Pages

Monday, December 17, 2012

நிலமெல்லாம் ரத்தம் - 11


11] கிருஸ்துவத்தின் வளர்ச்சி



11 கி.பி. நான்காம் நூற்றாண்டைப் பிரதிநிதித்துவப் படுத்தும்விதமாக ஒரே ஒரு விஷயத்தைக் குறிப்பிடவேண்டும் என்றால், ஒட்டுமொத்த சரித்திர ஆசிரியர்களும் சுட்டிக்காட்டுவது, கிறிஸ்துவத்தின் பரவலைத்தான். இயேசுவின் மரணத்தை அடுத்து ஆரம்பமான இயக்கம் அது. இன்றுவரையிலும் தொடர்ந்துகொண்டிருக்கும் ஒரு நடவடிக்கையே என்றபோதும், நான்காம் நூற்றாண்டில் அதன் வீச்சு, கற்பனைக்கு அப்பாற்பட்டதாக இருந்தது.மத்தியக் கிழக்கிலும் ஐரோப்பாவிலும் நன்கு பரவி, வேரூன்ற ஆரம்பித்துவிட்டிருந்தது அது. கான்ஸ்டன்டைனை அடுத்து வந்த ரோமானிய ஆட்சியாளர்களும் கிறிஸ்துவத்தின் வளர்ச்சிக்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருந்ததால், கிறிஸ்துவர்கள் ஒரு பொற்காலத்துக்குள் நுழைகிற உணர்வில் திளைத்திருந்தார்கள்.இந்நிலையில் பாலஸ்தீன நிலப்பரப்பில் வாழ்ந்துகொண்டிருந்த கிறிஸ்துவர்கள், ஜெருசலேமையும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளையும் முழுவதுமாக கிறிஸ்துவ பூமியாகக் காட்டும் முடிவில், கண்ணில் பட்ட இடங்களிலெல்லாம் தங்கள் தேவாலயங்களை எழுப்ப ஆரம்பித்தார்கள். இதனால், ஒருபக்கம் ரோமானியச் சக்கரவர்த்தியையும் சந்தோஷப்படுத்திய மாதிரி ஆகும்; இன்னொரு பக்கம், புனித பூமியான ஜெருசலேமும் கிறிஸ்துவர்களின் நகரமாகவே காலப்போக்கில் அங்கீகரிக்கப்பட்டுவிடும். பெரும்பாலான யூதர்கள் ஜெருசலேமின் சுற்றுப்புறங்களிலிருந்து வெளியேறிவிட்ட நிலையில் இதற்குப் பெரிய தடைகளும் வராது என்று அவர்கள் கருதினார்கள்.இப்படி ஜெருசலேமிலும் சுற்றுப்புற நகரங்களிலும் பெரிய பெரிய தேவாலயங்களை எழுப்பிய கிறிஸ்துவர்கள், அப்போது கிறிஸ்துவம் நன்கு பரவியிருந்த ஐரோப்பிய நாடுகளிலிருந்து குறிப்பாக கிரீஸ், இத்தாலி, பால்கன் தீபகற்பம் யாத்ரீகர்கள் பலரை ஜெருசலேமுக்கு வரவழைக்கவும் ஏற்பாடுகள் செய்தார்கள். மேலை நாட்டு யாத்ரீகர்கள், இயேசுவின் பூமிக்கு வந்து தரிசித்துவிட்டு, திரும்பிச்சென்று தங்கள் நாட்டில் கிறிஸ்துவத்தை மேலும் பரப்ப வேண்டுமென்பதே அவர்களின் விருப்பமாக இருந்தது. அப்படி வருகிற மேலை யாத்ரீகர்களுள் சிலரை நிரந்தரமாகவே ஜெருசலேமில் தங்கவைத்து, அவர்களைக் கொண்டும் உள்ளூரில் கிறிஸ்துவத்தைப் பரப்ப முடிவு செய்தார்கள். அதாவது, "நமது மண்ணின் பெருமையை, அயல்நாட்டுக்காரர்களே உணர்ந்திருக்கிறார்கள் பார், நீ இன்னும் உணரவில்லையா?" என்று பாலஸ்தீனத்து யூதர்களையும் அரேபியர்களையும் பார்த்து மறைமுகமாகக் கேட்பது.இந்த முயற்சியில், பாலஸ்தீனக் கிறிஸ்துவர்களுக்குக் கணிசமான வெற்றி கிடைத்தது என்றே சொல்லவேண்டும். ஏராளமான அரேபியர்களையும் அதிகபட்சம் சுமார் ஆயிரம் யூதர்களையும் அவர்கள் அப்போது கிறிஸ்துவர்களாக மாற்றிக்காட்டினார்கள்.