Pages

Wednesday, February 6, 2013

நிலமெல்லாம் ரத்தம் - 27

27 - சுல்தான் சலாஹுதீன்

பாலஸ்தீன் என்னும் பெருநிலப்பரப்பின் மிக முக்கிய அடையாளமான ஜெருசலேம் என்கிற நகரைக் கைப்பற்றுவது என்னும் நோக்கமுடன் தொடங்கப்பட்டன, சிலுவைப்போர்கள். உண்மையில் நிலத்தைக் கைப்பற்றுவதல்ல இப்போர்களின் நோக்கம். அது மட்டுமே என்றால் வழக்கமான நாடு பிடிக்கும் யுத்தங்களுள் ஒன்றாக இதுவும் கருதப்பட்டிருக்கும். மாறாக, இஸ்லாத்தின் பரவலைத் தடுத்து, மத்திய ஆசியாவில் கிறிஸ்துவ சாம்ராஜ்ஜியம் ஒன்றை நிறுவுவதன் மூலம் நிரந்தரமாக கிறிஸ்துவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையில் ஓர் இரும்புத்திரை எழுப்புவதே சிலுவைப்போர்களின் ஆதார நோக்கமாக இருந்திருக்கிறது.

கிறிஸ்துவம் எத்தனையோ வழிகளில் பரவிக்கொண்டிருந்தது. பிரசாரம் அவற்றுள் ஒன்று. மக்கள் இயல்பான உணர்ச்சிப்பெருக்கால் கிறிஸ்துவத்துக்கு மாறிக்கொண்டிருந்தது இன்னொன்று. நாடுகளை வெற்றி கொள்வதன் மூலம் மதத்தைப் பரவலாக்குவது செயல்திட்டத்தின் மூன்றாவது அம்சம்தான். ஆயினும் ஜெருசலேம் விஷயத்தில் ஐரோப்பிய சிலுவைப்போர் வீரர்கள் நடந்துகொண்டவிதம் பற்றி சரித்திரம் அத்தனை நல்லவிதமாகக் குறிப்பிடுவதில்லை. யுத்த நெறிமுறைகளை அவர்கள் காற்றில் பறக்க விட்டார்கள் என்பது மிக மேலோட்டமான ஒரு குற்றச்சாட்டு. வெற்றி கொள்ளும் பகுதிகளில் இருந்த மாற்று மதத்தவர்களை அவர்கள் காட்டுமிராண்டிகள் போல் வெட்டிச் சாய்த்ததுதான் இன்றளவும் சிலுவைப்போர்களின் முதல் அடையாளமாகச் சொல்லப்பட்டுவருகிறது.

மிஸாட் என்கிற சரித்திர ஆசிரியர், விட்டால் உலகிலுள்ள அத்தனை முஸ்லிம் மற்றும் யூத மதத்தவர்களையும் கொன்று புதைத்துவிட்டு, அவர்களைப் புதைத்த இடங்களிலெல்லாம் தேவாலயங்களை எழுப்பி அடையாளத்தை மறைத்துவிடும் வெறியில் அவர்கள் இருந்தார்கள் என்று சற்று மிகைப்படவே இதனைச் சித்திரிக்கிறார். அத்தனை மோசமாக மற்ற ஆசிரியர்கள் சொல்லாவிட்டாலும் அட்டூழியங்களைப் பற்றிக் கணக்கு வழக்கில்லாத புள்ளிவிவரங்கள் கிடைக்கவே செய்கின்றன.

அப்போது மத்திய ஆசியாவில் ஆட்சிப்பொறுப்பில் இருந்த கலீஃபாக்களின் திறமைக் குறைவும் இதற்கு ஓரெல்லை வரை காரணம். இதனை ஏற்கெனவே பார்த்திருக்கிறோம். முந்தைய நூற்றாண்டுகளில் எத்தனைக்கெத்தனை முஸ்லிம்களின் ஆட்சி வலு ஏறிக்கொண்டே இருந்ததோ, அத்தனைக்கு அத்தனை பத்தாம் நூற்றாண்டுக்குப் பிறகு பலமிழந்து கொண்டி இருந்தார்கள். வாரிசு அரசியல் இதன் முக்கியக் காரணம். சுல்தானுக்குப் பிறகு அவர் மகன் என்கிற ஏற்பாடு ரேஷன் கார்டுக்குப் பொருந்தலாமே தவிர, மாபெரும் சாம்ராஜ்ஜிய நிர்வாகத்துக்கு எப்போதும் உகந்ததல்ல. சுல்தான் திறமைசாலியாக இருந்தால் அவரது மகனும் அப்படியே இருப்பார் என்று கூறுவதற்கில்லை அல்லவா? தவிரவும் நெருக்கடி மிக்க நேரங்களில் இத்தகைய ஏற்பாடு, மிகுந்த அபத்தம் விளைவிப்பதாக மாறிவிடுவதையும் தவிர்க்க முடியாது.

