Pages

Friday, November 22, 2013

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு : பாகம் 1 

இன்றைய சவூதி அரேபியாவில் உள்ள மக்கா என்னும் நகரத்தில் கி.பி. 571 ஆம் ஆண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்தார்கள். குலப் பெருமையையும், சாதி வேற்றுமையையும் வேரோடு பிடுங்கி எறிந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அன்று அரபு மண்ணில் உயர்ந்த குலமாகக் கருதப்பட்ட குரைஷ் என்னும் குலத்தில் பிறந்தார்கள். தாயின் வயிற்றிருக்கும் போதே தந்தை அப்துல்லாஹ்வையும், தமது ஆறாம் வயதில் தாயார் ஆமினாவையும் பறி கொடுத்து அனாதையாக நின்றார்கள். பின்னர் பாட்டனார் அப்துல் முத்தலிப்பின் அரவணைப்பிலும், அவர் மரணித்த பின் பெரிய தந்தை அபூதாலிபின் பராமரிப்பிலும் வளர்ந்தார்கள்.

சிறு வயதில் யாருக்கும் பாரமாக இருக்கக் கூடாது என்பதால் அற்பமான கூலிக்காக ஆடு மேய்த்தார்கள். ஓரளவு விபரம் தெரிந்தவுடன் தமது பெரிய தந்தையுடன் சேர்ந்து சிரியா நாட்டுக்குச் சென்று வியாபாரம் செய்தார்கள். இதனால் இளமையில் கல்வி கற்பதற்கான வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்கவில்லை. எழுதவோ, படிக்கவோ அவர்களுக்குத் தெரியாது. தமது 25 வது வயதில் வியாபாரத்தைக் கற்றுத் தேர்ந்தார்கள். மக்காவில் மிகப் பெரிய செல்வச் சீமாட்டியாகவும், பெரும் வணிகராகவும் திகழ்ந்த கதீஜா அம்மையார் நபிகள் நாயகத்தின் ஒழுக்கம், பண்பாடு, நேர்மை மற்றும் வியாபாரத் திறமை ஆகியவற்றைக் கேள்விப்பட்டு நபிகள் நாயகத்தை மணந்து கொள்ள விரும்பினார். நபிகள் நாயகத்தை விட அதிக வயதுடையவராகவும், விதவையாகவும் இருந்த கதீஜா அம்மையாரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மணந்து கொண்டார்கள். இதன் மூலம் மக்காவில் மிகப் பெரிய செல்வந்தர் என்ற நிலைக்கு உயர்ந்தார்கள். தமது நாற்பது வயது வரை அவர்கள் சாதாரண மனிதராகவும், ஒரு வியாபாரியாகவும் தான் இருந்தார்கள். நாற்பது வயது வரை எந்த ஒரு இயக்கத்தையும் அவர்கள் தோற்றுவிக்கவில்லை. எந்த ஒரு கொள்கைப் பிரச்சாரமும் செய்ததில்லை.

நாற்பது வயது வரையிலான நபிகள் நாயகத்தின் வரலாற்றுச் சுருக்கம் இது தான். நாற்பது வயதுக்குப் பின்னுள்ள நபிகள் நாயகத்தின் வாழ்க்கை இரு பெரும் அத்தியாயங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஒன்று மக்கா வாழ்க்கை. மற்றொன்று மதீனா வாழ்க்கை. இது குறித்தும் ஓரளவு அறிந்து கொள்வோம். நாற்பது வயது வரை சராசரி மனிதர்களில் ஒருவராக இருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது நாற்பதாம் வயதில் தம்மைக் கடவுளின் தூதர் என்று பிரகடனம் செய்தார்கள்.

'அகில உலகையும் படைத்தவன் ஒரே கடவுள் தான்; அந்த ஒரு கடவுளைத் தவிர யாரையும், எதனையும் வணங்கக் கூடாது என்பது தான் கடவுளிடமிருந்து தமக்கு வருகின்ற முக்கியமான செய்தி' என்றார்கள். 'கொலை, கொள்ளை, வட்டி, சூதாட்டம், விபச்சாரம், போதைப் பொருட்கள், பொய், பித்தலாட்டம், மோசடி, ஏமாற்றுதல், போன்ற எல்லாத் தீமைகளிலிருந்தும் மனிதர்கள் விலகி இருக்க வேண்டும்' என்ற செய்தியும் கடவுளிடமிருந்து தமக்கு வருவதாகக் கூறினார்கள். கஃபா என்னும் ஆலயத்திலும், அதைச் சுற்றிலும் 360 சிலைகளை நிறுவி தினம் ஒரு சிலைக்கு வழிபாடு நடத்திய சமுதாயத்தில் 'ஒரே ஒரு கடவுளை மட்டும் தான் வணங்க வேண்டும்; மற்றவை கடவுள் அல்ல' என்று கூறினால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை வரலாற்றைப் படிக்காதவர்களும் அனுமானிக்க முடியும். 

உண்மையாளர், நம்பிக்கைக்கு உரியவர் என்றெல்லாம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பாராட்டிய மக்கள் இந்தக் கொள்கை முழக்கத்துக்குப் பின் கடும் பகைவர்களாகி விட்டனர். பைத்தியம் என்று பட்டம் சூட்டினார்கள். அவர்களையும், அவர்களது கொள்கையை ஏற்றுக் கொண்ட விரல் விட்டு எண்ணக்கூடிய சிலரையும் சொல்லொன்னாத துன்பத்துக்கு ஆளாக்கினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை முதல் எதிர்த்தவர்களும், கடுமையாக எதிர்த்தவர்களும் அவர்களது குடும்பத்தினர் தாம் என்பது குறிப்பிடத்தக்கது. 'தமது குலத்தைச் சேர்ந்த ஒருவரே எல்லோரும் சமம்' என்று பிரச்சாரம் செய்கிறாரே! தாழ்த்தப்பட்டவர்களையும், இழிகுலத்தோரையும், கறுப்பர்களையும், அடிமைகளையும் உயர் குலத்துக்குச் சமம் என்கிறாரே! தம்மோடு சரிக்குச் சரியாக அவர்களையும் மதித்து குலப்பெருமையைக் கெடுக்கிறாரே' என்ற ஆத்திரத்தில் தம்மை மிகவும் உயர் குலம் என்று நம்பிய நபிகள் நாயகத்தின் குலத்தினர் கடுமையாக நபிகள் நாயகத்தை எதிர்த்தார்கள்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்...............................

No comments:

Post a Comment