நான்காம் நூற்றாண்டின் இறுதியில் (கி.பி. 375-395) ரோமை ஆண்ட மன்னன் தியோடோசியஸ் (Theodosius 1) ஒரு சட்டமே பிறப்பித்தான். ரோமானிய சாம்ராஜ்ஜியத்தில் கிறிஸ்துவத்தைத் தவிர, வேறு எந்த மதத்துக்கும் அனுமதியே கிடையாது!இதன் தொடர்ச்சியாக, அடுத்து வந்த புதிய நூற்றாண்டின் தொடக்கத்தில் சில கிறிஸ்துவத் துறவிகள் பாலஸ்தீனில் இருந்த யூத தேவாலயங்களை (யூதக் கோயில்களுக்கு Synagogues என்று பெயர்.) இடிக்க ஆரம்பித்தார்கள். சிரியாவின் வடக்குப் பகுதியிலிருந்து வந்த பார் ஸெளமா (Bar Sauma) என்கிற ஒரு கிறிஸ்துவப் பாதிரியார் ஜெருசலேமின் சுற்றுப்புறங்களிலிருந்த ஏராளமான யூத தேவாலயங்களை இடித்ததாக யூத சரித்திர ஆசிரியர்கள் பலர் குறிப்பிடுகிறார்கள்.இடிக்கப்பட்ட தேவாலயங்களை மீண்டும் கட்டுவது, மீண்டும் அவை இடிக்கப்படுவது என்று இது ஒரு தொடர் நடவடிக்கையாக இருந்துவந்திருக்கிறது. கி.பி. 614-ல் யூதர்கள் சற்று நிம்மதிப் பெருமூச்சு விடும்விதமாக ஒரு சம்பவம் நடந்தது.அப்போது ரோமானியர்களுக்கு எதிராக யுத்தம் செய்ய பெர்சிய ராணுவமொன்று கிளம்பி, ஜெருசலேமை நோக்கி வந்துகொண்டிருந்தது. பாலஸ்தீன யூதர்கள், இதனை ஒரு வாய்ப்பாகக் கருதி அவர்களுடன் பேசினார்கள். ஒப்பந்தம் என்னவென்றால், ஜெருசலேமை பெர்சிய ராணுவம் வெற்றிகொள்ள, பாலஸ்தீன யூதர்கள் உதவுவார்கள். பதிலாக, ஜெருசலேமில் பெர்சியாவுக்குக் கட்டுப்பட்டதொரு யூத அரசு அமைய அவர்கள் உதவவேண்டும்.இந்தத் திட்டம் வெற்றிகரமாக நடந்தேறியது. கி.பி. 614-ல் நடந்த யுத்தத்தில் பெர்சிய ராணுவத்துடன் பாலஸ்தீன யூதர்களும் இணைந்து, ரோமானிய ஆட்சியாளரை எதிர்த்துப் போரிட்டார்கள். இறுதி வெற்றியும் யூதர்களுக்கே கிடைத்தது. பெர்சியத் தளபதி கொடுத்த வாக்குப்படி நெஹேமியா பென் ஹுஸெய்ல் (Nehemiah ben Husheil) என்கிற யூத இனத் தலைவர் ஒருவரை ஜெருசலேமின் மன்னனாக அமர்த்திவிட்டு ஊர் போய்ச் சேர்ந்தார்.நீண்ட நெடுநாட்களுக்குப் பிறகு சுதந்திர யூத அரசு! யூதர்களால் முதலில் நம்பவே முடியவில்லை. சந்தோஷத்தில் என்ன செய்வதென்றே புரியாமல், நாட்டில் இருந்த அத்தனை கிறிஸ்துவர்களையும் அவர்கள் துரத்தித் துரத்தி விரட்ட ஆரம்பித்தார்கள். பாலஸ்தீனின் எல்லை வரை ஓடஓட விரட்டிவிட்டே திரும்பி வந்தார்கள். அங்கிருந்த அத்தனை கிறிஸ்துவ தேவாலயங்களும் உடனடியாக இழுத்துப் பூட்டப்பட்டன. இஸ்ரேலில் ஒரு கிறிஸ்துவரும் இருக்கக்கூடாது என்று கோஷம் செய்தார்கள். கொண்டாடினார்கள். குதித்துக் கும்மாளமிட்டார்கள்.