இன்னொரு காரணம், சுயநலம். சொந்த தேசத்திலிருந்தே எத்தனை கொள்ளை அடிக்க முடியும் என்று ஆட்சியாளர்கள் கணக்கிட்டுப் பார்த்துக்கொண்டிருந்தது. வசூலிக்கப்படும் வரிகளைச் சில தனி நபர்களே பெரும்பாலும் பங்குபோட்டுக்கொள்ளும் வழக்கம் அன்றைய மத்திய ஆசியா முழுவதும் பரவலாக இருந்துவந்தது. இதனால் ராணுவம் போன்ற முக்கியத் துறைகளுக்கு உரிய பலம் சேர்ப்பதற்கான பணம் போய்ச் சேராமலேயே போய்விட்டது. சுல்தான்களைச் சுற்றி இருந்த காக்கைக்கூட்டம் மூன்றாவது முக்கியக் காரணம். இவர்கள் பெரும்பாலும் அமைச்சர்களாகவோ, பிராந்திய கவர்னர்களாகவோ, முக்கியத் தளபதிகளாகவோ இருந்தார்கள். பெரும்பாலும் சுல்தானை தலைநகரிலிருந்து கிளப்பி எங்காவது கோடை வாசஸ்தலத்துக்கோ, குளிர்வாசஸ்தலங்களுக்கோ அழைத்துப்போய் நிரந்தர போதையில் ஆழ்த்தி வைத்திருப்பார்கள். கச்சேரி, மது, கேளிக்கை என்று வாழ்க்கையை உல்லாசமாக அனுபவித்துக்கொண்டிருந்த சுல்தான்கள் யுத்தம் என்று வரும்போது இயல்பாக அச்சம் ஏற்பட்டு, வேறு யாரிடமாவது சிந்திக்கும் பொறுப்பைக் கொடுத்துவிடுவார்கள்.

போதாது?

சாம்ராஜ்ஜியம் அழியத் தொடங்கியது இதனால்தான். ஜெருசலேத்தைக் கைப்பற்றிய சிலுவைப்போர் வீரர்களை அடக்கி, அதன் ஆட்சியை மீண்டும் இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின்கீழ் கொண்டுவர, முஹம்மத் என்கிற ஒரு சுல்தான் கிடைத்தார் என்றால், அந்த வெற்றிக்கு வயது அவரது ஆயுட்காலம் வரை மட்டுமேதான். முஹம்மதின் மரணத்துக்குப் பிறகு மீண்டும் பழைய குருடி கதவைத் திறந்துவைத்து கிறிஸ்துவர்களுக்கே ஜெருசலேத்தை வழங்கினாள்.

சிலுவைப்போராளிகளிடம் ஒரு திட்டம் இருந்தது. நகரம் தங்கள் வசம் இருக்கும் காலத்தில் கூடியவரை இஸ்லாமிய மற்றும் யூத அடையாளச் சின்னங்களை அழித்து ஒழித்துவிடுவது. வழிபாடு நடக்கிறதோ இல்லையோ, ஜெருசலேம் எங்கும் கிறிஸ்துவ தேவாலயங்களை எழுப்பி நிறுத்திவிடுவது. காலத்தின் ஓட்டத்தில் நடந்தவையெல்லாம் மறந்துபோகக் கூடும். சாட்சிகளாக நிற்கும் தேவாலயங்கள் காலம் கடந்து நிற்கும். ஜெருசலேம், கிறிஸ்துவர்களின் பூமிதான் என்பதை அவையே எடுத்துச் சொல்லும். தேவாலயங்களின் அடியில் புதைந்த உயிர்களும் பிற மதங்களின் அடையாளச் சின்னங்களும் கூட அதற்கே மௌன சாட்சியாக வேண்டிய அவசியம் உண்டாகும்.

