, நகருக்குள் அவர் காலெடுத்து வைக்கவில்லை. ஏன் அப்படி? விசாரித்த அவரது மந்திரி பிரதானிகளுக்கு அவர் அளித்த பதில் இன்னும் வினோதமானது. “மொத்த சிலுவைப்போர் வீரர்களும் நகரை விட்டு வெளியேறிவிட்டார்களா என்று தெரியவில்லை. இன்னும் ஒரு சிலர் நகரில் இருக்கலாம். அவர்கள் இருக்கும்போதே நாம் வெற்றி விழா ஊர்வலமாக உள்ளே போனால் அவர்கள் மனம் மிகவும் வருத்தப்படும். என்னதான் இருந்தாலும் அவர்களும் குறிப்பிட்ட காலம் இந்நகரை ஆட்சிபுரிந்தவர்கள் அல்லவா? அவர்களை நாம் அவமானப்படுத்தக்கூடாது!’’ இப்படியும் ஒரு மன்னர் இருந்திருக்கிறார் என்றால் நம்புவது கொஞ்சம் சிரமம்தான். ஆனால் சலாவுதீன் இப்படித்தான் இருந்திருக்கிறார்! அதற்கு என்ன செய்வது?

சலாவுதீன் ஜெருசலேம் நகரை முறைப்படி கையகப்படுத்தி, தமது அதிகாரத்தை அங்கே நிலைநாட்டிவிட்டு, சாவகாசமாக அரசுப்பணிகளில் ஈடுபடத் தொடங்கியபோது, நகரிலிருந்து வெளியேறிய கிறிஸ்துவர்கள் அண்டை நாடுகளில் பல கஷ்டங்கள் அனுபவிக்கிற செய்தி வந்து சேர்ந்தது. அடடாவென்று உடனே மீண்டும் பரிதாபப்பட்டவர், அவர்கள் அத்தனை பேரும் தமது ஆளுகைக்கு உட்பட்ட டைர் (Tyre) நகரில் குடியேறி வசிக்கலாம் என்று அனுமதியளித்தார். சிலுவைப்போர் வீரர்கள் எகிப்திலிருந்தும் சிரியாவிலிருந்தும் இன்னும் பல இடங்களிலிருந்தும் டைருக்கு வந்து சேர்ந்தார்கள். சுல்தான் சலாவுதீன் இத்தனை கருணையுள்ளவராக இருப்பார் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. ஆகவே ஏதாவது செய்து அந்தக் கருணைக்கு ‘நன்றி’ சொல்லவேண்டாமா? டைருக்கு வந்த சிலுவைப்போர் வீரர்கள் உடனே அங்கிருந்த கிறிஸ்துவ சமூகத்தினர் அத்தனை பேரையும் ஒன்று திரட்டினார்கள். ஜெருசலேத்திலிருந்து சலாவுதீனையும் முஸ்லிம் படையினரையும் என்ன செய்து ஓட ஓட விரட்டலாம் என்று உட்கார்ந்து ஆலோசிக்க ஆரம்பித்தார்கள்!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 27 பெப்ரவரி, 2005

No comments:

Post a Comment