இதெல்லாம் மூன்றாண்டுகள் வரைதான். யூதர்களுக்காக கிறிஸ்துவர்களைப் பகைத்துக்கொள்வது எதிர்காலத்துக்கு நல்லதல்ல என்று பெர்சிய மன்னர் முடிவு செய்துவிட்டார். மேலும், இஸ்ரேல் விஷயத்தில் மட்டும் தலையிடாமல் இருந்தால் ரோமானியப் பேரரசால் எந்தப் பெரிய தொல்லையும் எக்காலத்திலும் வராது என்றும் அவர்களுக்குத் தோன்றியது. ஆகவே, அரசியல் ராஜதந்திரம் என்கிற ரீதியில், பாலஸ்தீன யூதர்களுக்குத் தாங்கள் அளித்து வந்த ஆதரவை விலக்கிக்கொண்டுவிடுவது என்று முடிவு செய்துவிட்டார்கள்.இதெல்லாம் ஒரு பெரிய காரியமா? மீண்டும் ஒரு படையெடுப்பு. ஒரு யுத்தம். தாங்கள் பதவியில் அமர்த்திவிட்டு வந்த அதே யூத மன்னன் நெஹேமியா பென் ஹுஸெய்லைக் கொன்றுவிட்டு, கிறிஸ்துவர்களுக்கே தங்கள் ஆதரவு என்று சொல்லிவிட்டு வந்துவிட்டது பெர்சிய ராணுவம்.அடுத்த ஐந்தாண்டு காலத்துக்கு பாலஸ்தீன மண், பெர்சியர்களின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது. யூதர்கள் மீண்டும் தங்கள் பழைய கஷ்டங்களை அனுபவிக்கப் பணிக்கப்பட்டார்கள். வழிபடக்கூடாது; மதப்பள்ளிக்கூடங்களை நடத்தக்கூடாது; மத போதனைகள் கூடாது; கிறிஸ்துவத்துக்கு எதிரான நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளக்கூடாது. இஷ்டமிருந்தால் பாலஸ்தீனில் வாழலாம்; இல்லாவிட்டால் வேறெங்காவது கிளம்பிப் போக எந்த ஆட்சேபணையும் இல்லை.இந்தச் சமயத்திலும் பல யூதர்கள் தேசத்தை விட்டு வெளியேறினார்கள். ஒழுங்காக ரோமானியச் சக்ரவர்த்தியிடமே கோரிக்கை வைத்து, தமது மதக்கடமைகளை நிறைவேற்றிக்கொள்ள அனுமதி கோரியிருக்கலாம். தாமதமானாலும் நிச்சயம் கிடைத்திருக்கும். இப்படி அவர்களையும் பகைத்து கொண்டு விட்டோமே என்று வருந்தினார்கள். கிறிஸ்துவர்களுடனேயேகூட சமரசமாக நடந்துகொண்டிருக்க முடியும். சம்பந்தமில்லாமல் ஒரு மூன்றாம் தரப்பினரை நம்பி மோசம் போய்விட்ட வருத்தம் அவர்களுக்குப் பல்லாண்டுகாலம் தொடர்ந்து இருந்துவந்தது.ஆனால், வருந்திப் பயனில்லை. ஹெராக்ளிடஸ் (Heraclitus) என்கிற ரோமானிய மன்னன் பாலஸ்தீன் மீது மீண்டும் படையெடுத்து வந்தான். மிகக் கடுமையான யுத்தம். இறுதியில் மீண்டும் பாலஸ்தீன் ரோமானிய ஆட்சிக்குள் வந்தது. அங்கு மிச்சமிருந்த கொஞ்ச நஞ்ச யூதர்களையும் துடைத்து நாடு கடத்தினார்கள். மன்னிப்புக் கேட்டுக்கொண்டு, கிறிஸ்துவத்தை ஏற்கச் சம்மதித்த சில யூதர்கள் மட்டுமே இஸ்ரேலில் வாழ அனுமதிக்கப்பட்டார்கள். அப்படி அனுமதி பெற்று, பிறகு முரண்டு பிடித்தவர்களையெல்லாம் கணக்கு வழக்கில்லாமல் கழுவில் ஏற்றினார்கள். (நூற்றுக்கணக்கானோரை வலுக்கட்டாயமாக கிறிஸ்துவத்துக்கு மாற்றியதாகவும் சில குறிப்புகள் இருக்கின்றன.)தொடர்ந்து அவல வாழ்வைத்தான் வாழவேண்டும் என்று இருந்த தம் விதியை நினைத்து யூதர்கள் வருந்தினார்கள். அதுவும் இம்முறை ரோமானியப் படையெடுப்புக்குப் பிறகு சிவில் அரசல்ல; ஒரு ராணுவ அரசாகவே அங்கே ஆட்சி அமைக்கப்பட்டது. கிறிஸ்துவ ராணுவம். ரோமானியச் சக்ரவர்த்தியின் பிரதிநிதியாக பாலஸ்தீனை ஆள நியமிக்கப்பட்டவர், சக்ரவர்த்தியின் மந்திரிப் பிரதானிகளுள் ஒருவரல்லர். ராணுவத் தளபதிகளுள் ஒருவர். இன்னும் எத்தனை காலம் இந்தப் போராட்டமோ என்று ஒவ்வொரு இஸ்ரேலிய யூதரும் மனத்துக்குள் அழுதார்கள்.