இந்தச் செயல்திட்டத்தின்படி அவர்கள் இயங்கினார்கள். ஒட்டுமொத்த ஐரோப்பாவும் திரண்டெழுந்து அவர்களுக்குப் பண உதவி செய்தது. எல்லாவற்றுக்கும் மேலாக போப்பாண்டவரின் ஆசீர்வாதம். வேறென்ன வேண்டும்? எப்படியும் ஒரு ஐம்பதாண்டு காலத்துக்குள் ஜெருசலேத்தை மையமாக வைத்து ஒரு பெரிய கிறிஸ்துவ சாம்ராஜ்ஜியத்தைக் கட்டி எழுப்பிவிடமுடியும் என்றே அவர்கள் நினைத்தார்கள். கி.பி. 1173 வரை இது தொடர்ந்தது.

அந்த வருடம் கலீஃபாவாக இருந்த நூருத்தின் மஹ்மூத் என்பவர் இறந்துபோனார். வழக்கப்படி அவரது வாரிசான மலீக்ஷா என்கிற சிறுவன் இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் சக்கரவர்த்தியாக ஆக்கப்பட்டான். சிறுவன் என்று சொல்வது கொஞ்சம் அதிகப்படி. சிறுவனுக்கும் இளைஞனுக்கும் இடைப்பட்டதொரு பொடியன் என்று வைத்துக்கொள்ளலாம். வயதோ, அனுபவமோ ஏதுமற்றவன். குமுஷ்டஜின் (Gumushtagein) என்றொரு குறுநில மன்னன், இவனுக்கு வழிகாட்டியாக உடனிருந்தான். குறுநிலத்துக்கு அவன் மன்னனே ஒழிய, சாம்ராஜ்ஜியத்துக்கு தளபதி மாதிரி. இளைஞனான கலீஃபாவை எப்போது ஒழித்துக்கட்டி, தான் சக்கரவர்த்தியாவது என்கிற கனவுடன் அதற்கான செயல்திட்டங்களைத் தீட்டிக்கொண்டிருந்தவன் அவன். 

அந்தச் சமயம் கலீஃபாவின் பிரதிநிதியாக எகிப்தை ஆண்டுகொண்டிருந்தவர் பெயர் சலாவுதீன். சரித்திரத்தில் எப்போதாவது உதிக்கும் சில நல்ல ஆத்மாக்களுள் ஒருவர். ஐயோ சாம்ராஜ்ஜியம் இப்படி நாசமாகிறதே என்கிற கவலை கொண்டவர். மத்திய அரசுக்கு விசுவாசமானவர். ஒரு முயற்சி செய்து பார்க்கலாம், தலைநகருக்குப் போய் கலீஃபாவைச் சந்தித்து நிலவரத்தை எடுத்துச் சொல்லி கிறிஸ்துவர்களுக்கு எதிரான யுத்தத்தை முடுக்கிவிடலாம் என்று நினைத்தார்.

சலாவுதீன் சுல்தானைச் சந்தித்துவிட்டால் தன்னுடைய அரிசி, பருப்புகள் வேகாமல் போய்விடுமே என்று அஞ்சிய குமுஷ்டஜின், அவர் புறப்பட்டு வரும் செய்தி கிடைத்ததும் சுல்தானைக் கிளப்பிக்கொண்டு வேறொரு இடத்துக்குப் போய்விட்டான். சலாவுதீன் விடாமல் சுல்தான் எங்கெல்லாம் அழைத்துப் போகப்படுகிறாரோ, அங்கெல்லாம் பயணம் மேற்கொண்டார். ஒரு கட்டத்தில் குமுஷ்டஜின்னுக்கு எதிராக யுத்தம் செய்யவும் தயாராகி, வெறுப்பில் தனியொரு மன்னனாகவே தாம் முடிசூட்டிக்கொண்டுவிடலாமா என்று யோசிக்கிற அளவுக்கே போனார் சலாவுதீன்.

இதற்கொரு காரணம் கூட இருந்தது. இந்த சலாவுதீன் ஒரு பெரிய வீரர். கலீஃபாவின் பிரதிநிதியாக எகிப்தை ஆண்டுகொண்டிருந்தவர் என்றபோதும், தமது சுயபலத்தால் லிபியாவின் ஒரு பகுதி, ஏமன், ஹிஹாஸ் போன்ற இடங்களை கிறிஸ்துவர்களிடமிருந்து வென்று இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தில் இணைத்திருந்தவர் அவர். பலவீனமான நான்கைந்து பகுதிகளை வெற்றி கொள்ள முடிந்த தன்னால், கவனம் குவித்தால் பலம் பொருந்திய ஜெருசலேத்தையும் வெல்லமுடியும் என்று நினைத்தார். ஜெருசலேம் கிறிஸ்துவர்கள் பிடியில் இருந்தது அவருக்குச் சகிக்க முடியாததாக இருந்தது. ஒரு மரியாதை கருதியே அவர் இதற்காக சக்கரவர்த்தியின் உத்தரவு கேட்டுப் போயிருந்தார். ஆனால் சக்கரவர்த்தி, இன்னொருவரின் கைப்பாவையாக இருந்ததால் வேறு வழியின்றி யுத்தத்துக்குத் தயாராகவேண்டியிருக்கும் என்று அறிவித்தார். நல்லவேளையாக அப்படியரு யுத்தம் ஏற்படவில்லை. பயந்துபோன கலீஃபா, உடனடியாக சலாவுதீனைத் தனியொரு சுல்தானாக அங்கீகரித்து (அதாவது, குறுநில மன்னர்) அவர் அப்போது ஆண்டுகொண்டிருந்த பகுதிகளை அவரே ஆளலாம், சக்கரவர்த்தியின் குறுக்கீடுகள் இருக்காது என்று சொல்லிவிட்டார். (இப்படியும் இஸ்லாமிய சாம்ராஜ்ஜியம் சிதறுண்டது வேறு விஷயம்!)

கி.பி. 1182-ம் ஆண்டு தமது பத்தொன்பதாவது வயதில் கலீஃபா மலீக்க்ஷா மரணமடைந்தார். அதுவரை சலாவுதீன் பொறுமை காத்திருந்தார். மலீக்ஷா மரணமடைந்துவிட்ட செய்தி கிடைத்ததுமே தமது படைகளைத் திரட்டிக்கொண்டு புறப்பட்டுவிட்டார். கிட்டத்தட்ட மத்திய ஆசியா முழுவதையும் கபளீகரம் செய்யத் தொடங்கியது அவரது ராணுவம். இன்னும் ஓரிரண்டு இடங்களைப் பிடித்துவிட்டால் அவர்தான் கலீஃபா என்கிற நிலை. ஏராளமான சிற்றரசர்களும் பிராந்திய கவர்னர்களும் சலாவுதீனுடன் போர் செய்ய விரும்பாமல், தாமே முன்வந்து அவருக்கு அடிபணிவதாக எழுதிக்கொடுத்துவிட்டுப் போனார்கள்.

சலாவுதீன் வீரர்தான். அதில் சந்தேகமில்லை. ஒட்டுமொத்த மத்திய ஆசியாவையும் கைப்பற்றுவதென்பதும் சாதாரண விஷயமில்லை. ஆனால் நமக்குத் தெரிந்த அலெக்சாண்டர் போலவோ, ஒளரங்கசீப் போலவோ மாவீரனாக இவரை சரித்திரம் ஓரிடத்திலும் சொல்லுவதில்லை. ஆனால், அன்றைய மத்திய ஆசியாவெங்கும் ஆண்டுகொண்டிருந்த மன்னர்களிடையே 'சலாவுதீன் அச்சம்' என்பது ஒரு தவிர்க்கமுடியாத நோயாகப் பரவியிருந்தது இதன் அடிப்படைக் காரணமாகிறது.  இதனடிப்படையில்தான் அவர் போகிற இடங்களெல்லாம் அவருக்கு அடிபணிந்தன.  சிரியா அப்போது கிறிஸ்துவர்களின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. மிகவும் கவனமாக சலாவுதீனின் வழியில் குறுக்கிடாமல் பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஆனாலும் ஓர் அசந்தர்ப்பமான சூழலில் அந்நாட்டு வழியே போன ஒரு முஸ்லிம் வர்த்தகக் குழுவை சிரிய ராணுவம் தாக்கிக் கொன்றுவிட, சலாவுதீன் சிரியா மீது படையெடுக்க முடிவு செய்தார்.