உண்மையில், யூதர்கள் அப்போது ரோமானிய ஆட்சியை நினைத்துக் கலங்கியிருக்கவே வேண்டாம். கிறிஸ்துவர்களுடனான அவர்களது உரசல்கள் எல்லாமும் கூட அர்த்தமே இல்லாதவையாக ஆகிப்போகும் காலம் வெகுசீக்கிரம் வரவிருப்பதை அப்போது அவர்கள் உணரவில்லை.யூதர்களாகவும் இல்லாமல், கிறிஸ்துவர்களாகவும் இல்லாமல் பாலஸ்தீனமண்ணின் பழங்குடி இனத்தவர்கள் என்கிற ஒரே அடையாளமுடன் எவ்வித கலாசார வளர்ச்சியும் அற்று, வெறும் மனிதர்களாக வாழ்ந்துகொண்டிருந்த அரேபியர்களின் வாழ்க்கையில் அப்போதுதான் முதல்முறையாக ஒரு மலர்ச்சி ஏற்பட்டது. ரோமானியர்கள் ஆண்டாலும், கிரேக்கர்கள் ஆண்டாலும், வேறு யார் ஆண்டாலும் அதுவரை அவர்கள் வெறும் சுண்டைக்காயாகவே இருந்தார்கள். ஆள்பவர்கள் அவர்களைப் பொருட்படுத்தமாட்டார்கள். யூதர்கள் அவர்களைக் கண்டுகொள்ளமாட்டார்கள். கிறிஸ்துவர்களோ, மதம் மாற்றமுடியுமா என்கிற நோக்கில் மட்டுமே அவர்களைப் பார்ப்பார்கள். இத்தனைக்கும் அவர்கள்தாம் அங்கே பெரும்பான்மை மக்கள்!யூதமதமும் கிறிஸ்துவ மதமும் பண்பட்ட மதங்கள் என்றும், சிறு தெய்வ வழிபாடுகளில் மூழ்கியிருந்த அரேபியர்களின் நம்பிக்கைகள் எதுவுமே பொருட்படுத்தத்தக்கவையல்ல என்றும் ஒரு கருத்து அங்கே ஆழமாக வேரூன்றியிருந்தது.அரேபிய மண்ணின் ஆதிவாசிகளான அவர்களுக்குக் கல்வி கூடக் கிடையாது. உழைப்பது, சாப்பிடுவது, சந்ததி பெருக்குவது என்கிற மூன்று காரியங்கள் தவிர, வேறு எதற்குமே லாயக்கற்றவர்கள் என்று கருதப்பட்டார்கள். அப்படிப்பட்ட இனத்தில் முதல் முதலாக ஓர் எழுச்சி கி.பி. ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏற்பட்டது.எழுச்சி என்றால், வெறும் சொல்லில் அடங்கிவிடக்கூடிய எழுச்சியல்ல அது. உலக சரித்திரத்தில் வேறு எங்கும், எப்போதும், எந்தக் காலத்திலும் இன்றுவரையிலும் கூட அதற்கு நிகரான எழுச்சி நடந்ததில்லை. ஒட்டுமொத்த அரேபியர்களின் வாழ்க்கையையும் புரட்டிப்போட்ட எழுச்சி அது.அது கி.பி. 622-ம் வருடம், செப்டம்பர் மாதம் 27-ம் தேதி, திங்கட்கிழமை. ஒரு மனிதர், ஓர் ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு இடம் பெயர்ந்தார்.அவ்வளவுதான். ஒட்டுமொத்த அரேபியர்களும் மதம் பெயர்வதற்குத் தயாராகிவிட்டார்கள்.அவர் பெயர் முகம்மது. இயேசுவுக்குப் பிறகு இறைவன் அனுப்பியதாக நம்பப்படும் இறைத்தூதர் (நபி) இறுதித் தூதரும் அவரேதான்.


நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 30 டிசம்பர், 2004

No comments:

Post a Comment