1187-ம் ஆண்டு அந்த யுத்தம் ஆரம்பமானது. டைபிரியஸ் (Tiberious) என்கிற இடத்தில் நடந்த யுத்தம். சிலுவைப்போர்களின் வரிசையில் மிகக் கொடூரமாக நடந்த யுத்தங்கள் என்று சில சொல்லப்படுவதுண்டு. அவற்றுள் ஒன்று இது. கிட்டத்தட்ட பத்தாயிரம் கிறிஸ்துவ வீரர்கள் இந்தப்போரில் இறந்துபோனார்கள். சலாவுதீனின் படை அதுவரை அடக்கிவைத்திருந்த ஆத்திரம் முழுவதையும் இந்த யுத்தத்தில் வெளிப்படுத்தியது. அவர்களுக்கு மிக நன்றாகத் தெரியும். சிரியாவுடன் தொடங்கும் இந்த யுத்தம் கண்டிப்பாக ஜெருசலேத்தில் போய்த்தான் முடியும்.

அப்படித்தான் ஆனது.

டால்மெய்ஸ், நப்லஸ், ரமல்லா, சீசர்லா, பெய்ரூத், ஜாஃபா உள்ளிட்ட அன்றைய சிரியாவின் பல நகரங்களைக் கைப்பற்றி முன்னேறிய முஸ்லிம்களின் படை, சரியாக ஜெருசலேத்தின் வாசலில் வந்து நின்றது. அன்றைக்கு ஜெருசலேத்தில் மொத்தம் அறுபதாயிரம் கிறிஸ்துவ ராணுவ வீரர்கள் இருந்தார்கள். பல்வேறு தேசங்களிலிருந்து ஜெருசலேம் வந்து வசிக்கத் தொடங்கியிருந்த கிறிஸ்துவர்களின் எண்ணிக்கையோ கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம். தவிர, சில பத்தாயிரம் உள்ளூர்வாசிகள். ஒரு யுத்தம் என்று ஆரம்பமானால் எப்படியும் லட்சக்கணக்கில்தான் உயிரிழப்பு இருக்கும் என்று திட்டவட்டமாகத் தெரிந்தது. ஒட்டுமொத்த முஸ்லிம் ராணுவமும் யுத்த உத்தரவுக்காகத் தினவெடுத்துக் காத்துக்கிடந்த அந்தக் கடைசிக்கணத்தில் சுல்தான் சலாவுதீன், யாருமே எதிர்பாராவிதமாக ஒரு காரியம் செய்தார். ஜெருசலேம் மக்களுக்கு அவர் ஓர் அறிவிப்பு வெளியிட்டார்.

“அன்புக்குரிய ஜெருசலேம் நகரின் பெருமக்களே! ஜெருசலேம் ஒரு புனிதபூமி என்பதை உங்களைப் போலவே நானும் அறிவேன். ஒரு யுத்தத்தின் மூலம் அந்த மண்ணில் ரத்தம் சிந்தப்படுவதை நான் விரும்பவில்லை. நீங்களாக விரும்பி கோட்டையை ஒப்படைத்துவிடும்படி கேட்டுக்கொள்கிறேன். அப்படிச் செய்வீர்களானால், என் மொத்த சொத்தில் ஒரு பகுதியையும் நீங்கள் சாகுபடி செய்வதற்குத் தேவையான நிலத்தையும் நான் உங்களுக்கு அளித்துவிட்டு வந்த வழியே போய்விடுவேன். யுத்தம்தான் தீர்வு என்று நீங்கள் முடிவு செய்வீர்களானால், விளைவுகளுக்கான பொறுப்பு என்னுடையதல்ல என்பதை இப்போதே தெரிவித்துவிடுகிறேன்.’’

மிரட்டல் அல்ல. திமிரும் அல்ல. உண்மையிலேயே சலாவுதீன் ஜெருசலேத்தில் ரத்தம் சிந்தக்கூடாது என்று விரும்பியிருக்கிறார்! அதே சமயம், ஜெருசலேத்தைக் கைப்பற்றியே தீருவது என்பதிலும் உறுதியாக இருந்திருக்கிறார். அதனால்தான் அப்படியரு அறிவிப்பைச் செய்தார். ஜெருசலேம் மக்கள் யோசிக்கத் தொடங்கினார்கள். அவர்களது யோசனைப்பாதைக்கு நேரெதிரான பாதையில் சிலுவைப்போர் வீரர்களும் யோசிக்க ஆரம்பித்தார்கள்.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 24 பெப்ரவரி, 2005

No comments:

Post a Comment